நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

திங்கள், 6 ஏப்ரல், 2015

சிற்றிதழ் கவிதைகளில் -உள்ளுணர்வு

சிற்றிதழ் கவிதைகளில் -உள்ளுணர்வு 

செ.சு.நா.சந்திரசேகரன்.

            இருபதாம் நூற்றாண்டின்  பிற்பகுதியில், அச்சுத் தொழில் வளர்ச்சியுற்ற பொழுதுகளில் இலக்கியங்கள் பல்கிப் பெருக ஆரம்பித்தன.வணிக இதழ்கள் செய்யத்  தவறிய இலக்கியப் பணியைச் சிற்றிதழ்கள் செய்து வந்தன. குறிப்பிட்ட இலக்கியத்தில் ஒவ்வொரு இதழும் உலக இலக்கியங்களுக்கு இணையாகப் புதுமை நோக்கில் படைப்புகளைத் தமிழ் உலகிற்குத் தந்தன.கவிதை, சிறுகதை,கட்டுரை,குறுநாவல்,திரை இலக்கியம்,நகைச்சுவை  எனப் பன்முக இலக்கியத் தளங்களில் சிற்றிதழ்கள் தம் பங்களிப்பை மேம்படுத்திச்  சாதனைகள் செய்து வருகின்றன.இதழ்கள் (Journals)தமிழின் நவீனமயப்பாட்டில் முக்கிய இடம் பெறுவதுடன் தமிழ் சில புதிய பரிமாணங்களைப் பெற உதவியுள்ளன.1 என்ற கார்த்திகேசு சிவத்தம்பியின் கருத்திற்கேற்ப இலக்கிய வகைகள் தமிழில் நவீன நிலையை எட்டியது எனலாம்.
           
           சிற்றிதழ்களின் பங்கு குறித்துக் கவிமாமணி பி .குமரேசன் கூறும்போது
நல்ல படைப்புகள் உருவாகப் படைப்பாளிகளுக்கு  வாய்ப்பளிக்கும் வள்ளலாகப் பல சிற்றிதழ்கள் பணியாற்றித் திகழ்ந்தன-திகழ்கின்றன.இளம் எழுத்தாளர்களின்  இதய உணர்வுகளுக்கு ஏற்றப் பாதை வகுத்துக் கொடுத்து,  ஆக்கத்திற்கு அரணாக நின்று பெரும் பங்காற்றிய பெருமை சிற்றிதழ்களுக்கு உரியதாகும் என்றால் அது மிகையாகாது.2  என்பார்.சிற்றிதழ்களின் போக்குக்  குறித்து, “முன்னிலை நவவேட்கை வாத (Avant-Gardist)அம்சங்கள்-இவை சிற்றிதழ்கள் பலவற்றில் காணப்பட்டன.அதாவது,சர்வதேசிய மட்டத்தில் நவமாகத் தோன்றிய இலக்கியக் கொள்கைகளை, போக்குகளை அறிமுகம் செய்வதிலும் அவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுவதிலும்
இச்சஞ்சிகைகள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன,”3  என்பார் அறிஞர்.

        
   சிற்றிதழ்களில், கவிதை இலக்கிய வகை பெரிதும் வளர்ச்சியுற்ற நிலையினை எய்தியுள்ளன.இயக்கம் சார்ந்த, இசங்கள் சார்ந்த, கோட்பாடு சார்ந்த கவிதைகள் எழுதப் படுகின்றன.  அவ்வாறான கவிதைகளில், படைப்பாக்கத்தின்
உள்நாதமாக விளங்கும் படைப்பாளனின் உள் உணர்வுகள் எத்தகு நிலையில் கவிதைகளில் பிரதிபலிக்கின்றன என்பதனையும் படைக்கப்படும் கதாமாந்தர்களின் வழி உள் உணர்வுகள் எவ்விதம் வெளிப்படுத்தப் படுகின்றன என்பதனையும் ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது .

உள்ளுணர்வு குறித்த வரையறை

உள்ளுணர்வுகள் படைப்புகளில் வெளிப்படும் நிலையானது சமூக நிகழ்வுகளோடு நேரடியான தொடர்பு கொண்டதாகும்.சமூக ஒழுக்கம் முதலியவற்றின் காரணமாக,மனவுணர்வுகள் சுதந்திரமாக வெளிப்படாமல் அழுத்தப் படுகின்றன. இவ்வுணர்வுகளும்அடிமனதில் ஆழமாய் மையம் கொண்டிருக்கும்  பாலியல் உணர்வுகளும்,நனவிலி மனத்தின் ஊடாக,அவனே அறியாத நிலையில் அவனுடைய சொல்லிலும் செயலிலும் வெளிப்படுகின்றன.கலைஞனிடம்  இத்தகைய உணர்வுகள்,அவனுடைய அறிவார்ந்த விருப்பங்களையும்,உணர்வுகளையும் மீறி அவனுடைய கலைப்படைப்பில் வெளிப்பட்டு விடுகின்றன.4  எனும் கருத்து உள்ளுணர்விற்கான வெளிப்பாட்டுத் திறனை விளக்குகிறது.உளவியல் அறிஞர் யுங் இதனைக் குறிப்பிடும் போது,”மனித உள்ளத்தின் உணர்வே (Human Psyche)எல்லா அறிவியல்களுக்கும் கலைகளுக்கும் கருவறையாக விளங்குவது .5என்பார்.

உள்ளுணர்வுக் கவிதைகள்

     படைபாளன்,சமூகத்தின் மூலம் தனக்குக் கிடைத்த அனுபவத்தை,அறிவை
மையம் கொண்ட தமது படைப்புகளைப் படைக்கின்றான்.ஆழ்மன உணர்வுகளில் தம் பழமை நிகழ்வுகள் அமிழ்ந்து கிடந்தாலும்,மேல்மன நனவோட்டத்தின் ஆளுமைகள் அவ்வப்பொழுதுகளில் ஆட்சி செய்கின்றன. படைப்பாளனுக்கும்,படைப்புக்கும் இடையில் உள்ள உளவியல் தாக்கம் சமூக முறையிலான தாக்கங்களோடு ஒப்புறவையோ,எதிர் உறவையோ கொண்டிருக்கின்றன என்பதை ஆய்வியலாளர்கள் படைப்புகளை  முன்வைத்து மெய்பிக்கின்றனர். இதனடிப்படையில் தனி மனித உணர்வுகள் படைப்பாளனைச் சார்ந்தோ,சமூகத்தைச் சார்ந்தோ  நேரான அல்லது எதிரிடையான கருத்துக்களை முன்வைப்பதாக அமைவதைக் காணமுடிகிறது.அவ்வாறு அமைந்த கவிதைகளில்,மன உணர்வுகளில் பதிந்து போன ஒருவரின் நினைவுகளை மீட்டிப் பார்க்கும் கவிதையாக,

ஞாபகத்தின் மெளன
வாசப்  படியேறுகிறதுன் பிம்பம்

திருப்புதலின்
ஏக கணத்தில் இருப்பிழந்த
உலகத்தில் பிடிப்புகள் நிராதரவுடன்
கலைகின்றன.

இடைவெளியின்
நெருக்கத்தில் சருகுகள்
மக்கிப் போகின்றன.

ஊசலில்
இழைந்தபடி சிறகசைத்து மறைப்பினும்
நீட்சி மடங்கிய உணர்குழலுக்குள்
தேங்கிக் கிடக்கிறது உன்
ஆசை .6

இக்கவிதையைக் காணலாம்.தனிமை,அமைதி இதனோடு பெரிதும் தொடர்பில் இருப்பவை நினைவுகள் உள்ளுணர்வின் வெளிப்பாடுகள் மனதிற்குள் சில நேரங்களில் இன்பத்தையும்,துன்பத்தையும்,சுகத்தினையும் தரவல்லதாய் அமைகின்றன.அவ்வாறு என்றோ தம்மோடு பழகி இன்று இல்லாது போன ஒருவருக்கான நினைவுப் பதிவுகளை இக்கவிதைஅழகாகபதிவுசெய்துள்ளது.இவ்விடத்தில்,”கவிதைதன்னியலானது,ஆகையால்அது,தன்னியலாக நிலை பெறும் தன்மையே  அதன் பொருண்மை;அது வேறு எந்தப் பொருளையும் யாருக்கும் தரும் கட்டுப்பாடு உடையதன்று,”7 தன்னம்பிக்கைஎனும் இதழில் க.அம்சப்பிரியா எழுதிய கவிதையில்,புறச்சுழ்ல்கள் அகச்சுழ்ல்களை எவ்விதம் பாதிக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டி உள்ளார்.இவ்வுணர்வுகள்,தனி மனித உணர்வுகளைப் பாதிக்கும் வண்ணமாக உள்ளன.அக்கவிதையானது ,

அழைக்கப் படாமலே
வந்து குவியக்
காத்திருக்கிறது
சோகக் குப்பைகள் .

ஆழமான அஸ்திவாரங்களால்
அரண் அமைக்கப்பட்ட
மனக் கட்டிடங்களையும்
விழ்த்த
காலம் பார்த்துக் கொண்டிருக்கிறது
சுற்றுப்புறக் காட்சிகள் .8

இதுவாகும். ம.செல்வபாண்டியனின் கவிதை மற்றொரு கோணத்தில் இருந்து வாழ்க்கையில் ஊடாடும் உணர்வுகளைத் தரிசிக்கிறது.அக்கவிதையில், புறக் காரணிகளால் மனம் அழுத்தப் படுகிறது என்கின்றார்.இம்மன உணர்வை,

நாம் அறியாமலேயே தோன்றி
முதுமையை அறிவிக்கும் நரைகள் என
மரணத்தின் பூனைப்  பாதங்கள்
                             நெருங்கிச் சமீபிக்கின்றன
வாழ்நாளில் ஒரு நாள் கழிவது
தெரியாமல் நம்மை
அர்த்தமற்றதாய் சூழல் அழுத்துகிறது .9

இக்கவிதை வெளிப்படுத்துகிறது .  

      மன உணர்வுக் கவிதைகளை ஆய்வு செய்ய,உளவியல் அணுகு முறையே  பெரிதும் ஆய்வில் பயன்படுகிறது.அதனை அடிப்படையாகக் கொண்டு,
இவ்வுள்ளுணர்வுக் கவிதைகள் குறித்து அறிஞர் தி.சு.நடராஜன் கூறும் பொழுது,  
வழக்கத்திற்கு மாறாக வருவனவும்,தம்மை அறியாமல் கட்டுப் படுத்தப் படாமல் நாத் தடுமாறியும்,நழுவியும் வருவனவும் உளறலாக விழுவனவும்,பேசுபவனின் அல்லது எழுதுபவனின் உள் மனத்தை அதிகமாகப்
புலப்படுத்தக் கூடியன10  என்பார்.

   சமூகச் சூழலைக் கண்ட படைப்பாளன் வெறுப்புணர்வில், அதைத் தன் கவித்துவத்தால் கோபத்தோடு பதிவு செய்கின்றான்.அவ்வாறான கவிதையாக,

இராமலிங்க வள்ளலாரின்
கசாப்புக் கடையை புத்தர்
திறந்து வைத்தார் .

பாவிகளை இரட்சிப்பதாய்  பாவத்திற்கு
பரிந்துரை செய்ததற்காக
ஏசு மீது வழக்குப் போடப்பட்டது

திருப்பதியில் மொட்டை போட்டு விட்டு
ஏசு தலைமறைவானார்.

கோவலனைத்  தேடிச் சென்ற கண்ணகி
காவல் துறை ஏற்பாட்டில்
விபச்சார ஒழிப்புச் சட்டத்தில்
கைது செய்யப்பட்டாள்.

நீதி தேவதைகளின் தராசுத் தட்டில்
காசு போட்டு விட்டு கற்பழித்தார்கள்.11
இக்கவிதையைக் காணமுடிகிறது.படைப்பு ,வாசிப்பாளன் ,படைபாளன் ஆகிய இம் மூன்று நிலைப் பாடுகளிலும் சமூகத்தின் தாக்கம் இல்லாது இருக்க முடியாது.இவற்றில் படைப்பாளனின் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்பட்டு
உள் உணர்வு அவனிடமிருந்து வெளிப்படுகிறது.

      சிற்றிதழ்களில் எழுதப் படும் கவிதைகளில்,தனி மனித உள் உணர்வுக் கருத்துக்கள்  இயலாமை ,தேவை,நினைவுகள் ஆகியவற்றைக்  கருதுகோளாகக் கொண்டவையாக உள்ளன.சமூகக் கவிதைகளில் காணும்
உள்ளுணர்வுகள், சீர்கேட்டை மாற்றும் தன்மையினதாகவும்,எதிப்பைத் தெரிவிக்கும் விதமாகவும் அமைந்து இருக்கின்றன.



அடிக்குறிப்புகள் ;
1)கார்த்திகேசு சிவத்தம்பி (கட்டுரையாளர் ),இலக்கிய இதழ்கள் ,ப .1
2)பி.குமரேசன்,தமிழில் சிறுபத்திரிக்கைகள் ,ப .81
3)கார்த்திகேசு சிவத்தம்பி (கட்டுரையாளர் ),இலக்கிய இதழ்கள் ,ப .12
4)தி.சு.நடராஜன்,இலக்கிய இஸங்கள்,ப.17
5)Gustav Jung,Psychology of Literatuer,p.175
6)R.மணிகண்டன்,தமிழ் அமிழ்தம்,ஏப்ரல்-99,ப.17
7)அ.அ.மணவாளன்,இருபதாம் நூற்றாண்டின் இலக்கியக்
கோட்பாடுகள்,பக்.37-38
8)க.அம்சப்பிரியா,தன்னம்பிக்கை,மே -97,ப -7
9)டி .மருதுபாண்டியன்,தேசிய வலிமை,ஏப்ரல்-99,ப -4
10)தி.சு.நடராஜன்,இலக்கிய இஸங்கள்,ப -23
11)டி .மருதுபாண்டியன்,தேசிய வலிமை,மார்ச்-99,ப -5


  
   

  

                                                                                                                                                                                                                  


வெள்ளி, 3 ஏப்ரல், 2015

தமிழ்ச்சிற்றிதழ்களில் நவீன படைப்புகள்

(பதிவுகள் இணைய இதழில் வெளிவந்த கட்டுரை )

        தமிழ்ச்சிற்றிதழ்களில்  நவீன படைப்புகள்



செ.சு.நா.சந்திரசேகரன்.
தமிழ்த்துறைத் தலைவர்,
ஜெயா கலை &அறிவியல் கல்லூரி,
திருநின்றவூர்
 
    தமிழ்மொழி வளர்வதற்கான ஊற்றுக் கண்ணாகச் சிற்றிதழ்கள் இக்கால கட்டத்தில் விளங்குகின்றன.தமிழில் வெளிவரும் சிற்றிதழ்கள், மேலை இலக்கியங்களுக்கு ஒருபடி மேலே சென்று, உலக இலக்கியத் தரத்தைத் தமிழுக்குத் தந்து  கொண்டிருக்கின்றன எனலாம். கவிதை, சிறுகதை, குறுங்கதைகள், திறனாய்வுகள்,துணுக்குகள் எனப் பல்வகைப்பட்ட இலக்கியங்களைத்தரத்தோடு வெளிவரச்செய்ய முயல்பவைகளாகவும்  இச்சிற்றிதழ்கள் அமைந்திருக்கின்றன.இலக்கியத் தாகத்தைக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களை ஊக்குவித்து,அவர்களின் படைப்பு ஆற்றலுக்கு தீனி போடக் கூடிய மற்றொரு பயனையும் சிற்றிதழ்கள் செய்கின்றன.

சிற்றிதழ் தன்மை

எதிர்காலத்தில் தமிழ்ச்சூழலில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அது சிற்றிதழ்களால் மட்டுமே நிகழும் என்பதை உறுதியாகக் கொள்ளலாம். 1 என்கிறது தமிழ் விக்கிப்பீடியா .மேலும் வணிக இதழ்களுக்கு மாறாகச்சிற்றிதழ்கள் அமைந்திருக்கும் தன்மையினைப் பேச்சுத் தமிழும் ஆங்கிலக் கலப்பும் மலிந்திருக்கும் பெரும் பத்திரிக்கைச்சூழலுக்கு முற்றிலும் மாறுபட்டு, தமிழை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றுபவை சிறுபத்திரிக்கைகள் 2  என மு.யாழினி வசந்தி கூறுவார்.தமிழக அளவிலும்,உலகில் தமிழர்கள் வாழும் பகுதியிலும் சிற்றிதழ்கள் பெரும்பான்மையாக இன்று வெளியிடப்படுகின்றன.இவ்விதமான சிற்றிதழ்களில் நவீன படைப்புகள் எவ்விதமான தன்மையினைப் பெற்றிருக்கின்றன என்பதை  ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
நவீன சிறுகதைகள்
சிறுகதைகள் தற்பொழுது,நவீன இலக்கியக் கோட்பாட்டுச் சிந்தனைகளோடு சிற்றிதழ்களில் எழுதப்பெறுவதைக்  காணமுடிகின்றது.தமிழ்ச்சிற்றிதழ்கள் ஆண்டு  தோறும் சுமார் இரண்டாயிரம் இதழ்கள் உலகில் வெளிவருவதாக அறிகிறோம்.அந்தளவிற்கு இணையங்களும்,வணிக இதழ்களும், சிற்றிதழ்ச்செய்திகளும் சிற்றிதழ்களின் வரவை அறிவித்துக் கொண்டே இருக்கின்றன. தமிழம்,கீற்று,கூடு,நக்கீரன்(கனடா), தமிழ் மணம் போன்ற இணைய தளங்களில் தொடர்ந்து சிற்றிதழ்களின் வரலாறு மற்றும் திறனாய்வுகள் வெளிவருகின்றன.அவற்றில் சிறுகதைகள் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றன. சுந்தரசுகன், தொடரும், முங்காரி, ஓடம், பயணம்,நிழல்,கனவு,சதங்கை,இலக்கு போன்ற சிற்றிதழ்களில் நவீன கோட்பாட்டு அடிப்படையில் சிறுகதைகள் வெளியிடப்படுகின்றன. வன்மி, இரா.நடராஜன், ஆதவன் தீட்சண்யா, வா.மு.கோமு, கழனியூரன் விசும்பு, ஆ.சந்திரபோஸ் போன்ற எழுத்தாளர்கள் இவ்விதமான சிறுகதைகளை எழுதுகின்றனர்.
நனவோடை உக்தியைப் பயன்படுத்தி எழதும் சிறுகதைகள் அதிகத்திருப்பைதைக் காண முடிகின்றது.மொழிநடை ஒவ்வொரு சிறுகதையிலும் வேறுபாட்டைக் கொண்டவையாகவும், வாசகரின் மனவோட்டத்தைச் சுண்டி இழுக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது.
தேவரசிகன் எழுதிய நாங்கேட்டேல ஏகே எனும் சிறுகதை சுந்தரசுகன் இதழில் வெளிவந்தது. 3 அக்கதை உளவியல் சார் கோட்பாட்டை உள்புகுத்திய கதையாகவும், மொழிநடை சிறக்க எழுதியதாகவும் இருக்கிறது.சமுக வெளிப்பாட்டை நவீனத்துடன் எடுத்துரைக்கும் சிறுகதைகள் அதிக அளவில் எழுதப்பெருகின்றன.உதாரணமாக விலங்குகள் வதைபடுவதை, உறுப்பு எனும் கதை நேர்த்தியாக எடுத்துரைக்கிறது.இக்கதையை பா.சத்தியமோகன் கனவு இதழில் எழுதியுள்ளார். ‍‌4 பின்நவீனதத்துவச் சிறுகதைகளாகவும், மாய எதார்த்தவாதச் சிறுகதைகளாகவும், பல கதைகள் எழுதப் பெறுகின்றன.
நவீன கவிதைகள்
கவிதைகள் தமிழ்மொழியின் தன்மையினை உலகமொழிகளுக்கு மேலாக எடுத்துச்சொல்லும் அரிய பணியினைச்செய்கின்றன. படிமக்கவிதைகள், குறியீட்டுக் கவிதைகள் பெண்ணியக் கவிதைகள் ,தலித்தியக் கவிதைகள் ,
உளவியல் கவிதைகள், மார்க்கியக் கவிதைகள், பின்நவீனத்துவக் கவிதைகள்,மிகைஎதார்த்தவாதக் கவிதைகள், மாய எதார்த்தவாதக் கவிதைகள் என மேலைநாட்டுக் கோட்பாட்டு இஸங்களைப் பயன்படுத்திக் கவிதைகள் இன்றைய சிற்றிதழ்களில்  வெளிவருகின்றன.வணிக இதழ்கள் இவ்வாறு கவிதைகளை வெளியிட மறுக்கும் நிலையில், சிற்றிதழ்கள் இவற்றை வளர்க்கின்றன.
திசையெல்லாம் தீ எனும் தலைப்பில் மாயவனின் கவிதை இயற்கையைப் படிம்மாக்கித் தந்துள்ளார். தீ என்பது பல்வேறு நிலைகளில் படிமமாக்கப் பட்டுள்ளது.அக்கவிதை,
சித்திரைச்சூரியன்
துப்பி விட்ட எச்சில்.

ரெளத்திரத்தின் ஆதி.

அடிவயிற்றுப் பசியின்
ஓர் சொல்.

தொட விடாத
தொட்டால் விடாத கம்பீரம்.

பனிக்காலத்தில்
வயது பாராது
அகப்படுத்தும் சிகப்பு நங்கை 5
என்பதாகும். இக்கவிதை சிறந்த படிமக் கவிதையாக உள்ளது.

மலர்களின் இதழ்களில்
நகங்களின் கீரல்.

காக்கியும் காவியும்
கற்புக் களத்தில்
சமாதிக்காகவாய் சண்டையிட்டு
சமாதியாகும் சமயங்கள் .

கோவணங்களின் உழைப்பு
சுவிஸ்-இல் குவிப்பு.

கெட்ட கூட்டுறவால்
தள்ளாடும் வருங்காலத்துத் தூண்கள்
எனும் இக்கவிதை,குறியிட்டுக் கவிதையாக,தேசியவளிமை இதழில் எழுதப்பெற்றதாகும்.சமுகத்தின் இழிந்த குரலை எடுத்தோதும் கவிதையாக வெளிப்பட்டிருக்கிறது.கூற வந்த நேரடிச்செய்தியை, வாசகர் மனதில் உள்ள அடிப்படைப் பண்பாட்டுச்சின்னங்களை தொடர்புப்படுத்திக் குறியீடாக்கி எழுதுவது நவீனமானதாகிறது.
  பெண்ணியக் கவிதைகளும் சிற்றிதழ்களில் பெண்ணிய எழுத்தாளர்களால் எழுதப் பெற்றிருக்கின்றன.சமஉரிமை, கட்டுப்பாடுகளைக் கட்டவிழ்த்தல், சுதந்திரம் எனக் கவிதைக்கான உள்பொருள்கள் பெண்ணியம் சார்ந்ததாகக் அமைகின்றன.
நாங்கள் துளிகள் அல்ல
உளிகள் .
நாட்டைக் காக்கும்
வேட்டை நாய்கள்.
நாங்கள் மிதியடி அல்ல
மிதிக்கப் போகும்
யானைக் கூட்டம்.
நாங்கள் வளையும் மூங்கில்
வளையப் போகும் வில்லும் அம்பும்.
நாங்கள் அடிமைகள் அல்ல,
விடியலை நோக்கும் வீராங்கனைகள். 7
எனும் கவிதை பெண்களின் நிலை சமூகத்தில் முன்னேற்றத்தை நோக்கி, வீறு கொண்டு எழுந்திருக்கிறார்கள் என்று பறை சாற்றுகிறது.

பிற படைப்புகள்
ஆய்வுக் கட்டுரைகள், திறனாய்வுகள் எனப் படைப்புகள் சிற்றிதழ்களில் பல்கிக் கிடக்கின்றன.இலக்கிய விமர்சனங்கள், சமூக விமர்சனங்கள், சமூகம் ஏற்க வேண்டிய/மாற்ற வேண்டிய கொள்கைக் கோட்பாடுகள் குறித்த கட்டுரைகளும் எழுதப் பெறுகின்றன.நேரடியான கருத்தைக் கூறும் விமர்சனங்களும் சமூகத்தை நோக்கியும்,இலக்கியத்தையும் நோக்கியும் வைக்கப் படுகின்றன.இவை காலங்களின் சக்கரத்தை நேர்வழிக்குத் திரும்பும் அஸ்திரங்களாக இருக்கின்றன.
இவை தவிர துணுக்குகள் நகைச்சுவைகள்,நவீன ஓவியங்கள்,உலக இலக்கியங்கள், உலக எழுத்தாளர்கள் எனச்
சிற்றிதழ்களின் ஆக்கங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.நவீன ஓவியங்கள்,நவீன படைப்புகள் என நவீனத்தை எளிய வாசகர்களிடமும் கொண்டு செல்லும் அரிய பணியைச் சிற்றிதழ்கள் செய்கின்றன.
  இணைய இதழ்களின் பெருக்கமும்,சிற்றிதழ்களின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுகிறன.சிற்றிதழ்களின் மாற்று வடிவமாகவும் இன்றைய இணைய இதழ்கள் இருக்கின்றன.இணையம் உலகத்தை கைக்குள் அடக்கி விடும் அற்புத சாதனம். சிற்றிதழ் எழுத்தாளர்கள் இணையத்திலும் நுழைந்து இணைய இதழ்களை நடத்துகின்றனர்.
  சிற்றிதழ்களை வாங்கிப் பயன் பெறுவோம்.சிற்றிதழ்கள் அழிந்து படாமல் பாதுகாத்து வைப்போம்.உலக இலக்கியங்களுக்கு மேலாகத் தமிழ் இலக்கியத்தைக் கொண்டு செல்ல சிற்றிதழ்களை ஆதரிப்போம்.

அடிக்குறிப்புகள்
3)       தேவரசிகன்,சுந்தரசுகன், ஏப்.98,ப-7
4)       பா.சத்தியமோகன்,கனவு.செப்.98,ப-5
5)       மாயவன்,முங்காரி,அக்.98,ப-12
6)       மு.மு.முத்தையா,தேசிய வலிமை ,நவம்.97,பக்-10-11
7)       தமிழப்பன்,தமிழ்ப்பாவை,ஜீலை.99,ப-13
   

   













சாமி பழனியப்பன் கவிதைகள் - ஒரு மதிப்பீடு

   (தமிழ்ப்பணி- மாத இதழில் வெளிவந்த கட்டுரை- சூன்-2003)

(படம் :நன்றி :தினமணி .காம் )


      சாமி பழனியப்பன் கவிதைகள் - ஒரு மதிப்பீடு
                                                -செ.சு.நா.சந்திரசேகரன்

பெருங்கவிப் பகலவர் சாமி.பழநியப்பரின் இனியதேன் கவிதைகளை வாசித்தேன். சந்தமும்> சத்தான பொருளும் கண்டு நெகிழ்ந்தேன். பெரிய பெரிய வல்லரசுகளையும்> பிரமுகர்களையும் ‘ஆட்டம்’ காண வைத்த புரட்சி முனையுடையது> ஊற்றெழுதியின் முனை. அதனாலேயே “வாள்முனையை விட வல்லமை கொண்டது ஊற்றெழுதியின் முனை” என்பர். ‘வாரச்செய்தி’யின் இதழாளர் கை போடும் கோலங்கள். சமுதாயத்தின் எழுச்சியைப் பறை சாற்ற வேண்டும் என்ற பேரவாவோடு நெம்புமுனைக் கவிதைகளாக வெளிவந்திருக்கின்றன. ‘காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான்’ என்று பாவேந்தனால் பாரட்டப்பட்டப் பத்திரிகைத் தளத்தலிருந்து கொண்டு பாரின் வளர்ச்சிக்கும் இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் அரும்பாடுபட்டவர் இக்கவிஞர். பல ஏடுகளிலும் தன் கவித்திறத்தால் சரித்திரத்தின் பழமைத் தளங்களைச் சாடிச் சவுட்டி அடித்துப் புத்துணர்வு தந்திருக்கின்றார்.
ஊன் உயிரில் தமிழுணர்வு உறைய> ஒய்யாரத் தமிழினம் வாழ, சீர்தூக்கித் துலாக்கோல் எழுத்தால் சீர்மை செய்தமைக்குப் பல கவிதைகள் இத்தொகுப்பிலுள்ளன. ‘தலை நிமிர் தமிழா’ ‘தமிழினத்திருநாள்’> ‘மலரும் தமிழும்’ என்ற கவிதைகள் தீர்க்கதரிசனமாய் இளைய தலைமுறையினர் காத்து> திருவள்ளுவம் ஒப்ப மனனம் செய்ய வேண்டிய மாப்புகழ்க் கவிதைகள். மதிகூர் செயல்திற ஆளுமைத்திறன் கொண்ட கவிஞர் போடும் செம்பாதையை – மதித்து மையப்படுத்தும் நிகழ்வுகள் சொர்க்கபுரியாகத் தமிழகத்தை ஆக்கும் என்பதில் பலத்த நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
“சாதி மத மென்று சாற்றும் சழக்கரைத் தாவித் தொலைத்திடடா” எனும் போது எத்தனை வேகம் கவிஞருக்கு? அருட்பிரகாசரும் தம் அருட்பாவில் ‘52’ இடங்களில் ‘சாதி பொய்யெனவே பகர்கின்றார்.’ “அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே” என்ற நேர்விளைவுக் கருத்திற்கு மாறாகக் கவிஞர் எதிர்விளைவுக் கருத்தாக்கம் தருவது காலத்தின் கட்டாயமாகிறது. இதைப் போலவே இந்தி எதிர்ப்புக் குரலும் வீறிட்டெழுகின்றது. இந்தி ஆதரவாளர்களைப் ;பன்னாடை’> ‘சொந்தமொழி பயின்றிடற்குச் செய்யாச் சோதாக்கள்’ ‘தறுதலைகள்’ என்று நிந்திக்கும் கோபம் கவிஞரின் தமிழின, தமிழ்மொழிப்பற்றை வெளிப்படுத்துகிறது.
“நீள்வையம் போற்றும் வகை வாழ வேண்டின்
ஆக்கிடுக மக்களுக்கென இலக்கி யங்கள்
அவனியே எதிர்த்திடினும் அஞ்ச வேண்டாம்.”
என்பதிலிருந்து> கருத்தால் இருதடம் போடும் இலக்கியவாதிகளில் ‘கலை மக்களுக்காகவே’ எனும் பிரிவில் நின்று புரட்சி நாயகனாகப் புதுத்தமிழின் நடைபாய்ச்சித் தாரக மந்திரம் ஒதுகின்றார். மக்களுக்கான இலக்கியங்களே மக்களைப் புதுமையாக்க முயலும். இதுவே வரலாற்றுச் சுழற்சியும் ஆகும். பாரதியும், பாவேந்தனும்> முடியரசனும்> இதையே செய்தனர். அவ்வகையில் பகுத்தறிவுப் பாவலர்கள் வரிசையில் ஒரு பெருமிடத்தைக் கவிஞர் பெறுகிறார். சிந்தனையாளர் சாக்ரடீஸின் சிந்தனைகளுக்கு ஒப்ப தன்னைச் சிந்தனைவாதியாகவும் பல கவிதைகளில் இனம் காட்டியுள்ளார்.
இனத்தின் களைகளைப் பிடுங்கவும் தீச்செயல் நடக்கும் பொழுது> அதைத் தடுத்திட உளம் பதைத்து எதிர்க்குரல் கொடுப்பதும் கவிஞர் பெருமக்களின் இயல்பு. அவ்வகையில் ‘சுடர்க்கதிர்’ முன்னால் சுள்ளிகள் சாம்பலாகும்’ எனும் கவிதை மிளிர்கிறது. சமூகப் பிரக்ஞையுடன் தன்னினம் வாழ வழிகானும் சிந்தனைப் போக்குக்கு நிறைய கவிதைகள் கட்டியம் கூறத் தக்கனவாகவுள்ளன.
‘நிலநடுக்கம்’ குறித்த கவிதையில் சமூகக்கேடர்களின் தோலை உரித்துக் காட்டி> இதனால் தானோ நிலமகளே கோபப்படுகிறாய் எனக்கேட்டு> இன்னுயிர்கள் மாய்ந்தமைக்கு வருந்துகிறார். எத்தனை கவித்துவம் சான்றோர் வரிசையில் இப்படிக் கற்பனை செய்து பார்த்தமையை மகாக்கவிஞர் சாமி பழநியப்பரிடமே காண்கின்றேன். தேசத்தின் நலனில் அக்கறையோடும்> வரலாற்றுப் புருஷர்களின் சரித்திரத்தைப் பதிவு செய்யும் தாகத்தோடும்> பெண்ணுரிமை பேசும் மோகத்தோடும்> தன் எழுத்துக்களைக் கவியரங்க மேடைகளில் வீச்சாய் வீசியிருக்கின்றார். கவிதை வரலாற்றில் பாவேந்தருக்குப் பின் எழுச்சியோடும்> தெளிவோடும் உலாவந்த உன்னதக் கவிப்பேரரசனான சாமி பழனியப்பனை இன்னும் மிகச்சரியான இடத்தில் வைத்து அவர்தம் கவிச்சிறப்பை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது கடமைகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது. இதைக் தமிழுலகம் செய்யப் பெருமைப் பட வேண்டும். 
அழகியல் கவிதைகளிலும் தன் கவித்துவத்தால் பரவசப்படுத்தும் கவிஞர் ‘காதலையும்’ விட்டு வைக்கவில்லை.
“சுண்ணாம்புச் சூளையிலே இட்ட கல்லாய்த்
   துயர்ப்படுத்தல் எதற்காக? ஐய கோவென்
கண்ணுறங்கும் வகையறியேன்: அவைகள் நம்மைக்
   காட்டுகெனப் பிய்த்தென்னைத் தின்ப தேனோ?”
என்ற இக்கவிதைகளில்> காதலியின் மனத்துயரைச் சங்க இலக்கியப் பாங்கில்> உவமைகளால் நிரப்பி விட்டிருக்கின்றார். அற்புதமான மனவுணர்வுச் சித்திரக் கவிதை இது. அடுத்துக் காதலன் பதிலளிக்கின்றான். அதில்>
“வான் முகட்டை நிலவணங்கு தழுவும்போது
    வலிவிழந்து போகுமெனது ஐம்புலன்கள்
கூன்பிறையைக் குவளையினை எட்பூ தன்னைக் 
    கொவ்வையினைக் காண்கின்ற போழ்தி லெல்லாம்
நனிங்கே உனையெண்ணி நலிகின்றேன்.”

என்று தன்னிலையை விளக்குகின்றான். நிலவு சூழும் அந்தப் பொழுதுகள் வான்முகட்டைத் தழுவுவதாகவும். தழுவாது நிற்கும் காதலன் பார்வையில் அது அணங்காகிறாதாம். என்ன அற்புதமான அழகுக் கவிதை> நிலவு>மண்>பொன்னி வாழ்க> அழகின் சிரிப்பு> நீயுமா வதைக்கிறாய் எனும் கவிதைகள் தீந்தமிழ்ப் பழங்கள்> ‘தமிழ்ப்பணி’ இதழில் வெளிவந்த ‘புதிய ஆத்திசூடி’ - மரபாக முன் எழுதியோரிடமிருந்து வார்த்தைச் சுருக்கத்தலும்>பொருள் பெருக்கத்தாலும் மாறுபட்டு முன் நிற்கும் பேறு பெற்றிருக்கிறது. ஒவ்வொரு இரு சீருக்குள்ளே கருத்தாறு பாய்கிறது. ‘ஒப்பியல் பயில்க’> ‘கேள்வி பெருக்கு’ என்பதில் தான் எத்தனை ஆழம். குழந்தைப் பருவப் பாடத்திட்டத்தில் இதைக் கட்டாயமாகத் தமிழக அரசு பாடமாக்க வேண்டிய கவிதையிது.
சமூகக் தீர்வுக் கவிதைகள் எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் வாழும். அது தவிர்த்து சமூகம் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும். இன்றையச் சூழ்நிழலயில் பொருந்தும் கவிதை ஒன்று 1947 – ஆம் ஆண்டே ‘பொன்னி’ இதழில் வெளிவந்திருக்கின்றது. அக்கவிதை>
“கல்வித் துறையினில் ஆக்கமில்லை – தீய
    கண்மூடிக் கொள்கைகள் மாளவில்லை
புல்லரின் சூழ்ச்சி முறுவலிலே - இங்கு
    பூக்கும் சுதந்திரம் யாருக்கடா?”
என்பதாகும். ‘பூக்கும் சுதந்திரம்’ எனும் வார்த்தைக்குள் ஆயிரமாயிரம் பொருள்களை நம்மால் எடுத்துக் கொள்ள முடியும். இந்தக் கேள்வி இப்போதும் பொருந்துமல்லவா?
சாமி.பழநியப்பர் – எழுத்தால் சாதனைகள் பல செய்த அற்புதக் கலைஞர். கவிப்பிரபஞ்சத்தின் பகலவன். குன்றாமலை அருவி. குடை தந்து காக்கும் காவலன். தனித்தமிழ்ப் பற்றாளர். பார்போற்ற வந்துதித்த பாவலர் அவர். இன்னும் எழுதி> எழுதிப் பன்னூல் தரத் தமிழினம் தாழ்ந்து உனைக் கேட்கிறது. எழுதுக இன்னும் கவிவேந்தே!  
------------------------------------------------------------------------------------------------------------