நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

சனி, 31 டிசம்பர், 2022

தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்

   தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்

(நிறைவேறாத ஆசை- சிறுகதை விமர்சனம்)

பாரதிசந்திரன்



காற்றுவெளி” ஐப்பசி மாத மின்னிதழில் வெளிவந்த  “நிறைவேறாத ஆசை” எனும் இந்தச் சிறுகதை, படிப்போரின் உள்ளத்தினுள் அமிழ்து கிடக்கும் ஆயிரம் ஆயிரம் உணர்வுகளைத் தட்டி எழுப்பிக் கிளை விடச் செய்யும் தன்மை வாய்ந்தது. அச்சிறுகதையின் தன்மைகுறித்துக் காண்பது தேவையாகிறது


 “மனதின் உள்ளே புதைக்கப்பட்டிருக்கும் ஆசைகளும், எண்ணங்களும், நினைவுகளும், கனவில் வெளிப்படும் அத்தகைய கனவுக் காட்சிகளையே கலை இலக்கியங்களாகப் படைப்பது தான் மிகையதார்த்தவாதம் ஆகும்” எனும் இலக்கியக் கோட்பாடு ஒரு சிறுகதையைப் படித்தவுடன் அப்படியே பொருந்துகிறது அந்தச் சிறுகதை தான், எழுத்தாளர் சுந்தரிமணியன் எழுதிய  ‘நிறைவேறாத ஆசை’


உலக உயிர்களின் அடிப்படை மூலக்கூறுகள் தன் தாயின் பாசத்திற்கு நெருங்கிய தொடர்பை எப்பொழுதும் பெற்றிருப்பவை ஆகும். தாயின் உடலோடு, தாயின் மனதோடு, தாயின் செயல்களோடு உருவாகி அதை உள்வாங்கித் திரிபவைகள் தான் எல்லா உயிர்களும்.




அம்மா… அம்மா… அம்மாவின் கருவறையை விட உலகில் பெரிது எது? அம்மாவோடு நெருங்கிய நினைவலைகள், இறக்கும் வரை நீண்டு கிடக்குமே, அதனைத் தொட்டுத் தடவிப் பார்த்து எவ்விதக் கற்பனையும் கலக்காமல் அப்படியே உருவம் அமைத்துத் தந்திருப்பது தான், இச்சிறுகதையின் மாபெரும் உத்தியாக இருக்கிறது.


’மிகைஎதார்த்தவாதம்’ எதையும் ஆராய்வதை மறுக்கிறது. ஒழுங்கு அமைத்தலை வெறுக்கிறது. இருப்பதை அப்படியே ஆழ்மனத்தைத் தூரிகையோடும், பேனாவோடும் நினைத்துக் கலையழகும் கவினழகும் காண வேண்டும்’ என்பது மிகைஎதார்த்த வாதத்தின் அறிவுரையாகும்.


சிறுகதையின் தொடக்கமானது, அந்த நாளில் நடந்த நிகழ்வுகுறித்த சிந்தனையாகத் தொடங்குகிறது. ஒரு நிமிடச் சிந்தனை, பத்து ஆண்டுகளை அது சுமந்து நிற்கிறது.


தாய் இறந்து இன்றோடு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதாகக் கதை தொடங்குகிறது. அந்த நிமிடத்தில் தாயின் வாழ்வில் குறைந்தது 10 ஆண்டுகளினுடைய சிறப்பை மனம் அசை போடுகிறது. அன்புமகளின் மனம் படுகிற வேதனையை இந்தச் சிறுகதை அப்படியே வெளிப்படுத்துகிறது.


ஜி. நாகராஜனின் ’நாளை மற்றும் ஒரு நாளே’ என்கின்ற நாவலில் உள்ள காலம் எவ்வளவு குறுகியதோ, அத்தன்மையைப் போல் இச்சிறுகதையும் காலத்தால் சிறிதாகி, நினைவூட்டங்களால் நீண்டு தரமிக்க இலக்கியமாக மாறி இருக்கிறது.


அன்புமகள் தன் தாயின் நினைவுகளைத் தன் ஒவ்வொரு செயலின் பொழுதும் நினைத்துப் பார்த்துக் கொள்ளும் தன்மையை இச்சிறுகதை எடுத்துக்காட்டுகிறது. தன் வாழ்க்கையில் நடந்த சோகங்களின் ஒட்டுமொத்தப் பிரிவையும் அந்த நினைவோட்டத்தில், சிறுகதை ஆசிரியர் நினைத்துப் பார்த்துத் தன் வலியைக் கதையினூடாக வாசகனுக்கு அனுப்புகிறார்.


அம்மா இறந்ததற்குக் காரணம், அப்பாவின் இறப்பும், அண்ணனின் இறப்பும் தான் காரணம் எனக் காரணம் கற்பிக்கின்றாள். அது முக்கியமான காரணம் அல்லவா? எந்தத் தாயாலும் தன் மகன் இறப்பை, தன் முன்னால் காணவா முடியும்?


தன் கணவனுக்கு முன் தான் இறந்து விட வேண்டும் என்று எல்லாப் பெண்களும் வயது முதிர்ந்த காலத்தில் நினைக்கிறார்கள். இதுவே அன்பின் முதிர்ச்சியாகும். ஒருவரைப் பிரிந்து ஒருவர் இருக்க முடியாது என்பதை அன்றில் பறவை கொண்டு கூறும் இனமல்லவா நம் இனம்.


மூவரின் இறப்பு. அதாவது அப்பா முதலில் இறக்கிறார். பின் அண்ணன் இறக்கிறார். இதெல்லாம் தாங்க முடியாது தாயும் நோய் வாய்பட்டு இறக்கிறார். இதை எல்லாம் தாங்கிக் கொண்டு அன்புமகள் துன்பத்தோடு நினைத்துப் பார்க்கிறார். வலியின் நெருடல்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வடிவில் இருக்கின்றன என்பது விளங்குகிறது.




இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், அம்மாவோடு வாழ்ந்த நாட்கள். அன்பு மகள் கண் முன்னே நிழலாடுகின்றன. அம்மாவின் சர்க்கரை குறைவான காப்பி. அவள் போடுகின்ற அந்த முறை. தினம் தினம் பேரக்குழந்தைகளுக்குச் செய்து தரும் உடனடிப் பலகாரங்கள். அதன் சுவை, பணம் இருந்தும் இப்பொழுது எங்களால் அதனைச் செய்து சாப்பிட முடியவில்லை. செய்தாலும் அந்தச் சுவை வரவில்லை என்பதாக ஒவ்வொரு செயல்களிலும் தன் தாயை நினைத்து நினைத்துப் பூரிக்கிறாள் அன்பு மகள்.


அப்பாவிற்கும் அம்மாவிற்கும் இடையில் வாக்குவாதம் தொடர்ந்து இருக்கும். அப்படி இருந்து வந்தாலும் அதற்குள் காணப்பட்ட அன்பையும், பாசத்தையும் உணர்ந்து பார்க்கும் உணர்வுகள், 


முதியோர்காதலை ரசிக்கும் ரசனையே தம்மை ஈடற்ற வாழ்வை வாழச் செய்யும் என்பது தானே படிப்பினை. அதனை இக்கதையில் ஆசிரியர் பலவாறாக நினைத்துப் பார்த்துச் சந்தோஷப்படுகிறார்.

 

அப்பாவின் மேல் அம்மா கொண்ட காதலை உணர்ந்த உணர்வு அத்தகையது.


அப்பாவின் குணம், அம்மாவை நேரடியாகப் பாராட்டாமல் தன் நெருக்கமானவர்களிடம் அம்மாவின் செயல்களைப் பாராட்டிக் கூறுவதும், கோலத்தை ரசிப்பதுமான உணர்வு, அதைக் கண்டும், அதன் உள்ளார்ந்த உணர்வுகளைப் புரிந்து கொண்டு கூறியிருக்கின்ற விதம் சிறப்பாகும்.


அன்பு மகள் தன் அம்மாவைப் போலவே வாழ வேண்டும் என இயங்குகிறாள். ஏங்குகிறாள். சேலை கட்டும் அழகு உள்பட. சேலை கட்டும் லாபகம் கூடத் தன் தாயின் சாயலில், அதன் மென்மையில் இருக்க வேண்டும் எனும் ஆவல். அதன் உணர்வு மிகவும் மெல்லியதானது. 


தாயின் வாழ்வியல் கூறுகள் அனைத்தும் ரசனைக்கு உட்படுத்தப்பட்டு அடுத்த தலைமுறைக்கு அப்படியே பரிணாமம் ஆகி இருக்கின்றன.


தாய் சமைத்து வைக்கும் இடியாப்பமும் புதினா சட்னியும் இனி எப்பொழுது சாப்பிட போகிறோம் எனும் ஏக்கம் சிறுகதை ஆசிரியரின் எழுத்தில் தெரிகிறது. பிரிவு எவ்வளவு கசப்பானது. அதுவும் முழுமையாகப் பிரிந்து விடும்பொழுது ஆழமான துன்பம் வாட்டி வதைக்கத்தான் செய்கிறது.


படைப்பின் பரிமாற்றம் இந்த இடத்தில், உலகளாவிய மானிட சமூகத்தின் ஆழ்மனப் பதிவு ஒற்றுமைகளை எல்லாம் தொட்டுப் பார்க்கின்றன. உண்மையான இலக்கியம் எதுவோ, அது இவ்வேலையைக் கட்டாயம் செய்யும். அவ்வாறான இலக்கியமே, பொதுவியல் தன்மை பெற்று உலகம் தழுவியதாக அடையாளப் படுகிறது. அவ்வகையில் நிறைவேறாத ஆசை சிறுகதை உலகப் பொதுமைக்குமான தரத்தைத் தன்னிடத்தில் கொண்டுள்ளது என்பதைக் காலம் இலக்கியவாதிகளுக்கு விளக்கும்.


சிறுகதை ஆசிரியரின் மன ஓட்டங்கள் அப்படியே சர்ரியலிச பாணியில் ஒன்றன் பின் ஒன்றாக அல்லாது, சரியாக மனப் பேதலித்தல் நிலையில் எங்கெங்கு செல்கிறதோ, அங்கங்கு கதையின் ஓட்டம் இருக்கிறது. 


எண்ணங்கள் அலைபாயும் போக்கில், அதை அப்படியே எழுதுவது எழுத்தாளனுக்கு பெரும் சவால். அதைவிட அந்த அனுபவ வெளிப்பாட்டை வாசகனுக்குக் கடத்துவது அதைவிடச் சவாலாக இருக்கும். ஆனால், இச்சிறுகதை அப்படியே சென்று விடாமல், வாசகனுக்கு அந்த உணர்வுகளைக் கடத்துகிறது. 


மேம்பட்ட எழுத்து நடை கொண்ட எழுத்தாளர்களே இது போன்ற உணர்வுக் கடத்தலைச் செய்ய முடியும். அதற்கு இச்சிறுகதை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.


ஒரு பக்கம் தாயின் சோகம். இன்னொரு பக்கம் தாயோடு வாழ்ந்த வாழ்வியலின் இன்பம். இவை இரண்டும் இக்கதையில் சாமர்த்தியமாக வெளிப்படுத்தப் பட்டுள்ளன.


தாயின் பிரிவு தாங்காத அன்பு மகளின் தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம் இது. கதை படித்து முடிக்கும்பொழுது, இந்தப் பேரழுத்தம், நம் தூக்கத்தையும் கெடுக்கத்தான் செய்கிறது. 



சிறுகதை விமர்சனம்:

  •  பாரதிசந்திரன்

  • 9283275782

  • chandrakavin@gmail.com