நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

சாமி பழனியப்பன் கவிதைகள் - ஒரு மதிப்பீடு

   (தமிழ்ப்பணி- மாத இதழில் வெளிவந்த கட்டுரை- சூன்-2003)

(படம் :நன்றி :தினமணி .காம் )


      சாமி பழனியப்பன் கவிதைகள் - ஒரு மதிப்பீடு
                                                -செ.சு.நா.சந்திரசேகரன்

பெருங்கவிப் பகலவர் சாமி.பழநியப்பரின் இனியதேன் கவிதைகளை வாசித்தேன். சந்தமும்> சத்தான பொருளும் கண்டு நெகிழ்ந்தேன். பெரிய பெரிய வல்லரசுகளையும்> பிரமுகர்களையும் ‘ஆட்டம்’ காண வைத்த புரட்சி முனையுடையது> ஊற்றெழுதியின் முனை. அதனாலேயே “வாள்முனையை விட வல்லமை கொண்டது ஊற்றெழுதியின் முனை” என்பர். ‘வாரச்செய்தி’யின் இதழாளர் கை போடும் கோலங்கள். சமுதாயத்தின் எழுச்சியைப் பறை சாற்ற வேண்டும் என்ற பேரவாவோடு நெம்புமுனைக் கவிதைகளாக வெளிவந்திருக்கின்றன. ‘காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான்’ என்று பாவேந்தனால் பாரட்டப்பட்டப் பத்திரிகைத் தளத்தலிருந்து கொண்டு பாரின் வளர்ச்சிக்கும் இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் அரும்பாடுபட்டவர் இக்கவிஞர். பல ஏடுகளிலும் தன் கவித்திறத்தால் சரித்திரத்தின் பழமைத் தளங்களைச் சாடிச் சவுட்டி அடித்துப் புத்துணர்வு தந்திருக்கின்றார்.
ஊன் உயிரில் தமிழுணர்வு உறைய> ஒய்யாரத் தமிழினம் வாழ, சீர்தூக்கித் துலாக்கோல் எழுத்தால் சீர்மை செய்தமைக்குப் பல கவிதைகள் இத்தொகுப்பிலுள்ளன. ‘தலை நிமிர் தமிழா’ ‘தமிழினத்திருநாள்’> ‘மலரும் தமிழும்’ என்ற கவிதைகள் தீர்க்கதரிசனமாய் இளைய தலைமுறையினர் காத்து> திருவள்ளுவம் ஒப்ப மனனம் செய்ய வேண்டிய மாப்புகழ்க் கவிதைகள். மதிகூர் செயல்திற ஆளுமைத்திறன் கொண்ட கவிஞர் போடும் செம்பாதையை – மதித்து மையப்படுத்தும் நிகழ்வுகள் சொர்க்கபுரியாகத் தமிழகத்தை ஆக்கும் என்பதில் பலத்த நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
“சாதி மத மென்று சாற்றும் சழக்கரைத் தாவித் தொலைத்திடடா” எனும் போது எத்தனை வேகம் கவிஞருக்கு? அருட்பிரகாசரும் தம் அருட்பாவில் ‘52’ இடங்களில் ‘சாதி பொய்யெனவே பகர்கின்றார்.’ “அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே” என்ற நேர்விளைவுக் கருத்திற்கு மாறாகக் கவிஞர் எதிர்விளைவுக் கருத்தாக்கம் தருவது காலத்தின் கட்டாயமாகிறது. இதைப் போலவே இந்தி எதிர்ப்புக் குரலும் வீறிட்டெழுகின்றது. இந்தி ஆதரவாளர்களைப் ;பன்னாடை’> ‘சொந்தமொழி பயின்றிடற்குச் செய்யாச் சோதாக்கள்’ ‘தறுதலைகள்’ என்று நிந்திக்கும் கோபம் கவிஞரின் தமிழின, தமிழ்மொழிப்பற்றை வெளிப்படுத்துகிறது.
“நீள்வையம் போற்றும் வகை வாழ வேண்டின்
ஆக்கிடுக மக்களுக்கென இலக்கி யங்கள்
அவனியே எதிர்த்திடினும் அஞ்ச வேண்டாம்.”
என்பதிலிருந்து> கருத்தால் இருதடம் போடும் இலக்கியவாதிகளில் ‘கலை மக்களுக்காகவே’ எனும் பிரிவில் நின்று புரட்சி நாயகனாகப் புதுத்தமிழின் நடைபாய்ச்சித் தாரக மந்திரம் ஒதுகின்றார். மக்களுக்கான இலக்கியங்களே மக்களைப் புதுமையாக்க முயலும். இதுவே வரலாற்றுச் சுழற்சியும் ஆகும். பாரதியும், பாவேந்தனும்> முடியரசனும்> இதையே செய்தனர். அவ்வகையில் பகுத்தறிவுப் பாவலர்கள் வரிசையில் ஒரு பெருமிடத்தைக் கவிஞர் பெறுகிறார். சிந்தனையாளர் சாக்ரடீஸின் சிந்தனைகளுக்கு ஒப்ப தன்னைச் சிந்தனைவாதியாகவும் பல கவிதைகளில் இனம் காட்டியுள்ளார்.
இனத்தின் களைகளைப் பிடுங்கவும் தீச்செயல் நடக்கும் பொழுது> அதைத் தடுத்திட உளம் பதைத்து எதிர்க்குரல் கொடுப்பதும் கவிஞர் பெருமக்களின் இயல்பு. அவ்வகையில் ‘சுடர்க்கதிர்’ முன்னால் சுள்ளிகள் சாம்பலாகும்’ எனும் கவிதை மிளிர்கிறது. சமூகப் பிரக்ஞையுடன் தன்னினம் வாழ வழிகானும் சிந்தனைப் போக்குக்கு நிறைய கவிதைகள் கட்டியம் கூறத் தக்கனவாகவுள்ளன.
‘நிலநடுக்கம்’ குறித்த கவிதையில் சமூகக்கேடர்களின் தோலை உரித்துக் காட்டி> இதனால் தானோ நிலமகளே கோபப்படுகிறாய் எனக்கேட்டு> இன்னுயிர்கள் மாய்ந்தமைக்கு வருந்துகிறார். எத்தனை கவித்துவம் சான்றோர் வரிசையில் இப்படிக் கற்பனை செய்து பார்த்தமையை மகாக்கவிஞர் சாமி பழநியப்பரிடமே காண்கின்றேன். தேசத்தின் நலனில் அக்கறையோடும்> வரலாற்றுப் புருஷர்களின் சரித்திரத்தைப் பதிவு செய்யும் தாகத்தோடும்> பெண்ணுரிமை பேசும் மோகத்தோடும்> தன் எழுத்துக்களைக் கவியரங்க மேடைகளில் வீச்சாய் வீசியிருக்கின்றார். கவிதை வரலாற்றில் பாவேந்தருக்குப் பின் எழுச்சியோடும்> தெளிவோடும் உலாவந்த உன்னதக் கவிப்பேரரசனான சாமி பழனியப்பனை இன்னும் மிகச்சரியான இடத்தில் வைத்து அவர்தம் கவிச்சிறப்பை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது கடமைகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது. இதைக் தமிழுலகம் செய்யப் பெருமைப் பட வேண்டும். 
அழகியல் கவிதைகளிலும் தன் கவித்துவத்தால் பரவசப்படுத்தும் கவிஞர் ‘காதலையும்’ விட்டு வைக்கவில்லை.
“சுண்ணாம்புச் சூளையிலே இட்ட கல்லாய்த்
   துயர்ப்படுத்தல் எதற்காக? ஐய கோவென்
கண்ணுறங்கும் வகையறியேன்: அவைகள் நம்மைக்
   காட்டுகெனப் பிய்த்தென்னைத் தின்ப தேனோ?”
என்ற இக்கவிதைகளில்> காதலியின் மனத்துயரைச் சங்க இலக்கியப் பாங்கில்> உவமைகளால் நிரப்பி விட்டிருக்கின்றார். அற்புதமான மனவுணர்வுச் சித்திரக் கவிதை இது. அடுத்துக் காதலன் பதிலளிக்கின்றான். அதில்>
“வான் முகட்டை நிலவணங்கு தழுவும்போது
    வலிவிழந்து போகுமெனது ஐம்புலன்கள்
கூன்பிறையைக் குவளையினை எட்பூ தன்னைக் 
    கொவ்வையினைக் காண்கின்ற போழ்தி லெல்லாம்
நனிங்கே உனையெண்ணி நலிகின்றேன்.”

என்று தன்னிலையை விளக்குகின்றான். நிலவு சூழும் அந்தப் பொழுதுகள் வான்முகட்டைத் தழுவுவதாகவும். தழுவாது நிற்கும் காதலன் பார்வையில் அது அணங்காகிறாதாம். என்ன அற்புதமான அழகுக் கவிதை> நிலவு>மண்>பொன்னி வாழ்க> அழகின் சிரிப்பு> நீயுமா வதைக்கிறாய் எனும் கவிதைகள் தீந்தமிழ்ப் பழங்கள்> ‘தமிழ்ப்பணி’ இதழில் வெளிவந்த ‘புதிய ஆத்திசூடி’ - மரபாக முன் எழுதியோரிடமிருந்து வார்த்தைச் சுருக்கத்தலும்>பொருள் பெருக்கத்தாலும் மாறுபட்டு முன் நிற்கும் பேறு பெற்றிருக்கிறது. ஒவ்வொரு இரு சீருக்குள்ளே கருத்தாறு பாய்கிறது. ‘ஒப்பியல் பயில்க’> ‘கேள்வி பெருக்கு’ என்பதில் தான் எத்தனை ஆழம். குழந்தைப் பருவப் பாடத்திட்டத்தில் இதைக் கட்டாயமாகத் தமிழக அரசு பாடமாக்க வேண்டிய கவிதையிது.
சமூகக் தீர்வுக் கவிதைகள் எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் வாழும். அது தவிர்த்து சமூகம் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும். இன்றையச் சூழ்நிழலயில் பொருந்தும் கவிதை ஒன்று 1947 – ஆம் ஆண்டே ‘பொன்னி’ இதழில் வெளிவந்திருக்கின்றது. அக்கவிதை>
“கல்வித் துறையினில் ஆக்கமில்லை – தீய
    கண்மூடிக் கொள்கைகள் மாளவில்லை
புல்லரின் சூழ்ச்சி முறுவலிலே - இங்கு
    பூக்கும் சுதந்திரம் யாருக்கடா?”
என்பதாகும். ‘பூக்கும் சுதந்திரம்’ எனும் வார்த்தைக்குள் ஆயிரமாயிரம் பொருள்களை நம்மால் எடுத்துக் கொள்ள முடியும். இந்தக் கேள்வி இப்போதும் பொருந்துமல்லவா?
சாமி.பழநியப்பர் – எழுத்தால் சாதனைகள் பல செய்த அற்புதக் கலைஞர். கவிப்பிரபஞ்சத்தின் பகலவன். குன்றாமலை அருவி. குடை தந்து காக்கும் காவலன். தனித்தமிழ்ப் பற்றாளர். பார்போற்ற வந்துதித்த பாவலர் அவர். இன்னும் எழுதி> எழுதிப் பன்னூல் தரத் தமிழினம் தாழ்ந்து உனைக் கேட்கிறது. எழுதுக இன்னும் கவிவேந்தே!  
------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக