நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

திங்கள், 6 ஏப்ரல், 2015

சிற்றிதழ் கவிதைகளில் -உள்ளுணர்வு

சிற்றிதழ் கவிதைகளில் -உள்ளுணர்வு 

செ.சு.நா.சந்திரசேகரன்.

            இருபதாம் நூற்றாண்டின்  பிற்பகுதியில், அச்சுத் தொழில் வளர்ச்சியுற்ற பொழுதுகளில் இலக்கியங்கள் பல்கிப் பெருக ஆரம்பித்தன.வணிக இதழ்கள் செய்யத்  தவறிய இலக்கியப் பணியைச் சிற்றிதழ்கள் செய்து வந்தன. குறிப்பிட்ட இலக்கியத்தில் ஒவ்வொரு இதழும் உலக இலக்கியங்களுக்கு இணையாகப் புதுமை நோக்கில் படைப்புகளைத் தமிழ் உலகிற்குத் தந்தன.கவிதை, சிறுகதை,கட்டுரை,குறுநாவல்,திரை இலக்கியம்,நகைச்சுவை  எனப் பன்முக இலக்கியத் தளங்களில் சிற்றிதழ்கள் தம் பங்களிப்பை மேம்படுத்திச்  சாதனைகள் செய்து வருகின்றன.இதழ்கள் (Journals)தமிழின் நவீனமயப்பாட்டில் முக்கிய இடம் பெறுவதுடன் தமிழ் சில புதிய பரிமாணங்களைப் பெற உதவியுள்ளன.1 என்ற கார்த்திகேசு சிவத்தம்பியின் கருத்திற்கேற்ப இலக்கிய வகைகள் தமிழில் நவீன நிலையை எட்டியது எனலாம்.
           
           சிற்றிதழ்களின் பங்கு குறித்துக் கவிமாமணி பி .குமரேசன் கூறும்போது
நல்ல படைப்புகள் உருவாகப் படைப்பாளிகளுக்கு  வாய்ப்பளிக்கும் வள்ளலாகப் பல சிற்றிதழ்கள் பணியாற்றித் திகழ்ந்தன-திகழ்கின்றன.இளம் எழுத்தாளர்களின்  இதய உணர்வுகளுக்கு ஏற்றப் பாதை வகுத்துக் கொடுத்து,  ஆக்கத்திற்கு அரணாக நின்று பெரும் பங்காற்றிய பெருமை சிற்றிதழ்களுக்கு உரியதாகும் என்றால் அது மிகையாகாது.2  என்பார்.சிற்றிதழ்களின் போக்குக்  குறித்து, “முன்னிலை நவவேட்கை வாத (Avant-Gardist)அம்சங்கள்-இவை சிற்றிதழ்கள் பலவற்றில் காணப்பட்டன.அதாவது,சர்வதேசிய மட்டத்தில் நவமாகத் தோன்றிய இலக்கியக் கொள்கைகளை, போக்குகளை அறிமுகம் செய்வதிலும் அவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுவதிலும்
இச்சஞ்சிகைகள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன,”3  என்பார் அறிஞர்.

        
   சிற்றிதழ்களில், கவிதை இலக்கிய வகை பெரிதும் வளர்ச்சியுற்ற நிலையினை எய்தியுள்ளன.இயக்கம் சார்ந்த, இசங்கள் சார்ந்த, கோட்பாடு சார்ந்த கவிதைகள் எழுதப் படுகின்றன.  அவ்வாறான கவிதைகளில், படைப்பாக்கத்தின்
உள்நாதமாக விளங்கும் படைப்பாளனின் உள் உணர்வுகள் எத்தகு நிலையில் கவிதைகளில் பிரதிபலிக்கின்றன என்பதனையும் படைக்கப்படும் கதாமாந்தர்களின் வழி உள் உணர்வுகள் எவ்விதம் வெளிப்படுத்தப் படுகின்றன என்பதனையும் ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது .

உள்ளுணர்வு குறித்த வரையறை

உள்ளுணர்வுகள் படைப்புகளில் வெளிப்படும் நிலையானது சமூக நிகழ்வுகளோடு நேரடியான தொடர்பு கொண்டதாகும்.சமூக ஒழுக்கம் முதலியவற்றின் காரணமாக,மனவுணர்வுகள் சுதந்திரமாக வெளிப்படாமல் அழுத்தப் படுகின்றன. இவ்வுணர்வுகளும்அடிமனதில் ஆழமாய் மையம் கொண்டிருக்கும்  பாலியல் உணர்வுகளும்,நனவிலி மனத்தின் ஊடாக,அவனே அறியாத நிலையில் அவனுடைய சொல்லிலும் செயலிலும் வெளிப்படுகின்றன.கலைஞனிடம்  இத்தகைய உணர்வுகள்,அவனுடைய அறிவார்ந்த விருப்பங்களையும்,உணர்வுகளையும் மீறி அவனுடைய கலைப்படைப்பில் வெளிப்பட்டு விடுகின்றன.4  எனும் கருத்து உள்ளுணர்விற்கான வெளிப்பாட்டுத் திறனை விளக்குகிறது.உளவியல் அறிஞர் யுங் இதனைக் குறிப்பிடும் போது,”மனித உள்ளத்தின் உணர்வே (Human Psyche)எல்லா அறிவியல்களுக்கும் கலைகளுக்கும் கருவறையாக விளங்குவது .5என்பார்.

உள்ளுணர்வுக் கவிதைகள்

     படைபாளன்,சமூகத்தின் மூலம் தனக்குக் கிடைத்த அனுபவத்தை,அறிவை
மையம் கொண்ட தமது படைப்புகளைப் படைக்கின்றான்.ஆழ்மன உணர்வுகளில் தம் பழமை நிகழ்வுகள் அமிழ்ந்து கிடந்தாலும்,மேல்மன நனவோட்டத்தின் ஆளுமைகள் அவ்வப்பொழுதுகளில் ஆட்சி செய்கின்றன. படைப்பாளனுக்கும்,படைப்புக்கும் இடையில் உள்ள உளவியல் தாக்கம் சமூக முறையிலான தாக்கங்களோடு ஒப்புறவையோ,எதிர் உறவையோ கொண்டிருக்கின்றன என்பதை ஆய்வியலாளர்கள் படைப்புகளை  முன்வைத்து மெய்பிக்கின்றனர். இதனடிப்படையில் தனி மனித உணர்வுகள் படைப்பாளனைச் சார்ந்தோ,சமூகத்தைச் சார்ந்தோ  நேரான அல்லது எதிரிடையான கருத்துக்களை முன்வைப்பதாக அமைவதைக் காணமுடிகிறது.அவ்வாறு அமைந்த கவிதைகளில்,மன உணர்வுகளில் பதிந்து போன ஒருவரின் நினைவுகளை மீட்டிப் பார்க்கும் கவிதையாக,

ஞாபகத்தின் மெளன
வாசப்  படியேறுகிறதுன் பிம்பம்

திருப்புதலின்
ஏக கணத்தில் இருப்பிழந்த
உலகத்தில் பிடிப்புகள் நிராதரவுடன்
கலைகின்றன.

இடைவெளியின்
நெருக்கத்தில் சருகுகள்
மக்கிப் போகின்றன.

ஊசலில்
இழைந்தபடி சிறகசைத்து மறைப்பினும்
நீட்சி மடங்கிய உணர்குழலுக்குள்
தேங்கிக் கிடக்கிறது உன்
ஆசை .6

இக்கவிதையைக் காணலாம்.தனிமை,அமைதி இதனோடு பெரிதும் தொடர்பில் இருப்பவை நினைவுகள் உள்ளுணர்வின் வெளிப்பாடுகள் மனதிற்குள் சில நேரங்களில் இன்பத்தையும்,துன்பத்தையும்,சுகத்தினையும் தரவல்லதாய் அமைகின்றன.அவ்வாறு என்றோ தம்மோடு பழகி இன்று இல்லாது போன ஒருவருக்கான நினைவுப் பதிவுகளை இக்கவிதைஅழகாகபதிவுசெய்துள்ளது.இவ்விடத்தில்,”கவிதைதன்னியலானது,ஆகையால்அது,தன்னியலாக நிலை பெறும் தன்மையே  அதன் பொருண்மை;அது வேறு எந்தப் பொருளையும் யாருக்கும் தரும் கட்டுப்பாடு உடையதன்று,”7 தன்னம்பிக்கைஎனும் இதழில் க.அம்சப்பிரியா எழுதிய கவிதையில்,புறச்சுழ்ல்கள் அகச்சுழ்ல்களை எவ்விதம் பாதிக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டி உள்ளார்.இவ்வுணர்வுகள்,தனி மனித உணர்வுகளைப் பாதிக்கும் வண்ணமாக உள்ளன.அக்கவிதையானது ,

அழைக்கப் படாமலே
வந்து குவியக்
காத்திருக்கிறது
சோகக் குப்பைகள் .

ஆழமான அஸ்திவாரங்களால்
அரண் அமைக்கப்பட்ட
மனக் கட்டிடங்களையும்
விழ்த்த
காலம் பார்த்துக் கொண்டிருக்கிறது
சுற்றுப்புறக் காட்சிகள் .8

இதுவாகும். ம.செல்வபாண்டியனின் கவிதை மற்றொரு கோணத்தில் இருந்து வாழ்க்கையில் ஊடாடும் உணர்வுகளைத் தரிசிக்கிறது.அக்கவிதையில், புறக் காரணிகளால் மனம் அழுத்தப் படுகிறது என்கின்றார்.இம்மன உணர்வை,

நாம் அறியாமலேயே தோன்றி
முதுமையை அறிவிக்கும் நரைகள் என
மரணத்தின் பூனைப்  பாதங்கள்
                             நெருங்கிச் சமீபிக்கின்றன
வாழ்நாளில் ஒரு நாள் கழிவது
தெரியாமல் நம்மை
அர்த்தமற்றதாய் சூழல் அழுத்துகிறது .9

இக்கவிதை வெளிப்படுத்துகிறது .  

      மன உணர்வுக் கவிதைகளை ஆய்வு செய்ய,உளவியல் அணுகு முறையே  பெரிதும் ஆய்வில் பயன்படுகிறது.அதனை அடிப்படையாகக் கொண்டு,
இவ்வுள்ளுணர்வுக் கவிதைகள் குறித்து அறிஞர் தி.சு.நடராஜன் கூறும் பொழுது,  
வழக்கத்திற்கு மாறாக வருவனவும்,தம்மை அறியாமல் கட்டுப் படுத்தப் படாமல் நாத் தடுமாறியும்,நழுவியும் வருவனவும் உளறலாக விழுவனவும்,பேசுபவனின் அல்லது எழுதுபவனின் உள் மனத்தை அதிகமாகப்
புலப்படுத்தக் கூடியன10  என்பார்.

   சமூகச் சூழலைக் கண்ட படைப்பாளன் வெறுப்புணர்வில், அதைத் தன் கவித்துவத்தால் கோபத்தோடு பதிவு செய்கின்றான்.அவ்வாறான கவிதையாக,

இராமலிங்க வள்ளலாரின்
கசாப்புக் கடையை புத்தர்
திறந்து வைத்தார் .

பாவிகளை இரட்சிப்பதாய்  பாவத்திற்கு
பரிந்துரை செய்ததற்காக
ஏசு மீது வழக்குப் போடப்பட்டது

திருப்பதியில் மொட்டை போட்டு விட்டு
ஏசு தலைமறைவானார்.

கோவலனைத்  தேடிச் சென்ற கண்ணகி
காவல் துறை ஏற்பாட்டில்
விபச்சார ஒழிப்புச் சட்டத்தில்
கைது செய்யப்பட்டாள்.

நீதி தேவதைகளின் தராசுத் தட்டில்
காசு போட்டு விட்டு கற்பழித்தார்கள்.11
இக்கவிதையைக் காணமுடிகிறது.படைப்பு ,வாசிப்பாளன் ,படைபாளன் ஆகிய இம் மூன்று நிலைப் பாடுகளிலும் சமூகத்தின் தாக்கம் இல்லாது இருக்க முடியாது.இவற்றில் படைப்பாளனின் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்பட்டு
உள் உணர்வு அவனிடமிருந்து வெளிப்படுகிறது.

      சிற்றிதழ்களில் எழுதப் படும் கவிதைகளில்,தனி மனித உள் உணர்வுக் கருத்துக்கள்  இயலாமை ,தேவை,நினைவுகள் ஆகியவற்றைக்  கருதுகோளாகக் கொண்டவையாக உள்ளன.சமூகக் கவிதைகளில் காணும்
உள்ளுணர்வுகள், சீர்கேட்டை மாற்றும் தன்மையினதாகவும்,எதிப்பைத் தெரிவிக்கும் விதமாகவும் அமைந்து இருக்கின்றன.



அடிக்குறிப்புகள் ;
1)கார்த்திகேசு சிவத்தம்பி (கட்டுரையாளர் ),இலக்கிய இதழ்கள் ,ப .1
2)பி.குமரேசன்,தமிழில் சிறுபத்திரிக்கைகள் ,ப .81
3)கார்த்திகேசு சிவத்தம்பி (கட்டுரையாளர் ),இலக்கிய இதழ்கள் ,ப .12
4)தி.சு.நடராஜன்,இலக்கிய இஸங்கள்,ப.17
5)Gustav Jung,Psychology of Literatuer,p.175
6)R.மணிகண்டன்,தமிழ் அமிழ்தம்,ஏப்ரல்-99,ப.17
7)அ.அ.மணவாளன்,இருபதாம் நூற்றாண்டின் இலக்கியக்
கோட்பாடுகள்,பக்.37-38
8)க.அம்சப்பிரியா,தன்னம்பிக்கை,மே -97,ப -7
9)டி .மருதுபாண்டியன்,தேசிய வலிமை,ஏப்ரல்-99,ப -4
10)தி.சு.நடராஜன்,இலக்கிய இஸங்கள்,ப -23
11)டி .மருதுபாண்டியன்,தேசிய வலிமை,மார்ச்-99,ப -5


  
   

  

                                                                                                                                                                                                                  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக