நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 31 ஜூலை, 2021

காற்றைத்தேடும் பலூன்கள்

 காற்றைத்தேடும் பலூன்கள்





முன்னதும் பின்னதுமான காலத்தால்

ஊதப்பட்ட பலூன்கள்

காற்றிலாடுகின்றன

உள்நுழைந்த தூசிகளுடன்

மூச்சுத் திணறிப்போய்.

காற்றைத் தேடித் தேடி அலைகின்றன.


அதீதத் தீண்டாமையானது

சாதியை விட அந்தத் தொற்று.


இயல்பை மறந்த நடத்தைப்பிறழ்வுகள்

மார்பிடித்துக் கொண்டு

மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடுகின்றன


எப்படியாயினும் பிழைத்தாக.


வெளிறிய பயம்

முகத்திலிருந்து பிய்ய

அமானுஷ்ய ஓசைகளால் நிரம்பிய

வார்த்தைகள் உள்ளாழம் வரை சென்று

நைய்க்க.

புடைத்த நெற்றியில்

உயிர் ஒப்படைத்த கடவுளின்

சின்னம் வெளிர.


எங்கும் மரணஓலம்.



சுடுகாட்டிலும் வரிசை வரிசையாய்

உடல்கடுக்கக் கிடந்தன பிணங்கள்.

சடலங்கள் சடங்குகள் அற்றுப் போகின்றன

மூலத்தைத் தேடி...


----பாரதிசந்திரன் ----



 நன்றி  ஈகரை தமிழ்க் களஞ்சியம்

ஞாயிறு, 15 நவம்பர், 2020

தாயை மறந்தது ஏனோ?

தாயை மறந்தது ஏனோ?

கோயில் வாசலில் கேட்ட

வித வித பிச்சை ஒலிகள்

நெஞ்சை கழற்றித் தூரப்போட்டன .

 

தோள் சுருங்கிய தாயின் குரல் உள்நுழைந்து

பின்புலப்   படமுடன்  கதை  விரிந்தது.

எச்சூழ்நிலை தள்ளியது அவளை?



எல்லாம் வல்ல தான்தோன்றி அவன்

வாசலை ஏன் வறுமையின்

சின்னமாக்கினான்?

 

சாலைகளின் நடுவில்,

பேருந்து  நிறுத்தத்தில்,

தொடர் வண்டிக்குள் பூங்காவில் 

இப்படியாய் தாயை நிறுத்திய

எவனோ ,எவளோ-

 தாய்ப்பால் குடித்த அவர்களின்

வாயை வெட்டிப் பிய்த்தாலென்ன ?

 


தலை மேல் கை வை

வாழும் என் வாழ்வென

கைதட்டி வரும் மாதொரு பாகருக்குப்

பத்தோ ,ஐம்பதோ

தரும் தருமர்களே

பிச்சைத் தாய் வருவது

மறந்து போனது ஏனோ ?

 


பள்ளியில் பணம் கட்டிப் படிக்க வைத்த

பாவம் போக்க, முதிர்ந்த பொழுது பணம் கட்டி

அனுப்பி வைத்தாயோ முதியோர் இல்லத்திற்கு ?

அவளும் பிச்சைத் தாய் தானோ?

நன்றி  இனிது இணைய இதழ் 

ரசவாதியின் ரசக்கலவை

ரசவாதியின் ரசக்கலவை

நான் வெகுவிரைவில் நிலைகுலைந்து

உருமாறிப் போனாலும் போவேன்.

அந்தத் தடுமாற்றத்தில் பைத்தியக்காரனாகி எங்கோ எதையோ

இழந்தவனைப் போல் தேடித் திரிந்தாலும் திரியலாம்

 

அவ்வாறு நானிருந்தால்

கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்

 

யாரையும் அடிக்கவோ, கடிக்கவோ

மாட்டேன் என்று தான் நினைக்கின்றேன்.

அப்படி எதாவது செய்தால்

சும்மா விட்டு விடாதீர்கள்.

 

கை, கால்களை நன்கு கட்டி

ஆற்றிலோ, குளத்திலோ எறிந்து விடுங்கள்.

ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? என்று

யாராவது கேட்டால், நீங்கள் ஒன்றும் கூறாதீர்கள்.

நான் அவர்களைச் சும்மா விடுவதில்லை.

நாயாகவோ நரியாகவோ அல்லது பேயாகவோ வந்து

கை, கால்களைப் பிய்த்துச் சதைகளைக் கீறி

இரத்தம் குடிக்காமல் விடமாட்டேன்.

 

நீங்கள் எதற்கும் பயப்படாதீர்கள்

உங்களை நான் ஒன்றும் செய்திட மாட்டேன்.

 

எனக்குப் பசி வரும், அப்போது உணவில்லையெனின் கோபம் வரும்.

கோபம் வந்தால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது.

 

எதுவும் தரவில்லையென்றாலும்

நீங்கள் எதற்கும் பயப்படாதீர்கள்.

உங்களை நான் ஒன்றும் செய்திட மாட்டேன்.

 

நீங்கள் எப்பேர்பட்ட ரசவாதி என்று தெரிந்தே

இப்போது உடனாளியாய் இருக்கின்றேன்.

 

அறியாமல் நீங்கள் சேர்மானம் கூட்டவில்லை.

அறிந்தே ரசக்கலவை ஆக்குகிறீர்கள்.

 

இன்னது இன்னதென்று தெரியாமலா

தீமூட்டிக் காய்ந்தமரம் சாய்க்கிறீர்கள்…

 

சொற்களை வைத்தேச் சோறாக்கித் தலையிலூற்றுகிறீர்கள்…

 

எனக்குத் தெரியும்… உலக தத்துவம்.

 

காற்றே குற்றவாளி.

இடியும், மழையும்

என்னாலில்லை என்கிறீர்கள்.

மேகமே… உனை வரச்சொன்னது யார்? என்கிறீர்கள்

 

இந்தப் பைத்தியத்திற்குத் தெரியும்

இடியும், மழையும் அதாகவே தான் வருமென்று.

பாரதிசந்திரன்

நன்றி  இனிது இணைய இதழ் 

நரித்தனமானது வார்த்தையின் பொருள்

நரித்தனமானது வார்த்தையின் பொருள்


வார்த்தைகள் சில பொழுதுகளில்

விலை போய்விடுகின்றன வக்கற்று.

 

சில தடிமன் ஆகவும்

சில நோஞ்சான் ஆகவும்

அவதியாய் பிரயோசனப்படுகின்றன.

அவை ஒவ்வொன்றும் உள்ளொன்றும் புறமொன்றும்

வைத்துப்பேசுகின்றன..

 

வார்த்தை ரோசம்அற்றது அல்ல.

சடமும் அல்ல .

அது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரிஆனது…

 

இழிந்ததும் கெட்டதும் என்று உண்டு

இழிசாதி என்பதை போல.

மங்கலம் ஆகி மணி மகுடம் தரிப்பதும் உண்டு

உயர்சாதி என்பதை போல.

 

“கோபத்தில் வந்த வார்த்தை அது. அதைச் சும்மா சும்மா சொல்லி மாரடிக்காதே”

வார்த்தை சாகடிக்கவும் செய்யும் கற்புக்கரசி கதை…

 

“இவர்களை மன்னியும் ஆண்டவரே”

வார்த்தை அருள் தரவும் செய்யும்

மேய்ப்பரின் கதை…

 

இவைகளோடு பயணிக்கத் தொடங்கி

அங்கொன்றும் இங்கொன்றுமாய்

சிறகிழந்த ஈசலாய்

செத்துப்போன – என்

வாழ்விழந்த வார்த்தைகள்…



பாரதிசந்திரன்

நன்றி இனிது இணைய இதழ்

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

மனஸ்தாபம் – பாரதிசந்திரன் கவிதை

 

மனஸ்தாபம் – கவிதை

சதாகாலமும் நிந்திப்பதிலேயே உன் ஆட்டம்

எதிலிருந்தும் தொடங்குகிறன.

புள்ளப்பூச்சியின் புடுங்கலை ஒத்த

நச்சரிப்பில் அடி நாளங்கள் கூசுகின்றன.

எரிமலையின் வெடிப்பை

வார்த்தைகளாக்கி வதம் செய்கின்றாய் சுகமாய்.

 

சாகாவரம் பெற்ற மலைகளை மடுவாக்குகின்றாய்.

அற்பப் பதரென ஊற்றுப் பெருவெள்ளத்தை உதறித் தள்ளுகிறாய்.

 

அலமார்ந்து சுருங்கி விடுகின்றேன் ஆமையாய்.

நீ- என்னுடன் போராடாதே…

உழுவை மீனாய்

வழுவிச் செல்ல முடியா கழுதை நான்.

 

எனக்குள்ளேயே இருந்து எனையே அழிக்கும்

ஆட்டத்தை

எனக்குள்ளிருக்கும் என் மனமே

எப்போது விடுவதாக உத்தேசம்?

 நன்றி :  இனிது மின்னிதழ்

மூளைத் தொழில்- பாரதிசந்திரன் கவிதை

 

மூளைத் தொழில்


கூறெனப் பாய்ந்து

வானத்தில் ஏறும் வல்லூறுகளின் பார்வையில்

பூமி சிறிதானது.

 

பெய்த சிறுநீர்,  பகீரதன்

வரவழைத்த புனித நதியெனப்

பிரவாகமெடுக்கின்றது.

 

பிடரி சிலிர்த்த குதிரைகள்

கோவேறு கழுதையாய் மாறி

தொண்டை கணைத்துப் பேப்பர் தேடி ஓய்ந்தன‌.

கம்பெடுத்தவன் தண்டல்காரன்.

 

திசையெங்கும் அவள் அரிதாரம்.

கற்றவை மறந்து தேடி அலைகிறாள்

சிவப்புத் தாமரை சரஸ்வதி.

படிச்சிப் படிச்சி நீர்த்தாள்,

சிவப்புப்புழுக்கள் உண்டு நெளியும்

மூளைக்காரனிடம்.

 

கடலுக்குள் நிசப்தமென

அறிவுலகம் துகில் கொள்கிறது.


நன்றி : இனிது மின்னிதழ்

செவ்வாய், 21 ஜூலை, 2020

தூக்கம்



எனக்குள் எதுவாகவோ மறைந்து கொண்ட தூக்கம்


உண்ண ஆகாரம் தேடி 
அலையும் தேனீயைப் போல் 
மலர்ந்த கண்களில் 
உலர்ந்தது தூக்கம்

உள்ளிருந்த காலம் 
சுயம் மறந்த உள்ளார்ந்த லார்வா

வெளிப்படும் சதுக்கப்பூதம்
 உடல் காட்டி உடல் எடுத்த சுவிகாரம்

மறைப்பின் சிம்மாசனம் 
அது முதலாளித்துவம் அதனால் மறப்பீர்.

கோசங்கள் வான் தொட்டது.

முடிவு திறப்பின் பாதாளம்

புல்தரை மணம் மேடோ புகுத்திப்பார்க்கும் 
மூளை மழுக்கியின் நர்த்தனங்கள்

ஆவலோடு அமிழ்த்தி ஆழ்ந்து
 உள்குளிர வந்து வாய்க்கிறது

நிகழ்ச்சிக் காலசர்ப்பம் தீண்ட 
உமிழும் விஷத்தைவிடப் 
பிடிப்புத் தளர்வாகி 
மாறி மாறி மொய்த்துத் தின்கிறது
எனக்குள் அதுவாகவே மறைத்துக் கொண்ட தூக்கம்.

நன்றி   தமிழ் ஆதர்ஸ்



திங்கள், 20 ஜூலை, 2020

கவிதையும் ரோட்டுக்கடை காளான் ஃப்ரையும்

கவிதையும் ரோட்டுக்கடை காளான் ஃப்ரையும்

கவிதையும்

ரோட்டுக்கடை காளான் ஃப்ரையும்

ஒன்றல்ல. இங்கொன்றும் அங்கொன்றும்

பொறக்கிக் கலக்க.

 

நுரைத்த கடல்

கக்கித் துப்பிய வார்த்தை.

கூழாங்கற்களாக்கி

மறை(பார்)க்கின்ற எழுத்தாக்கிகள்.

 

சன்னலோரக் கண்,

புவி ஆடிய ஆட்டம்.

மனம் பிறாண்டும் நனவோடை நிகழ்வு.

தராசுத் தட்டு இறங்கி ஏறி இறங்கி.

கவிதைத் தூம்பு பீறிட

அடைத்த அடைப்பு எடுப்பார் எவரோ?

 

முப்பாட்டன் சொத்து.

நான் கட்டிய வீடாகிறபொழுது,

ஆதிமூலமே கா

விதை மரமாகும்

மரமெல்லாம் விதையாகும்.

 

வெப்பப் பிரளயமோ?, தண்ணீர் ஊற்றோ?

அது – கலவையின் விஸ்வரூபம்.

எனவே, கவிதையும்

ரோட்டுக்கடை காளான் ஃப்ரையும்

ஒன்றல்ல இங்கொன்றும் அங்கொன்றும்

பொறக்கிக் கலக்க.


 நன்றி : www.inithu.com

https://www.inidhu.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%88-%e0%ae%95%e0%ae%be/

மூன்றாமிடத்தில் குரு

மூன்றாமிடத்தில் குரு

மனிதவாடை அற்ற சிலமாதப் பொழுதுகளில்,

பொரிக்காக வாய் பிளந்து அலைந்தன

கோயில் குளங்களிலெல்லாம் மீன்கள்.

 

கால்நடையோ, பறவையோ நீரருந்த வரும் போது,

மொசுமொசுத்த அகோரப் பசியுடைய

அந்த மீன்கள்,

முதலையாய் உருவெடுத்து

அதைக் குதறித் தின்றுவிடக் கூடாதென

கடவுளிடம் மண்டியிட்டு மன்றாடின.

 

கடவுளும் இவ்வாறே ஆசியளித்தார்…

“உங்கள் குத்தகைக்காரன் நூறாண்டு வாழட்டும்”

 

குத்தகைக்காரனுக்கு எங்கே தெரியும்?

மாதா – பிதா – குரு என்னவென்று.

 

மலை முகடுகளிலிருந்து உருண்டு வரும் பாறைகள் சிதற,

மேகத்திற்கும் குளத்திற்கும் நடுவே சூறாவளியொன்று

குளத்திலுள்ள மீன்களை அள்ளிச் சென்று,

பனிக்கட்டிகளுக்கு இடையே தூங்க வைக்கும்

கனவொன்றைக் கண்டன,

பசியாறத் துடித்த

மீன்கொத்திப் பறவைகள்.


 நன்றி  : www.inithu.com, (https://www.inidhu.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81/)

புதன், 9 ஜூலை, 2014

பிரவாகம் (கவிதை)

பிரவாகம்

மண்டையின் 
உள்கருகி
காது  வழி   வீரியத்துடன்
புகையாய்   சென்ற   நீயா
வானத்தில்    மேகமாய்  அலைவது?


 தேகத்தின்
செதிலொன்று   கழன்று
மீறிப் போய்த்    திரிந்து
உரு மாறிப்போன   நீயா
காற்றாய் உலகில் கடப்பது?

தூக்கச்   சுணங்கில்
வாய்வழிச்   சிந்திய
கொடு   பிரவாகமெடுத்து
பறவைச்  சிறகெடுத்த  நேரத்தில்
பனியாகிப் போன நீயா
வாழ்விக்கும் நீராய் இருப்பது?

வெளி உள்ளானது 
சித்தன் சொன்னது

உள் உள்ளுக்குள்
தீராது 
பயணத்தில்
முழ்கி சூன்யத்தைத்
தன் பெயராக்கி நின்றது.


நன்றி 
முத்துக்கமலம்.காம் 

வீட்டு நாய்


அந்த வீட்டில் செல்லமாய் 
ஒரு நாய்க்குட்டி வளர்ந்தது .
மனிதருக்கும் மனிதருக்குமான 
எல்லாம் போய் 
ஆறுகள் ஐந்தைக் கட்டித் 
தழுவிக் கொண்டன.

கட்டியவனைக் காட்டிலும் 
கட்டிக்கிடந்ததிற்க்கு ஏக உபச்சாரம்.

உணவுக்கான மெனு என்ன 
தனி சோப்பு என்ன 
விரிப்பு என்ன 
மாதந்தவறாத ஊசி என்ன 
கவனிப்பு சொல்லி மாளாது.

அதன் உலகைத் தாண்டிச் சந்தோசமாய் 
எப்படி உம்மோடு அது காலம் தள்ளும் .
கூட்டம் தவிர்த்து 
உறவு தவிர்த்து 
குஷி தவிர்த்து 
இன்னும் எத்தனை துறந்து 
இன்னும் எத்தனை தூறம் 
உன்னோடு அது வாழ வேண்டும்.

உண்மையில் 
அதற்குப் பேச முடியுமானால் 
என்னவெல்லாம் 
உம்மிடம் அது  கேட்க நினைக்கும் .

ஒரு தனித் தீவில் 
காட்டு யானைகள் 
உன்னைக் கட்டிப் போட்டுப் 
பாசம் காட்டுகின்றன.
நீ யார் எனப் புரிந்து கொள்கிறாய்
காட்டுநார்கள் பிய்த்து எதிர்ந்து 
ஓடி ஓடிக் 
களைப்பாறும் நாளில்  
நாயாக நீ மாறி 
மனிதனாக அது மாறி  

நாய்களை விட்டு விடுங்கள் 
அது அதுகளோடு அதுவாகவே 
இருந்து விட்டுப் போகட்டும்.








நன்றி 
முத்துக்கமலம்.காம் 

வியாழன், 6 ஜூன், 2013

மூளைத் தொழில்

மூளைத் தொழில்


கூறெனப் பாய்ந்து
வானத்தில் ஏறும் வல்லூறுகளின் பார்வையில்
பூமி சிறிதானது.

பெய்த சிறுநீர்  பகீரதன்
வரவழைத்த புனித நதியெனப்
 பிரவாகமெடுக்கின்றன.

பிடரி சிலிர்த்த குதிரைகள்
கோவேறு கழுதையாய் மாறி
தொண்டை கணைத்துப் பேப்பர் தேடி ஓய்ந்தது.
கம்பெடுத்தவன் தண்டல்காரன்.

திசையெங்கும் அவள்
அரிதாரம்.
கற்றவை மறந்து தேடி அலைகிறாள்
சிவப்புத் தாமரை சரஸ்வதி.
படிச்சிப் படிச்சி நீர்த்தாள்.
சிவப்புப்புழுக்கள் உண்டு நெளியும்
மூளைக்காரனிடம்.

கடலுக்குள் நிசப்தமென
அறிவுலகம் துகில் கொள்கிறது.
         
               பாரதிசந்திரன்   திரு நின்றவூர்.

பிச்சைத் தாய்

பிச்சைத் தாய்

கோயில் வாசலில் கேட்ட 
வித வித பிச்சை ஒலிகள் 
நெஞ்சை கழற்றித் தூரப்போட்டன .
தோள் சுருங்கிய தாயின் குரல் 
உள் நுழைந்து 
பின்புலப் படமுடன் கதை விரிந்தன .
எச்சூழ்நிலை தள்ளியது அவளை .

எல்லாம் வல்ல தான் தோன்றி அவன் 
வாசலை ஏன் வறுமையின் 
சின்னமாக்கினான் .

சாலைகளின் நடுவில்,பேருந்து  நிறுத்தத்தில்,
தொடர் வண்டிக்குள் பூங்காவில் இப்படியாய் 
தாயை நிறுத்திய 
எவனோ ,எவளோ-
 தாய்ப்பால் குடித்த அவர்களின் 
வாயை வெட்டிப் பிய்த்தாலென்ன ?

தலை மேல் கை வை 
வாழும் என் வாழ்வென 
கைதட்டி வரும் மாதொரு பாகருக்குப் 
பத்தோ ,ஐம்பதோ 
தரும் தருமர்களே 
பிச்சைத் தாய் வருவது 
மறைந்து போனது ஏனோ ?

பள்ளியில் பணம் கட்டிப் படிக்க வைத்தத் 
தோஷம் போக்க 
முதிர்ந்த பொழுது பணம் கட்டி
அனுப்பி வைத்தாயோ 
முதியோர் இல்லத்திற்கு ?
அவளும் பிச்சைத் தாய் தானோ?

தாய்க்குத் திவசம் 
ஒலி வசியம் செய்தவருக்கு 
தடித்த பணம்  தட்டில் வைத்தாய்.
வயிறு பிழிந்த பசியோடு நின்ற 
பிச்சைத் தாயைப் 
பிண்ட சோறு பொறுக்க விட்டாய் .

சுற்றுப்புறக் கல்வி

வீட்டுக்குள் ஏசி போட்டாச்சு 
ஓசோனுக்குள் ஊசி குத்தியாச்சு

காதைப் பிளக்கும்-சத்தம்-அது
சாகும்பறை கொட்டும் நித்தம்

மரம் வளர்த்தால் மழை 
அதைத் 
தினம் மறந்தால் பிழை

பணப்பை
நிரப்ப கலக்கின்றோம்
நீரில் சாயம் .
வாய்க்கு நீரின்றித் தவிக்கின்றோம் 
வாழ்வு மாயம் .

காடழித்து நாடாகுமோ
கண்ணழித்து சுகமாகுமோ


வீட்டுக்கொரு மரம் வளர்த்தால் 
வீறு கொண்டு மழை பிறக்கும்

வெப்பச் சலனம் தடுத்திடுவோம் 
வெற்றிடங்கள் யாவும் மரம் வளர்த்திட்டால்

மரத்தை வளர்ப்போம் மகத்துவத்தை 
மனிதத்தைக் காப்போம்

ஏசி காற்றை விட 
ஓசிக் காற்று உயர்ந்தது .

குருவாய் ஆனவர்

குருவாய் ஆனவர்
--------------------------------
மேடும் பள்ளமுமான 
கிராமத்தில் 
சரித்திரங்கள்  உலவும் 
பழைய வீடு.
வயல்வெளியும் ,சுய தொழிலும் நசுங்கத் 
தேடித் தேடிச்  சம்பாத்தியம் பண்ண 
வான் பரந்த சொந்தங்கள் .
சொத்தும் சுகமும் 
 பட்டங்களாய் உருவெடுக்க 
மாயவித்தைக் காரராய் 
மாறிப் போனார் சிலகாலம் .
மிச்சம் மீதி ஒருவனுக்கே 
ஊர் மெச்ச 
மங்கலம் ஊதி முடித்தவுடன் 
வான் விரிந்து பறந்தன சிட்டுகள்.
கூடுவிட்டு கூடு பாய்ந்த 
கலை தந்த குருவானார் சிலகாலம்.
இருட்டுக்குள் துலாவி 
கையேந்தி கையேந்தி 
இதய ஓட்டை இளவரசிக்கு 
ஏணி கொடுக்க விழைந்து 
துணி போர்த்திச் 
சாய்ந்து போனார் சிலகாலம் .
அவர் மனம் போலவே 
கொஞ்சம் கொஞ்சமாய் 
இறந்து கொண்டிருந்தது
அந்த 
சரித்திர வீடு .
வைத்தியர் இல்லா ஊரில் 
கை வைத்தியத்திலேயே
உயிர் ஓட விட்டார் சிலகாலம்.
இத்தனையும்
மெளனமாய் மென்று 
மொக்கை வாய் சிரிக்கும் 
என் அப்பாவை விட 
எந்த ஜென் துறவி 
குருவாய் ஆனவர் 

kavithai

சாகும் வரம் தந்தாய் ......
-----------------------------------
கோபங்களைத் தாங்கித் தாங்கி 
அரண்மனை விரித்து,
ஏரி கருகி 
புழு வைத்தப் பிணமென 
உள்நுழைந்து தீராப்பசியோடு
அரவெனத் தின்று துப்பினாய்
உன்னுலகை ..
இடுகாடும் எருமையும் வயல்வெளியாகிக் 
குண்டுக் கட்டாய் 
பறவையை ஜீரணித்தாய்.
இலை தளை காயாகிப் பூமி மேலர்ந்து 
மேகத்தை உறிஞ்சி 
கால்வழிப் பெய்தாய்.
மகிசாசூர பத்தினியாய் இருமலை தொட்டுக் 
கால்பதித்து 
யோனி காட்டி 
வாசுகி எனை 
முழுதாய் உள்திணித்தாய் 
காரணமேயின்றி 
சாகும் வரம் தந்தாய். 
     ----பாரதிசந்திரன் --

வெள்ளி, 30 டிசம்பர், 2011

இரவு


எத்தனையோ,  திரும்பிப்பார்த்தும்
எகிறி முறைத்தும் அனுசரித்தும்
அஸ்தமித்தும் வந்தவை

எவ்வளவைவிழுங்கியிருப்பேன்.
ஏனிது என்று பார்த்திருப்பேன்.
விழுங்கிய இரவுகளில்
விடியுமட்டில் அட்டகாசம்.
விக்கல் ஏப்பத்துடன்
வியாக்கண விளம்பரங்கள்.
பகலின் பிரசவ வேதனையைப்
பார்த்துத் தடவியதால்,
உடலைப் பறக்கச்சபித்தாய்.
பாவம்-உனக்குள் மறைந்தேன்.
சிலதை விரட்டி
சிந்தனைகளை சிருஷ்டிக்க
சிக்கனமாய்
உன்னுடன்  ஒரு உடன்படிக்கை.
               


                            நன்றி-தொடரும்-இதழ்-ஜனவரி-96

தீக்குச்சிப் பொட்டுகள்

சமூதாயத்தில
இளம் அரும்புகள்
தீக்குச்சிக்குப்பொட்டு வைக்கப்போய்

தானே பொட்டாகிப்
போனார்கள்.



துணிக்குச்சாயம் காய்ச்சப்போய்
தானே
சாயமிழந்து போனார்கள்.


இங்குதான்
அரும்புகளே ஆணிவேரைக்
காப்பாற்றும் அதிசயங்கள்.


மார்க்கண்டேய அடிமைத்தனத்தில்
இரணிய ஆதிக்கங்கள்.

                    நன்றி-கவிக்காவேரி-99




     

வியாழன், 15 டிசம்பர், 2011

ஹைபுன் கவிதை

கையில் குழந்தையுடன்
படியில் நின்றிருந்தவர்களைத் தள்ளிக் கொண்டு  வந்து நின்றார்.

பேருந்தின் நடனத்தை விட அவரின் நடனம் மோசமாய் இருந்தது.

குழந்தையை யாரிடமாவது  கொடுத்து விடலாம்
என்ற முயற்சிக்கு  அழுகைப் பலனளிக்க வில்லை.

யாரும் இடம் தராததால்
நான் எழுந்து  இடம் கொடுத்தேன்.

அசதியுடன் தூர நின்றேன்.
சிறிது நேரம் கழித்துத் திரும்பிப்பார்த்தால் ,

அங்கே மூன்று நாள் அசதியுடன் 
நான் தூங்கிக்கொண்டிருக்கிறேன்
குழந்தை வடிவில்.

புதன், 19 அக்டோபர், 2011

ரத்தச் சூடு--

பனிக் காலத்தில் வெப்பமான 
ரத்தச்   சூடு ,உருண்டையாய்  மலையில் இருந்து 
 தீபக்  காடாய்  எரிந்து மீண்டும் 
பனியாகி  மலையானது .
மலை எரிவதும் 
பிறகு பனி  ஆவதும் 
இப்படியே பூனை  புசித்த போது
 வாழ்க்கை  காணாமல்  போனது .....