நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

தமிழ்ச் சிற்றிதழ் கவிதைகளில் சமுதாயப் பார்வை

தமிழ்ச் சிற்றிதழ் கவிதைகளில் சமுதாயப் பார்வை

“வாழ்க்கையைக் கவித்துவப் போக்கில் பிரதிபலிப்பதற்கும், அங்கதமாக எழுதிக் காட்டுவதற்கும், வாழ்க்கையைப் பற்றிய சிறந்த, தெளிந்த தத்துவத்தையும், எதிர்காலம் பற்றிய எண்ணத்தையும் கவிஞன் அல்லது எழுத்தாளன் தெளிவாகப் பெற்றிருக்க வேண்டும்.”1 என்பதிற்கேற்பச் சிற்றிதழ்கள் சமூகப் பிரக்ஞையுடன் கவிதைகளை வெளியிட்டிருப்பதைக் காண முடிகின்றது. சமூகமும் இலக்கியமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதால் கவிஞனால் இத்தளத்தைச் சரியாகப் பதிவு செய்ய முடிந்திருக்கிறது.
சிற்றிதழ்கள், சமகால உலக இலக்கியங்களின் தரத்திற்கு இணையாகத் தமிழ் இலக்கியங்களைக் கொண்டு செல்கின்றன என்பது அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாக அமைந்திருக்கிறது. எனவே அவ்வகைச் சிற்றிதழ்களில் சமுதாயக் கவிதைகள் எவ்விதம் பதிவு செய்யப் பெற்றிருக்கின்றன என்பதாக இவ்வாய்வு அமைந்திருக்கின்றது.
சிற்றிதழ்களின் இலக்கணம்
“நுட்பமும் ஆளுமையும் விரிந்த மனப்பான்மையும் உடைய இதழாளர்களின் இதழ்கள் வரலாற்று வரிசைச் சிற்றிதழ்களாகின்றன. நேருக்கு நேர் தாங்கள் காணும் உண்மை நிகழ்வுகளை எழுத்தாக்கியும், பல்வேறு மொழஜகளுக்கு இடையிலான ஒப்புமையையும் அதன் சாரத்தையும் கொண்டு இதழுக்கான குறிப்பிட்ட மொழியின் ஆளுமையுடன் கூடிய நுணுக்கமும் இலக்கிய வடிவங்களை நுணுக்கி விவரிக்கும் பாங்கும்-இவ்விதழ்களின் சிறப்பு இயல்புகளாகின்றன”2 என்பது சிற்றிதழ்களின் இலக்கணமாகக் கொள்ளப்படுகிறது.

சமுதாயக் கவிதைகள்

சிற்றிதழ்களில் காணலாகும் கவிதைகள் பல்திறத்தன. அவற்றில் சமுதாயக் கவிதைகள் பெரும்பங்கைப் பெற்று எழுதப் பெற்றிருக்கின்றன. அவற்றை,
1. தனிமனிதப் பிரச்சனைகள்
2. பொதுமைப் பிரச்சனைகள்
3. சமூகத் தீர்வுகள்

தனிமனிதப் பிரச்சனைகள்

சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் பல்வேறு பிரச்சனைகளையும், சந்தோசங்களையும் சமுதாயத்திலிருந்து பெறுகின்றான். இதன் விளைவாக ஏற்படும் மன உணர்வுகள் சில நேரங்களில் சமூகப் பின்னடைவையும், சில Nநுரங்களில் சமூக முன்னேற்றத்தையும் ஏற்படுத்துகின்றன. இதனடிப்படையில், “எந்த இலக்கியத்திற்கும் அடிப்படையான உள்ளீடாக அல்லது பொருண்மையாக மனிதனே காட்சி தருகின்றான். மனிதனின் ஆசை வேட்கைகளையும், செயல் திறனையும், வளர்ச்சி நிலையினையும் வீழ்ச்சியினையுமே இலக்கியங்கள் பிரதிபலித்து நிற்கின்றன:3 என்பரத அறிய முடிகின்றது. இவ்விதமான தனிமனிதச் சமுதாய உணர்வுக் கவிதைகள் சிற்றிதழ்களில் பெரும்பான்மையாக எழுதப் பெற்றிருக்கின்றன.
இனிமையற்ற இல்லம்
தேசத்தில் பல்வேறு வளர்ச்சிகளைக் கொண்டுவர வேண்டிய கடப்பாட்டிலுள்ள ஒவ்வொரு மனிதனும் தனது நேரத்தை வீணடிக்க மாட்டான். ஆனால் இன்று சமூகத்தில் ஒவ்வொரு இல்லத்திலும் மனிதர்களின் நேரங்கள் சுரண்டப்படுகின்றன. காலங்கள் வீணாவது அறியாமல் இருக்கும் இத்தன்மையினை,
“சின்னத்திரை நம்மைச்
சிறைப் படுத்துகிறது……
வீட்டுக் காவலில் தேசம்.”4
எனும் கவிதை கூறுகிறது. இல்லங்கள் தம் பாதுகாப்பிற்கும், தம் வசதிகளுக்காகவும் என்ற நிலைமாறி, இல்லங்களின் பாதுகாப்பிற்காக நமது சுகங்களை விட்டுத் தர வேண்டியுள்ளது. இதனை,
“வெளியூருக்குப் போனாலும்
வீட்டு ஞாபகமாகவே இருக்கின்றது.
திருட்டுப் பயம்”5
இக்கவிதை விளக்குகின்றது. பிறர் பொருளைக் கவர்ந்து தவறான வாழ்க்கை வாழும் மனப் போக்கு இச்சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிறது. இதன் மூலம் முழுமையான சந்தோசங்களை அனுபவிக்க முடியாமல் மனித மனங்கள் பாடுபடுகின்றன.
“பூக்கத் தயாராய்
தங்கை
கவலைகளும்”6
என்ற கவிதை, மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்தல், திருமணம், வரதட்சணை, சந்தோசமான. இவ்வாழ்க்கை இவற்றின் மேலுள்ள பயத்தை வெளிப்படுத்துகின்றது. சுயமற்ற வாழ்வை,
“என்னை
அழகு செய்வதாய் நினைத்து
வண்ணக் கலவையை
அள்ளிப்பூசி
இன்று பறக்கக் கூட
சிறகுகளை விரிக்க முடியாமல்
நான்”7
இக்கவிதை வெளிப்படுத்துகிறது. தன் அனுபவங்களே கவிதையின் உள்ளார்ந்த பொருளாகிறது என்பதையும், அதுவே சமூகத்தின் உண்மைப் பொருளாகின்றது என்பதை, “தமிழ்க் கவிதைகளைப் பொறுத்தமட்டிலும் கவிதை உண்மைதான் கவிதைக்கு ஓர் உயர்ந்த தரத்தை நல்குகின்றது. கவிஞன் கூறும் உண்மை நாம் உலகில் காணும் உண்மையைப் போன்றதன்று, அவன் கூறும் உண்மை எப்படி இருக்க வேண்டும் என்பதை உரைப்பது”8 என்ற அறிஞரின் கூற்று மெய்ப்பிக்கின்றது. தனி மனிதனின் வேதனைகளில் உயர்நிலையில் அமைந்த கவிதையாக,
“வறுமையின் கொடுமையில்
வாடிக் கிடக்கும் பெண்ணின் வறண்ட மார்பில்
சுரக்காத பாலுக்காகச் சுவைத்துக் கொண்டிருக்கும்
குழந்தை – அதனை மானமற்று மறைந்து
மானப்பார்வை பார்க்கும் காமுகன்”9
என்ற கவிதையைக் கூறலாம். சமூகத்தில் பாலியல் வன்கொடுமைகளும், திரிந்துபட்ட மனவுணர்வுகளுமாக இருக்கும் மனிதர்களை நினைத்து வேதனைப்படும் தனிமனித விரக்தியை இக்கவிதை வெளிப்படுத்துகிறது.

2.பொதுமைப் பிரச்சனைகள்

“மனித சுதந்திரம், மனித மகிழ்ச்சி ஆகியன பற்றிய கருத்துகளே சிறந்த இலக்கியங்களின் கருவாக அமைய முடியும். வாழ்வின் இன்றியமையாத கூறுகளைப் பிரதிபலித்துக் காலந்தோறும் மனித சமுதாயம் எந்த எந்தப் பாதைகளின் வழியாக நடைபயின்றது என்பதைத் தௌ;ளத் தெளிவாக் காட்டி நிற்கும் கலைப் படைப்புகளே சாகவரம் பெற்று நீண்ட நாட்கள் வாழ்கின்றன.”10
சமூகத்தின் பொதுமையான பிரச்சனைகளையும் கவிஞன் தன் கவிதையின் பாடுபொருளாகக் கொண்டிருக்கின்றான். அவ்வாறான கவிதையாக,
“பொதி சுமக்கும்
மலர்கள்
மெட்ரிக் குழந்தைகள்”11
எனும் கவிதையமைகிறது. பொதி சுமப்பது கழுதைகளாகலாம். ஆனால் பிஞ்சுக் குழந்தைகள் பாட நூல்களைச் சுமந்து செல்லுவது கவிஞனின் மனதைச் சுடுகிறது. மலர் பொதி சுமப்பது கண்டு, தாங்காது கதறுகிறார். வறுமையை விட்டொழிக்க வேறு வழியில்லாத தாய் வேதனையின் உச்சக் கட்டத்தில்,
“அழு!மகனே!அழு!
கண்ணீர் கடலாகட்டும்!
உப்பு விற்றாவது
பிழைக்கலாம்”12
என்று கூறுகின்றாள். சமுதாயத்தின் இழி குரலாக இது காட்ட படுகின்றது.
“எமன் ஓய்வாகி விட்டானா?
உயிர் பறிப்பு செய்கிறதே
மதங்கள்.”13
“வரதட்சனைத் வில்லொடிக்க
வரவில்லை எந்த இராமனும் முதிர் கன்னிகளாய்     சீதைகள்”14
                     “கோவலனைத் தேடிச் சென்ற கண்ணகி
காவல்துறை ஏற்பாட்டில்
விபச்சார ஒழிப்புச் சட்டத்தில்
கைது செய்யப்பட்டாள்”15
“பூப்பெய்தியதுமே
வெட்டி எறியப்பட்ட
சுதந்திரச் சிறகுகள்”16
போன்ற கவிதைகள் சமூகப் பிரச்சனைகளான வரதட்சணை, மதக்காழ்ப்பு, நீதி, சுதந்திரமின்மை எனப் பல தளங்களில் எழுதப் பெற்றிருக்கின்றன.

சமூகத் தீர்வுகள்

கவிதைகள், பல்வேறுபட்ட பிரச்சனைகளின் பாதிப்பாக .இருந்தாலும், அக்கவிதைகளில் எதிர்காலச் சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆசையினையும் கவிஞர்கள் பதிவு செய்துள்ளார்கள்.
“சமரச வார்த்தைகளின்
களிம்புகளை நிராகரித்த
எங்கள் கோபம்
சமத்துவ தீர்வுகளுக்காய்
இன்னும் எரிகிறது”17
                     “மனிதம் இல்லா வாழ்க்கை
மனிதன் வாழ்ந்தால்
மனிதத்திற்கே மரணம்”18
எனும் கவிதைகள் சமூகத் தீர்வைத் தருவதாக அமைகின்றது. மனிதர்கள் மனதளவிலும், உடலளவிலும் தீய எண்ணங்கள் கொண்டவர்களாகயிருக்கின்றார்கள். எனவே இவை களையப் பட வேண்டும் என்ற தீர்வை முன்வைக்கும் கவிதையாக,
“அடிக்கடி வந்துபோ மழையே….
குளமில்லா ஊரில்
அழுக்காய் மனிதர்கள்!”19
இக்கவிதை அமைந்திருக்கிறது.
“எரிக்க வேண்டிய
சாதிக் குப்பைகள் பொசுக்க வேண்டிய
பொய்மை ஏடுகள் அழிக்க வேண்டிய
அபத்தஙகள் அன்றாடம் அதிகமாகிக் கொண்டே    வருகின்றன

அதனால் நான் ஓர் தீப்பற்தமாகவாவது
இருக்க வேண்டி முயல்கின்றறேன்”20
எனும் கவிதையில் சமூகத்தைத் தூய்மையாக்கப்பட வேண்டுமென்றால் தீமைகளை அழித்துவிட எரித்துவிட வேண்டும் என்று கவிஞர் தீர்வு கண்டிருக்கின்றார்.
சிற்றிதழ் கவிதைகளில் சமுதாயப் பின்னணியில் அமைந்த கவிதைகள் அளவில் பெருமளவாக இருப்பதைக் கவனிக்க முடிகின்றது அவற்றில் தனிமனித வெளிப்பாட்டுச் சிந்தனைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. சமூகத் தீர்வுகளையும் கவிஞனே தன் கவிதை மூலமாக வெளிப்படுத்துகிறான். சமூகமும், இலக்கியமும் ஒன்றிலிருந்து ஒன்று பெறுமானால் கவிஞர்களின் தீர்வுப்படி நல்ல சமூகமாக எதிர்காலம் அமையும்.

அடிக்குறிப்புகள்

1.ஜி.ஜான் சாமுவேல்,”இலக்கியத்தில் சமுதாயப் பார்வை”, ப-101
2.பொள்ளாச்சி நசன், “சிற்றிதழ்கள்”, பக்-84-85
3.ஜி.ஜான் சாமுவேல், “இலக்கியத்தில் சமுதாயப் பார்வை”, ப-33
4.கா.நா.கல்யாணசுந்தரம், “கவிதை உறவு”, ஏப்ரல்-97, ப-6
5.பொன்.குமார், ‘சிகரம’, மே-99, ப-16
6.வலம்புரி.லேனா, ‘கல்வெட்டுப்பேசுகிறது’, சூலை-98, ப-7
7.தேவநாதன், ‘நண்பர்கள் தோட்டம்’, ஜீலை-99,ப-2
8.ந.சுப்புரெட்டியார், ‘பாட்டுத் திறன்’, ப-30
9.கரிகாலன், ‘நண்பர்கள் தோட்டம்’, அக்-நவம்-99, ப-11
10.ஜி.ஜான் சாமுவேல், “இலக்கியத்தில் சமுதாயப் பார்வை”, ப-110
11.மாடக்குளம் விஜயகுமார், ‘தேசிய வலிமை’, டிசம்-98, ப-10
12.என்.வாஞ்சிநாதன், ‘தேசிய வலிமை’, டிசம்-98,ப-10
13.ஓவியா, ‘ஓடம’, செப்-97, ப-11
14.இனியவன், ‘கல்வெட்டுப் பேசுகிறது’, ப-16
15.டி.மருது பாண்டியன், ‘தேசிய வலிமை’, மார்ச்-99, ப-4
16.சூரியதாஸ், ‘ஓடம்’, ஏப்-மே-97, ப-22
17.மு.முருகேஷ், ‘ஓடம்’, சூன்-97, ப-2
18.சுரா. ‘தேசிய வலிமை’, ப-9
19.ஜெ.பி.சிருஷ், ‘ஒளிநெறி’, ஜன-98, ப-24 ;
20.        ‘கல்வெட்டுப் பேசுகிறது’, நவம்-97, ப-10