நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

வியாழன், 26 மார்ச், 2015

கல்லூரி நாள் விழா 20/03/15

“கவிஞர் அபியின் மந்திரக்கவிதைகள்”

(தமிழ்ப் பொழில் --- மாத இதழில் வெளிவந்த கட்டுரை)


“கவிஞர் அபியின் மந்திரக்கவிதைகள்”
                      -செ.சு.நா.சந்திரசேகரன்.

உணர்வுகளை மெல்லவருடி அதை அப்படியே பிண்டமாய் தந்துவிடுவது கவிதையின் தன்மை. பிண்டத்திற்கு உருவமைத்து உலாவிடுவது நம்  கையில்தான் உள்ளது. தனிமையை சமூகம் வெகுகாலமாய் அனுபவம் செய்திருக்கின்றது. அதைப் பதிவு செய்ய அது தவறிருக்கலாம் “அபி” எனும் ‘மௌனத்தின் பிரச்சாரகன்’ அதைப்பதிவு செய்திருக்கின்றார். தனிமையின் விஷம் எனக்குப் பழக்கமாகி விட்டதெனக் காட்சியைத் தெளிவாக்க அவரால் மட்டுமே முடிகின்றது.

எழுத்துக்களுக்கு மீறிய உணர்வுகளை அப்படியே உணரத் தந்துவிடுவதன்றி அதை விவரிக்கும் முகமாக விவாதிக்வோ, நிறுபிக்கவோ, எடுத்துக்காட்டவோ, முயல நினைத்ததில்லை. கவிதைக்கென பிறரால் கையாளப்பெறும் வடிவங்களையோ மிதமிஞ்சிய அழகுகளையோ ஆடையாக அணிவிக்கவில்லை. பெற்ற குழந்தையின் சிரிப்பை நுன்மையாய் இரசிக்கும் தாயின் உணர்வே கவிதை வெளிப்பாட்டில் தெரிகிறது. “புதிய பார்வை”யில் வெளிவந்த “அவன்” எனும் கவிதையில்,
‘தெளிவு’ என்பதன் பொருள் விளக்க நிலையாக,
   “வார்த்தைகள் வழங்குவதையெல்லாம்
    மறுத்துக் கொண்டேயிருந்து
    கடைசியில்
    எந்தச்சுரங்கத்திலும் நுழையாமல்
    இருந்த இடத்தில்
    திரும்பவே நேர்ந்தது
    வார்த்தைகள் இப்போது
    கற்படிவங்களாய் கிடந்தன”

என்று கவிதைகளுக்கு நடுவே சென்று திரும்பும் இருவழிப்பாதையையும் கவிதையின் உள்ளீடு குறித்தும் வெளிப்படுத்தியுள்ளார். அனுபவத்தைத் தாண்டிச் சென்று அதனுள் பிரண்டு, மூழ்கி, நீந்தி உணர்வுகளின் தெரியப்படாத உருவங்களைத் தொட்டுப்பார்த்துச் சுவடுகளாய் பதிந்து கிடக்கும் வார்த்தைகள் முழுங்கிவிடும் உள் அனுபவப் பிரதிபலிப்பே கவிதைகளாக உள்ளன.

அகச்சலனமிலாத மனிதனும் உயிரினங்களும் இல்லையென்பது அறிவியல். அச்சலனத்தைப் பாடுபொருளாக்கித் தனிமையுணர்வோடு ஆன்மீகச் சாயலையும் உள்தெளிந்து, “இல்லாமையிலிருந்து தோற்றங்களைப் பெற்று” உலவ விடுவது கவிப்பாதையின் புதிய சுவடுகள்.

சோவியத் கவிஞன் ‘மயாகோவஸ்கி’யின் கவிதைகள் குறித்தானச் செறிவுமிக்க கட்டுரைக்கு இணையாகப் ‘படைத்தல்’ எனும் கட்டுரை விளங்குகிறது. படைப்பானது பல்வேறு உணர்வாளர்களிடம் பல்வேறு புரிதல்களுடன் எடுத்துச் சொல்வதுதான் உண்மை. கவிதை ஒரு அனுபவத்தூண்டல் மட்டுமே. படைப்பாளிகளின் ஒட்டுமொத்த அடிநிலைப்பாங்கையும் வாசகன் பெற்றுவிட எத்தனிப்பதுதான் கவிதையின் வெற்றி என்பது மாயையே. எழுத்தாளனுக்கும், எழுத்துக்கும் வாசகனுக்கும் இடையிலான முப்பரிமாணக் கூட்டு முயற்சியை இதைவிட யாரும் இதற்குமேல் இலக்கணம் வகுத்துவிட முடியாது. பல்வேறு கவிதைகள் ஒரு கருத்தை முன்வைக்கின்றன. தெளிவோடு இருந்தலென்பது சாயங்கராகவே இருப்பதாகப்படுகிறது. சாயம் வெளுக்கவும் அச்சாக இல்லாதிருக்கவும் தெளிவற்ற பாங்கோடு இருப்பதே சுகமாக இருக்கும். ‘தெளிவைத்தேடி பிடிவாதம் ஏறி பாமரப்பயிற்சிகளால்களைத்துப் போய் விடுதல்’ என்பது வாழ்க்கையாகிறது. யாருமற்ற சாயலும் சுயமும் தேடும் யாருக்குத்தான் தெளிவு கிடைத்திருக்கிறது? ஒவ்வொருவரும் அவரவருக்கென்று அவருக்குள் எதையோ பிறப்பித்துக் கொண்டு ‘இதுதான் நான்’ என்று கூறுவதல்லாமல் நானிருக்கின்றேன் என்ற தெளிவை ‘ஏற்பாடு’ கவிதை உணர்த்துகின்றது.

உலாவி வருவனயாகவும் உண்மையல்ல என்று மவுனம் சாதிப்பதும், வாழ்வைச் சாவினின்றிப் பிரித்துப் பாதுத்தும் நிகழ்ச்சியினூடே சலனமற்று இருந்தும், எதற்கும் வசப்படாதிருக்கும் அறியாமையை உணர்த்தும் உண்மைநிலை காணவேண்டும் என்று ஆன்மீகத் தடத்திலிருந்து வரும் புதிய கோணங்களாகவும் கவிதைகள் அமைத்து சிறப்பிக்கின்றன. தத்துவார்த்த கவிதைகளோ என எண்ணத் தோன்றும் பிரபஞ்ச ஞானக் கவிதைகளுக்கு எடுத்துக்காட்டாய்,

“பிரக்ஞையில்
அறா விழிப்பு
இரவிலிநெடு யுகம்
இடந்தொலைந்த ஆழ்வெளி
சிறையிருப்பது
காலமும் தான்
----------------------------


தன்நீள்சதுர உருவம்
மங்க மங்க
நழுவப்
பெரிதும் துடிக்கலாம்”  (காலம்-அந்தரநடை)

எனும் கவிதையை கூறலாம். இருத்தலிசக் கவிதையை போல பல கவிதைகள் இனம் காட்டப் பெற்றிருக்கின்றன. தனிமனிதனின் அனுபவங்களும் உணர்வுகளும் மட்டுமே பாடு பொருளாகாது உலகப் பொதுமைக்குமுள்ள அவ்வுணர்ச்சிகளை  படையலாக்கித்; தருவதுதான் சிறந்த தன்னுணர்ச்சிப் பாடலாகும். அதைக் கவிதைத் தொகுதிகள் முழுமைக்கும் காண முடிகின்றது. ‘ஜோசப்பிராட்ஸ்கி’யின் உள்முகக் கவிதைக் கட்டுரைகளும், வர்சீனியா உல்ஃப், வான்கோக் போன்றறோர்களின் ஆன்மதரிசனக் கட்டுரைகளும் கலந்ததான கலவைத் தொகுதி எப்படியானதோ அதைப் போன்றது இவைகள்.

கலைக் காட்சித் தன்மை அல்லது படிமவடிவம் (ஊழnஉசநவநௌள யனெ iஅயபளைவ கழசஅ) கொண்ட கவிதையாக

“வாசற்படியில்
வாயில் விரலுடன்
நின்றது குழந்தை
வீடும் வாய் திறந்து
குழந்தையை விரலாய்ச்
சப்பி நின்றது”     (வயது-அந்தரநடை)

எனும் கவிதை காணப்படுகின்றது. கவிதைகளின் இடைஇடையே பல இலக்கிய வகைகளையும் கண்டு கொள்ள முடிகின்றது. ஹைக்கூ கவிதைகளின் அம்சத்தைத் தனக்குள் கொண்ட பல கவிதைகள் உள்ளன. உதாரணமாக

“எதிர் எதிர்
தன்னைத் தான் முட்டிக் கொண்டு
காற்று”

என்ற இக்கவிதையைக் கூறலாம். கவிதைகளில் ‘எங்கிருந்தோ, எங்கா, சூன்யம், இருள், ஆன்மா, பிரபஞ்சம், அனுபவம் எனச் சொற்கள் மிகுதியாகக் கையாளப் பெறுவதற்குக் காரணம் ஆசிரியருக்கு இச்சொற்களிலுள்ள இலயிப்பும், இச்சொற்கள் தரும் ஆழமான பொருள் விளக்க வெளிப்பாடுமாக இருக்கலாம். இச்சொற்களை ‘அபியின் மந்திரச் சொற்கள்’ எனலாம்.

‘ஒரு படைப்பாளியின் அகஉலகின் அலாதியான கூறுகளுக்கெல்லாம் இடமளிக்கும் வடிவமாகக் கவிதை இருந்தாலும் கூடவே அது பல சிக்கலான சவால்களையும் முன்வைக்கக் கூடியது’ என்ற வாதத்திற்கு அப்பாற்பட்டு வாசகமனத்திற்குத் தளமாற்றமாவதில் இக்கவிதைகள் வெற்றியடைந்திருக்கின்றன. பொருளும், அனுபவமும் உள்ளத்தில் வளையம் வளையமாக, கரும்புகைக்கு நடுவிலுள்ள வண்ணக்கலவையாகப் பதியமிடப்பட்டிருக்கின்றன. கவிதையெனும் வசீகரத்தில் மௌனத்தின் பிரச்சாரங்கள் உலா வரும்போது எழுவகைப் பெண்டிரானப் பிறதுறைக் கவிஞர்களும் காதலிக்காமல் இருக்க முடியுமா என்ன?

திருகிய-மனப்போக்குகளை, செயல்முறையிலும் சற்று சுழற்சியாகவே நடையிலும் ஒரு சிக்கல் தொனிக்க பேச்சு நிலைக்கும் முந்தின ஒரு மனவோட்டத்தை அதாவது பிரக்ஞை நிலைக்குப் பிந்தியும், திட்டவட்டமான நினைப்பாக சொல் உருவத்திற்குள் அடைப்படுவதற்கு முந்தியும் உள்ள உணர்வு நிலையை எடுத்துக் கொண்டு அதிலே கதாபாத்திரங்களின் அறிவு உணர்ச்சிப் பரிமாறுதல்களை, மோதல்களை, போராட்டங்களை சித்தரிப்பர்.




‘எழுத்து அனுபவங்கள்’ எனும் கட்டுரையில் சி.சு.செல்லப்பா அவர்கள் ‘லா.ச.ரா’வின் படைப்புக் குறித்து மேல் குறிப்பைக் கொடுத்திருக்கின்றார். இக்குறிப்பே அபியின் கவிதைப் பாதையாகவும் எனக்குத் தெரிகிறது. புதுமைப் புகுத்திய லா.ச.ராவும் அபியும், அந்தந்தத் துறையில் ‘பிதாமகராக’ இருக்கின்றார்கள்.
 
                  ¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

 தமிழ்ப் பொழில் மாத இதழ் ஜீலை-2001 பக்-548-553
       
   
 
 

புதன், 9 ஜூலை, 2014

பிரவாகம் (கவிதை)

பிரவாகம்

மண்டையின் 
உள்கருகி
காது  வழி   வீரியத்துடன்
புகையாய்   சென்ற   நீயா
வானத்தில்    மேகமாய்  அலைவது?


 தேகத்தின்
செதிலொன்று   கழன்று
மீறிப் போய்த்    திரிந்து
உரு மாறிப்போன   நீயா
காற்றாய் உலகில் கடப்பது?

தூக்கச்   சுணங்கில்
வாய்வழிச்   சிந்திய
கொடு   பிரவாகமெடுத்து
பறவைச்  சிறகெடுத்த  நேரத்தில்
பனியாகிப் போன நீயா
வாழ்விக்கும் நீராய் இருப்பது?

வெளி உள்ளானது 
சித்தன் சொன்னது

உள் உள்ளுக்குள்
தீராது 
பயணத்தில்
முழ்கி சூன்யத்தைத்
தன் பெயராக்கி நின்றது.


நன்றி 
முத்துக்கமலம்.காம் 

வீட்டு நாய்


அந்த வீட்டில் செல்லமாய் 
ஒரு நாய்க்குட்டி வளர்ந்தது .
மனிதருக்கும் மனிதருக்குமான 
எல்லாம் போய் 
ஆறுகள் ஐந்தைக் கட்டித் 
தழுவிக் கொண்டன.

கட்டியவனைக் காட்டிலும் 
கட்டிக்கிடந்ததிற்க்கு ஏக உபச்சாரம்.

உணவுக்கான மெனு என்ன 
தனி சோப்பு என்ன 
விரிப்பு என்ன 
மாதந்தவறாத ஊசி என்ன 
கவனிப்பு சொல்லி மாளாது.

அதன் உலகைத் தாண்டிச் சந்தோசமாய் 
எப்படி உம்மோடு அது காலம் தள்ளும் .
கூட்டம் தவிர்த்து 
உறவு தவிர்த்து 
குஷி தவிர்த்து 
இன்னும் எத்தனை துறந்து 
இன்னும் எத்தனை தூறம் 
உன்னோடு அது வாழ வேண்டும்.

உண்மையில் 
அதற்குப் பேச முடியுமானால் 
என்னவெல்லாம் 
உம்மிடம் அது  கேட்க நினைக்கும் .

ஒரு தனித் தீவில் 
காட்டு யானைகள் 
உன்னைக் கட்டிப் போட்டுப் 
பாசம் காட்டுகின்றன.
நீ யார் எனப் புரிந்து கொள்கிறாய்
காட்டுநார்கள் பிய்த்து எதிர்ந்து 
ஓடி ஓடிக் 
களைப்பாறும் நாளில்  
நாயாக நீ மாறி 
மனிதனாக அது மாறி  

நாய்களை விட்டு விடுங்கள் 
அது அதுகளோடு அதுவாகவே 
இருந்து விட்டுப் போகட்டும்.








நன்றி 
முத்துக்கமலம்.காம் 

வியாழன், 6 ஜூன், 2013

மூளைத் தொழில்

மூளைத் தொழில்


கூறெனப் பாய்ந்து
வானத்தில் ஏறும் வல்லூறுகளின் பார்வையில்
பூமி சிறிதானது.

பெய்த சிறுநீர்  பகீரதன்
வரவழைத்த புனித நதியெனப்
 பிரவாகமெடுக்கின்றன.

பிடரி சிலிர்த்த குதிரைகள்
கோவேறு கழுதையாய் மாறி
தொண்டை கணைத்துப் பேப்பர் தேடி ஓய்ந்தது.
கம்பெடுத்தவன் தண்டல்காரன்.

திசையெங்கும் அவள்
அரிதாரம்.
கற்றவை மறந்து தேடி அலைகிறாள்
சிவப்புத் தாமரை சரஸ்வதி.
படிச்சிப் படிச்சி நீர்த்தாள்.
சிவப்புப்புழுக்கள் உண்டு நெளியும்
மூளைக்காரனிடம்.

கடலுக்குள் நிசப்தமென
அறிவுலகம் துகில் கொள்கிறது.
         
               பாரதிசந்திரன்   திரு நின்றவூர்.

பிச்சைத் தாய்

பிச்சைத் தாய்

கோயில் வாசலில் கேட்ட 
வித வித பிச்சை ஒலிகள் 
நெஞ்சை கழற்றித் தூரப்போட்டன .
தோள் சுருங்கிய தாயின் குரல் 
உள் நுழைந்து 
பின்புலப் படமுடன் கதை விரிந்தன .
எச்சூழ்நிலை தள்ளியது அவளை .

எல்லாம் வல்ல தான் தோன்றி அவன் 
வாசலை ஏன் வறுமையின் 
சின்னமாக்கினான் .

சாலைகளின் நடுவில்,பேருந்து  நிறுத்தத்தில்,
தொடர் வண்டிக்குள் பூங்காவில் இப்படியாய் 
தாயை நிறுத்திய 
எவனோ ,எவளோ-
 தாய்ப்பால் குடித்த அவர்களின் 
வாயை வெட்டிப் பிய்த்தாலென்ன ?

தலை மேல் கை வை 
வாழும் என் வாழ்வென 
கைதட்டி வரும் மாதொரு பாகருக்குப் 
பத்தோ ,ஐம்பதோ 
தரும் தருமர்களே 
பிச்சைத் தாய் வருவது 
மறைந்து போனது ஏனோ ?

பள்ளியில் பணம் கட்டிப் படிக்க வைத்தத் 
தோஷம் போக்க 
முதிர்ந்த பொழுது பணம் கட்டி
அனுப்பி வைத்தாயோ 
முதியோர் இல்லத்திற்கு ?
அவளும் பிச்சைத் தாய் தானோ?

தாய்க்குத் திவசம் 
ஒலி வசியம் செய்தவருக்கு 
தடித்த பணம்  தட்டில் வைத்தாய்.
வயிறு பிழிந்த பசியோடு நின்ற 
பிச்சைத் தாயைப் 
பிண்ட சோறு பொறுக்க விட்டாய் .

சுற்றுப்புறக் கல்வி

வீட்டுக்குள் ஏசி போட்டாச்சு 
ஓசோனுக்குள் ஊசி குத்தியாச்சு

காதைப் பிளக்கும்-சத்தம்-அது
சாகும்பறை கொட்டும் நித்தம்

மரம் வளர்த்தால் மழை 
அதைத் 
தினம் மறந்தால் பிழை

பணப்பை
நிரப்ப கலக்கின்றோம்
நீரில் சாயம் .
வாய்க்கு நீரின்றித் தவிக்கின்றோம் 
வாழ்வு மாயம் .

காடழித்து நாடாகுமோ
கண்ணழித்து சுகமாகுமோ


வீட்டுக்கொரு மரம் வளர்த்தால் 
வீறு கொண்டு மழை பிறக்கும்

வெப்பச் சலனம் தடுத்திடுவோம் 
வெற்றிடங்கள் யாவும் மரம் வளர்த்திட்டால்

மரத்தை வளர்ப்போம் மகத்துவத்தை 
மனிதத்தைக் காப்போம்

ஏசி காற்றை விட 
ஓசிக் காற்று உயர்ந்தது .

குருவாய் ஆனவர்

குருவாய் ஆனவர்
--------------------------------
மேடும் பள்ளமுமான 
கிராமத்தில் 
சரித்திரங்கள்  உலவும் 
பழைய வீடு.
வயல்வெளியும் ,சுய தொழிலும் நசுங்கத் 
தேடித் தேடிச்  சம்பாத்தியம் பண்ண 
வான் பரந்த சொந்தங்கள் .
சொத்தும் சுகமும் 
 பட்டங்களாய் உருவெடுக்க 
மாயவித்தைக் காரராய் 
மாறிப் போனார் சிலகாலம் .
மிச்சம் மீதி ஒருவனுக்கே 
ஊர் மெச்ச 
மங்கலம் ஊதி முடித்தவுடன் 
வான் விரிந்து பறந்தன சிட்டுகள்.
கூடுவிட்டு கூடு பாய்ந்த 
கலை தந்த குருவானார் சிலகாலம்.
இருட்டுக்குள் துலாவி 
கையேந்தி கையேந்தி 
இதய ஓட்டை இளவரசிக்கு 
ஏணி கொடுக்க விழைந்து 
துணி போர்த்திச் 
சாய்ந்து போனார் சிலகாலம் .
அவர் மனம் போலவே 
கொஞ்சம் கொஞ்சமாய் 
இறந்து கொண்டிருந்தது
அந்த 
சரித்திர வீடு .
வைத்தியர் இல்லா ஊரில் 
கை வைத்தியத்திலேயே
உயிர் ஓட விட்டார் சிலகாலம்.
இத்தனையும்
மெளனமாய் மென்று 
மொக்கை வாய் சிரிக்கும் 
என் அப்பாவை விட 
எந்த ஜென் துறவி 
குருவாய் ஆனவர் 

kavithai

சாகும் வரம் தந்தாய் ......
-----------------------------------
கோபங்களைத் தாங்கித் தாங்கி 
அரண்மனை விரித்து,
ஏரி கருகி 
புழு வைத்தப் பிணமென 
உள்நுழைந்து தீராப்பசியோடு
அரவெனத் தின்று துப்பினாய்
உன்னுலகை ..
இடுகாடும் எருமையும் வயல்வெளியாகிக் 
குண்டுக் கட்டாய் 
பறவையை ஜீரணித்தாய்.
இலை தளை காயாகிப் பூமி மேலர்ந்து 
மேகத்தை உறிஞ்சி 
கால்வழிப் பெய்தாய்.
மகிசாசூர பத்தினியாய் இருமலை தொட்டுக் 
கால்பதித்து 
யோனி காட்டி 
வாசுகி எனை 
முழுதாய் உள்திணித்தாய் 
காரணமேயின்றி 
சாகும் வரம் தந்தாய். 
     ----பாரதிசந்திரன் --

வெள்ளி, 30 டிசம்பர், 2011

இரவு


எத்தனையோ,  திரும்பிப்பார்த்தும்
எகிறி முறைத்தும் அனுசரித்தும்
அஸ்தமித்தும் வந்தவை

எவ்வளவைவிழுங்கியிருப்பேன்.
ஏனிது என்று பார்த்திருப்பேன்.
விழுங்கிய இரவுகளில்
விடியுமட்டில் அட்டகாசம்.
விக்கல் ஏப்பத்துடன்
வியாக்கண விளம்பரங்கள்.
பகலின் பிரசவ வேதனையைப்
பார்த்துத் தடவியதால்,
உடலைப் பறக்கச்சபித்தாய்.
பாவம்-உனக்குள் மறைந்தேன்.
சிலதை விரட்டி
சிந்தனைகளை சிருஷ்டிக்க
சிக்கனமாய்
உன்னுடன்  ஒரு உடன்படிக்கை.
               


                            நன்றி-தொடரும்-இதழ்-ஜனவரி-96

தீக்குச்சிப் பொட்டுகள்

சமூதாயத்தில
இளம் அரும்புகள்
தீக்குச்சிக்குப்பொட்டு வைக்கப்போய்

தானே பொட்டாகிப்
போனார்கள்.



துணிக்குச்சாயம் காய்ச்சப்போய்
தானே
சாயமிழந்து போனார்கள்.


இங்குதான்
அரும்புகளே ஆணிவேரைக்
காப்பாற்றும் அதிசயங்கள்.


மார்க்கண்டேய அடிமைத்தனத்தில்
இரணிய ஆதிக்கங்கள்.

                    நன்றி-கவிக்காவேரி-99




     

வியாழன், 15 டிசம்பர், 2011

ஹைபுன் கவிதை

கையில் குழந்தையுடன்
படியில் நின்றிருந்தவர்களைத் தள்ளிக் கொண்டு  வந்து நின்றார்.

பேருந்தின் நடனத்தை விட அவரின் நடனம் மோசமாய் இருந்தது.

குழந்தையை யாரிடமாவது  கொடுத்து விடலாம்
என்ற முயற்சிக்கு  அழுகைப் பலனளிக்க வில்லை.

யாரும் இடம் தராததால்
நான் எழுந்து  இடம் கொடுத்தேன்.

அசதியுடன் தூர நின்றேன்.
சிறிது நேரம் கழித்துத் திரும்பிப்பார்த்தால் ,

அங்கே மூன்று நாள் அசதியுடன் 
நான் தூங்கிக்கொண்டிருக்கிறேன்
குழந்தை வடிவில்.

புதன், 19 அக்டோபர், 2011

ரத்தச் சூடு--

பனிக் காலத்தில் வெப்பமான 
ரத்தச்   சூடு ,உருண்டையாய்  மலையில் இருந்து 
 தீபக்  காடாய்  எரிந்து மீண்டும் 
பனியாகி  மலையானது .
மலை எரிவதும் 
பிறகு பனி  ஆவதும் 
இப்படியே பூனை  புசித்த போது
 வாழ்க்கை  காணாமல்  போனது .....

பதில் !!!!

என் வீணாகிப்போன   நாட்களுக்காக 
நான் மயங்கிப்  போயி  கிடக்கையில் 
தான்  தெரிந்தது -என் அப்பாவை 
"என்ன பேருசா கிழிச்சாரு "- னு
நான்  கேட்ட  கேள்வியின் 
பதில் !!!!

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

கனவு வந்தது .

முழித்து நுரைத்தலுடன்
உள் சென்றது
அந்தக் காட்சி .
அடைத்துப் போய் கருப்பாய்
பிசுபிசுசுத்தது .
காற்று கணமே 
ஆனது .

கனவு  வந்தது .

எல்லாமாகி நின்றாய் நீ அம்மா .

அம்மா -அம்மா இன்று  நான்   
பூரணம்  அடைந்தேன் .
அம்மா -அம்மா இன்று நான் 
நிம்மதி அடைந்தேன் .

நிலவைப் பார்க்க நினைத்த போது-
உன் நினைவு தான் 
வருகிறது .

என் குழந்தைக்கு உணவு ஊட்ட
நினைத்த போது-
உன் நினைவு தான் 
வருகிறது .

எல்லாமாகி  நின்றாய் நீ அம்மா.
எனக்குள் -
எல்லாமாகி  நின்றாய் நீ அம்மா .
                           பாரதிச்சந்திரன் .

வெள்ளி, 7 அக்டோபர், 2011

உன் நாணமா?

மேகத்திடம் உனை வரையக்கேட்டேன்.
வரைந்த போது -அழித்தது
உன் நாணமா?

புதன், 5 அக்டோபர், 2011

அவதார் பட விமர்சனம்.

அவதார் பட விமர்சனம்.

     அவதார் என்ற மாபெரும் படம்  என்னை வியப்பின்  எல்லைக்கே  கொண்டு போனது.  நவீன  காட்டுமிராண்டுத் தனத்திற்க்கும்    இயற்கையின் மடியில் தவழும் ஆதிகுடிகளுக்கும் அல்லது அற்புத  ஜீவன்களுக்கும்  இடையில் நிகழும்  போராட்டமே   கதையின்  மையக்கதையாக  ஓடுகிறது.  பிரமாண்டத்தைக்  கண்களுக்குத் தந்த  விதம்  வித்தியாசம்.
     இயற்கையை  மனிதன்  பாதுகாக்கத்  தவறி  விடுகிறான்.  இயற்கையில்லாமல்  ஜீவ்ராசிகள்  சுகமான வாழ்வைப்  பெற்றிடமுடியாது. தன்  வாழ்வை மரம்,  செடி,  கொடி இவற்றினூடு  உட்புகுத்தி  ஊடாடி  அது  தரும்  செய்தியை  விளைவைப்  பெறாது  வாழ  ஏன்   ம்னிதன்  நினைக்கிறான்.  இதை  இப்படம்   உணர்த்தியிருக்கிறது.
     உண்மையாகவே   அண்டத்தில்  உள்ள ஒவ்வொன்றும்   ஏதோ ஒரு வகையில் மனிதனோடு  பேசுகிறது. வாழநினைக்கிறது.ஆனால் இடவாசை, பொருளாசை,அகங்காரம்,ஆணவம்  இவற்றால்  தன்  உலகைத்  தன்  கையாலே  கொள்ளி வைத்துக்கொள்கிறான்.
      நாகரீகம்  இயற்கையின்  உயிரைப் பறிப்பதில்  ஆர்வம்  காட்டுவதைப்  படம்   அழகாகக்  காட்டுகிறது.
      மனிதனாய் ப்   பார்த்துத்  திருந்தாவிட்டால்............

திங்கள், 3 அக்டோபர், 2011

அம்மா என்று சொல்லி ப்பார்த்தேன்

அம்மா  என்று சொல்லி ப்பார்த்தேன் 
அச்சம் போனது .
அருகி நின்றது அனைத்தும் . 
  நானே நான்  ஆனன். 
நல்லதும் அதுவே .......