நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

திங்கள், 27 அக்டோபர், 2025

“கவிஞர் கீழை. நிலாபாரதியின் கவிதைகளில் நவீனத்துவம்.”

  “கவிஞர் கீழை. நிலாபாரதியின் கவிதைகளில் நவீனத்துவம்.”



 முனைவர் செ.சு. நா. சந்திரசேகரன்

தமிழ்த்துறைப் பேராசிரியர்,

வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி, ஆவடி

chandrakavin@gmail.com,  9283275782


 “ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய இருப்பே முதன்மையும், அடிப்படையுமானது. தன் இருப்பு நிலையைக் கொண்டே மனிதன் பிறவற்றையெல்லாம் மதிப்பீடு செய்கின்றான். தனக்குள்ள பிரச்சனைகளைத் தானே தீர்த்துக் கொள்ளவேண்டும். மனிதன் தனக்கான வாழ்க்கையைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே இத்தத்துவத்தின் அடிப்படைக் கொள்கையாகும். தனிமனித இருத்தல் அனுபவத்தை மையப்படுத்திய உணர்ச்சிவாதம் என்றும் இதனைக் கூறலாம்.” 1 என்று இருத்தலியம் (existentialism) குறித்துக் கூறுவார்  டென்மார்க் அறிஞர் சோரன் கீர்கேகார் (Soren Kierkegaard).

தற்காலக் கவிதைகளில், இருத்தலியல் கோட்பாட்டுக் கவிதைகள் பரவலாக எழுதப்படுவதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. அவ்வகையில்,  கவிஞர் கீழை.நிலாபாரதியின்  கவிதைகளில்  நவீனக்கோட்பாட்டுக்கவிதைகளும்  அதிகளவில் காணப்படுவதை இக்கட்டுரையின் மூலம் காணலாம். 

இருத்தலியல் (Existentialism) 

 “இருத்தலியல் என்பது மனித இருப்பு பிரச்சினையை ஆராயும் தத்துவ விசாரணையின் ஒரு வடிவமாகும். இருத்தலியல் தத்துவவாதிகள் மனித இருப்பின் பொருள், நோக்கம் மற்றும் மதிப்பு தொடர்பான கேள்விகளை ஆராய்கின்றனர். இருத்தலியல் சிந்தனையில் உள்ள பொதுவான கருத்துக்கள் இருத்தலியல் நெருக்கடி, அச்சம் மற்றும் அபத்தமான உலகத்தை எதிர்கொள்ளும் கவலை மற்றும் சுதந்திரம், அத்துடன் நம்பகத்தன்மை, தைரியம் மற்றும் நல்லொழுக்கம் ஆகியவை அடங்கும் “2  என்று  இருத்தலியம் குறித்துத் தமிழ் விக்கிபீடியா விளக்குகிறது 

தற்காலக் கவிதைகளில், கவிஞர் கீழை நிலாபாரதி அவர்களின் கவிதைகள்,  மனித இருப்பின் பொருள், நோக்கம் மற்றும் மதிப்பு தொடர்பான கேள்விகளை ஆராய்வதை,

 “எப்போதெல்லாம்

தனிமை அழைக்கின்றதோ

அப்பொழுதெல்லாம்

என்னைச் சந்தித்து விடுகிறேன்

மெளனங்களைக் குடைந்து “ 

( வற்றிடும் குளத்தின் கடைசி மீன்கள்)



இக்கவிதை விளக்குவதை உணர முடிகிறது., கவிஞரின்  இருத்தலியலின் நெருக்கடியால் வெளிப்படும் உள்ளுணர்வுக் கவிதையாக,


 “எனது பயணம்

மறுபடியும் ஒரு நாள்

இங்கு துளிரும்…

இன்னும் நிறம் மங்கிய

உக்கிரம் தணியும்.

அப்பொழுதொன்றில்

உன்னைத் தேடலின்

சாத்தியமுற்றதான

பெருவழியில், என்னைத்

தொடங்குவேன். “ ( இன்னும் சற்று நேரம் நீ இருந்திருக்கலாம்)


 “உன்னைத் தவிர்த்து

நான் எழுதுவதற்கு

எல்லாமும் இங்கு

இல்லாமல் போகிறது” ( இன்னும் சற்று நேரம் நீ இருந்திருக்கலாம்)


எனும் கவிதையைக் காணலாம். தனக்குள்ள பிரச்சனைகளைத் தானே தீர்த்துக் கொள்ளவேண்டும். மனிதன் தனக்கான வாழ்க்கையைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். உலக நடப்புகளில் போதுமான சுய நலத்தன்மை  சாயல் கொண்டிருக்க வேண்டும் என்பதான கவிதைகளில், காதல், காமம், அன்பு, நேசித்தல் என்பது பாடுபொருளாக அமைந்திருப்பதைக் காணலாம்.

உலகம் தொடர்ந்து கொண்டாடிக்கொண்டே இருக்கும் பேரூணர்வின் வெளிப்பாடு தான் காதல். எங்கும் பேரழகும், சொல்லவொணா பரவசமும், எல்லையற்ற சுகமும் காதல் உலகில் பரவிக்கிடக்கின்றன. காதலில்லா ஜீவன்கள் பிரபஞ்சத்தில் எத்துளியிலுமில்லை. காதலன்-காதலிக்கு இடையில் கவர்தலின் மலர்வுகள், பல நிலைகளில் நின்று வசிய விளையாட்டை எப்போதும் ருசித்துக் கொண்டேயிருக்கின்றன.

ஒட்டுமொத்த இலக்கியங்களின் ஊடாக மற்றுமின்றிப் பொருளற்ற ஒலிக்கோப்பான இசை வடிவத்திற்குள்ளும் காதலுணர்வு உள்புகுந்து “இசை ரொமாண்டிஸம்“(Musical Romanticism) ஆகி உயிர்நாடிக்குள் தைக்கின்றன. “லுட்விக் வான் பீத்தோவன், ஃபிரான்ஸ் ஷீபர்ட் போன்ற இசை மேதைகள் உணர்ந்த காதலை மிகச்சியாக இருத்தலிய வெளிப்பாட்டு உக்தியில் அப்படியே ரசிப்பாளருக்குக் காதலைத் தன்னிசையால் மடைமாற்றம் செய்தனர். அதே போல் படிப்பவருக்கு தம் கவிதைகளின் வாயிலாக மடைமாற்றம் செய்யும் கவிஞராகக் கீழை.நிலாபாரதியைக் காண முடிகின்றது.


நவீனக்கோட்பாட்டுவாதக் கவிதைகள்:


  இவரின் கவிதைத் தொகுப்பிற்குள் காணலாகும் கவிதைகளுக்குள் மானிடசமூகத்தின் உணர்வுகள் கொட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. “மனம்“ சார்ந்த உளவியல் வெளிப்பாடுகள். தனிமை, காதல்துயர், போன்றவைகளோடு, அழகியல் வெளிப்பாடுகளும், மாயஎதார்த்தவாதப் பாணியிலும், இருத்தலியப் பாணியிலும்,  நவீனக்கோட்பாட்டுவாதப் பாணியிலும் கூறப் பெற்றிருக்கின்றன.

கவிதைகள் நதிநீரைப் போல் சலசலப்புடன் வாசகன் மனதில் ஊடுருவி என்னமோ செய்கின்றன. காதல் முற்றித் தலைக்கேற எழுதப் பெற்ற வார்த்தைகளால் வானில் பறக்கும் ஏகாந்த அனுபவத்தை வாசகனாலும் பற்றிப் பறக்க முடிகின்றது. கவிஞர் நினைத்த பரவசமோ, துயரமோ, ஏக்கமோ, திளைப்போ எந்த எல்லையையும் வார்த்தைகள் அழைத்துச் சென்று அமர வைத்து விடுகின்றன. 

”இறகுச் சூட்டின் தகிப்பில்

மூர்ச்சையானாய்…

உதடுகளால் முத்தமிட்டது

உன் கண்கள்

கசிந்தயிருளை

குறை வெளிச்சமெனவும்

கற்றுத் தந்தது நளினம்…

நீ வராத கதவுகளின்

பின்னிருந்து

கனவுகளில் வழிந்தாய்…

இப்பொழுதும் புறாக்களின்

உதிரும் இறகுகளிலிருந்து

பறக்கச் செய்கிறேன்

உனை”  ( வற்றிடும் குளத்தின் கடைசி மீன்கள்)

கவிஞரின் வார்த்தைப் பிரயோகங்களின் சிறப்பை இக்கவிதை மூலம் அறியலாம். கண்களால் பார்க்கத் தான் முடியும். அது கூடத் தலைவனைத் தொட விரும்பியது போலும், இரவின் தொடக்கத்தில் உள்ள இருள் என்பதால், அது கசிந்த இருளாகி அதைக் காதலியின் நளினம் குறை வெளிச்சம் தானேயிது  எனக் கற்றுத் தந்ததாம். இதனூடாக காதலி வராத பொழுதுகளில் நினைவில் வந்து வந்து நிறைந்து பொங்கி வழிகிறதாம் நினைவுகள். அது கனவாம், சிறகுகளில் பறப்பதுவோ, பறக்க வைப்பதுவோ காதலியோ, கவிஞனோ அல்ல. வாசகனும் தான்  படிப்பவர்களையெலாம் பறக்க வைக்கும் உணர்வுப் போதை ஏற்றிக் கிறங்கிப் போகும் கவிதையிது. இதுபோலத் தான் முக்கால்வாசிக் கவிதைகள் இத்தொகுப்பிலுள்ளன.

படிமங்கள், உருவகங்கள், உவமைகள் ஆகியவைகள் கவிஞரின் கவிதைகளில் சிறப்பாகச் கையாளப் பெற்றுள்ளன. படிமம் சிறக்கப் பாடியக் கவிதைகளில்,

“என் பிராத்தனைகள்
தீரவில்லை
சுடர் விட்டு சுடர் விட்டு
முன்னிலும்
பிராகாசிக்கத் துவங்குகிறது….” 

(வற்றிடும் குளத்தின் கடைசி மீன்கள்)

இக்கவிதை அழகுற காதலை வெளிப்படுத்துகிறது. காதல் வேண்டுதல்கள் திரிபோல் சுடர் விட்டு சுடர் விட்டு பிராகசிக்கின்றன என்கின்றார் படிமமாய். “முன்னிலும்“ எனும் வார்த்தை கவிதையை இன்னும் மெருகேற்றிப் பொருளை ஆழப்படுத்துகின்றது.

“புலன்களை மீறிய மாய அனுபவங்களை யதார்த்தத்தைச் சித்தரிப்பதைப் போலவே துல்லியமான தகவல்களுடனும் காட்சித் தன்மையுடனும் சித்திக்கும் எழுத்து முறை, அதாவது யதார்த்தத்தில் மாயமும் கலப்பது. இவற்றில் சொல்லப்படும் மாயங்கள் மனத்திபுகளோ, மூடநம்பிக்கைகளோ அல்ல. அவை குறியீட்டுத் தன்மை கொண்டவை“ 3 என்பார் எழுத்தாளர் ஜெயமோகன். இவ்வாறு மாயஎதார்த்தவாதமாகக் கவிஞர் கீழை நிலாபாரதியின் பல கவிதைகள் திறம்பட எழுதப் பெற்றுள்ளன. அவ்வாறான கவிதைகளில் ஒன்றாக,

“துக்கங்களால்

நெய்யப்பட்டவனின்

இரவுகள்

தினம் கிழிசல்களாய்

தொங்குகிறது…

வானத்தின்

அடர்த்தியெங்கும்

கறுமையின் சூதுக்கள்…

உன் உறகடகத்தை

நீ பிடுங்கியெறிந்தபோது

நான் வானத்தில் ஒளிந்து கொண்டேன்”

(வற்றிடும் குளத்தின் கடைசி மீன்கள்)


எனக் கவிதையில் இன்னும் சில காட்சிகளை விளக்கும் மாய எதார்த்தம் காட்டும் கவிதையாக இக்கவிதை உள்ளது. இதே போல் நேர்த்தியான அழகியல் கோட்பாட்டுக் கற்பனையில் ஒரு காட்சியை உணர்வாக்கும் பொழுது,

“கண்களில் புகுந்து
ஒருவித வண்ணப்
பாய்ச்சலால் முழ்கடித்து
மறுபடியும்
நான் கூடு திரும்பும்
உனது அறையெங்கும்
ஒரு ஊதுபத்தியின்
வாசமென…( வற்றிடும் குளத்தின் கடைசி மீன்கள்)

என்கின்றார். பார்வையும், நினைவுகளும், வாசனையுமாய் காட்சிகளுக் கிடையிலான தொடர்பிலா இடைவெளியும், கவிதையின் நவீனக் கோட்பாடுகளை விளக்கி நிற்கின்றன.

கவிஞர் கீழை நிலாபாரதியின் கவிதைவெளி காதல் உலகின் அல்லது காதல் அல்லாத உணர்வு வெளியின் நுணுக்கங்களைக் காட்சிப்படுத்தும் அழகான திரைப்படங்களாகக் கண்முன் விரிகின்றன. ஒவ்வொரு வார்த்தைகளின் அடியிலும் அகண்ட நீரோடைகள் காதல் பயிர் செய்கின்றன. அழகியல் பார்வையில் உள்ளுணர்ந்து கொள்ளும் பந்த, பாசங்களை உணர வழிவகை செய்வனவாகவும் சில கவிதைகள் விளங்குகின்றன. மௌனம் எனும் அசாத்திய சூரனை பல திசைகளிலிருந்தும் படமெடுத்துப் பதிவு செய்த கவிதை வரிகள் அபூர்வமானவையாகும்.

இக்கவிதைகளில் உள்ள வார்த்தைகள் இசைப் பாடலுக்காக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் வார்த்தைகளாகக் காத்திருக்கின்றன. கவிஞரின் கவித்துவம் உலகம் வெல்லும். உணர்வுகளின் தன்னிச்சையான வழிதலாக மகுடம் சூட்டும் கவிதைகளாக இருந்து நவீனக் கவிதைப்போக்குகளைக் கொண்டிருக்கின்றன.


அடிக்குறிப்புகள்:

  1. https://www.suyaanthan.com/2016/12/blog-post_77.html  பார்வை நாள்: 04/10/2025

  2. https://ta.wikipedia.org/wiki/ இருத்தலியல் .  பார்வை நாள்: 02/10/25 

  3. https://thiru.xyz/blog/je-mo-jargons/  பார்வை நாள்: 02/10/25 




சனி, 30 டிசம்பர், 2023

அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகம் 2024 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது...

 மகிழ்ச்சியான அறிவிப்பு


நண்பர்களுக்குப் பகிரவும்

AMERICAMUTAMIL UNIVERSITY





அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகம்

2024 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது..
.

அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு கால பட்டயச் சான்றிதழ் படிப்புகள் 2023 ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டு உலக நாடுகளிலிருந்து 43 மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இச்சான்றிதழ் படிப்புக்கான வகுப்புகள் இணையத்தின் வழியாக அந்தந்த துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தி வருகிறோம்.

2024 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது. ஆர்வம் உள்ளவர்களை   இப்பல்கலைக்கழகத்தின் வாயிலாகப் பட்டம் பெற அன்போடு அழைக்கின்றோம்.

பட்டயப்படிப்பு சார்ந்த விவரங்களைக் கீழ்கண்டவாறு காண்க.

Diploma in Introduction to Folklore

நாட்டுப்புறவியல் அறிமுகம்

Diplomain Religious literature

சமய இலக்கியங்கள்

Diploma in tribals language & Culture

பழங்குடியினரின் மொழியியல் மற்றும் பண்பாடு

Diploma in History and Studies of Tamil Literature

தமிழ் இலக்கிய வரலாறும் ஆய்வும்

Diploma in Self Assertive verses, training & report

தன்முனைக் கவிதைகள் பயிற்சியும் ஆய்வறிக்கையும்

Diploma in Tamil grammer - I

தமிழ் மரபிலக்கணப் பட்டயச்சான்றிதழ்

Diploma in Tamil grammer - I

தமிழ் மரபிலக்கணப் பட்டயச்சான்றிதழ்-

Diploma in Inscription

கல்வெட்டியல்


மேலும், தகவலுக்கு அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழக (www.americamutamiluniversity.org) வலைத்தளத்தின் ஊடாக அறிந்து பயன் பெறலாம். 

தொடர்புக்கு 9159698466, 9976025731.9283275782
amutamiluniversity@gmail.com


University பதிவு எண்: 202201061554843/9275709

அமெரிக்கா முகவரி: 6643,லோகஸ்ட் குரோவ் டிரைவ், இண்டியானாபொலீஸ், இண்டியானா 46237, அமெரிக்கா.

தமிழக முகவரி:எண்:10.முதல் தெரு,ஸ்ரீ ராமாபுரம், ஆம்பூர் - 635802, திருப்பத்தூர்  மாவட்டம்

எதிர்காலத்தில் அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகம் பெரிய அளவிலான கல்வி நிறுவனமாக இயங்க இருக்கிறது. பல ஆராய்ச்சிகளைச் செய்ய இருக்கிறோம். இந்த வாய்ப்புகளை உலக அளவில் இருக்கும் தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

முனைவர் தாழை இரா. உதயநேசன்
வேந்தர்

டாக்டர் உ. ஆல்வின்
துணைவேந்தர்

முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன்
பதிவாளர்    9283275782

முனைவர் ஜோ.சம்பத்குமார்
கல்விக்குழுத்தலைவர்   99760 25731

திங்கள், 19 ஜூன், 2023

தமிழ்ச் சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- பாராட்டுரை

 

தமிழ்ச் சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- பாராட்டுரை 

முனைவர் பெ சசிக்குமார்




தமிழ்ச் சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம் என்ற தங்களுடைய புத்தகத்தைப் படித்தேன். சிற்றிதழ் என்றால் என்ன என்ற சந்தேகம் புத்தகத்தின் அட்டை படத்தைப் பார்த்தது முதல் இருந்தது. அதற்குச் சரியான விளக்கம் கொடுக்கும் வகையில் அணிந்துரை தொடங்கியது. அது மட்டுமல்லாமல் தேனி சுப்பிரமணி அவர்களின் அணிந்துரை புத்தகம் என்ன பேசப் போகிறது என்ற கருத்துக்களைத் தெளிவாக எடுத்துரைத்திருந்தது. 

விளம்பரம் இருந்தால் தான் விற்க முடியும் என்ற இந்த உலகத்தில் தரமான படைப்புகள் சிற்றிதழ்களில் இருந்து மக்களைச் சென்றடையாதது வருத்தம் தான். விளம்பரத்தின் மூலம் சுமாரான திரைப்படம் சிறப்பான திரைப்படமாக மாற்றப்படுவதைப் பலமுறை பார்த்திருக்கிறோம் . கண்டு கொள்ளாத கண்களுக்கு அகப்படாத ஆனால் தரமானதாக வந்துள்ள சிற்றிலக்கியப் படைப்புகளை இந்தப் புத்தகம் கொண்டு வந்துள்ளது சிறப்பு. 

எங்கிருந்து எடுக்கப்பட்டது யார் எழுதினார்கள் என்ற தரவுகள் ஒவ்வொரு கட்டுரையின் பின்பும் இணைக்கப்பட்டுள்ளது புத்தகத்தின் சிறப்பு. சிறிய அளவில் அச்சிடப்பட்டு வெளியிடப்படும் மாத இதழ்கள் வெளியே காண்பது கடினம். அதுவும் ஒருமுறை வந்தால் எங்கே போகிறது என்று பலருக்கும் தெரியாது. புத்தக வடிவில் இப்படி வரும் பொழுது அதைச் சேமித்துப் பலமுறை படிக்க ஏதுவாக இருக்கிறது. 

இதுவரை நான் கவிதை எழுதியது இல்லை என்றாலும் புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்த கவிதைகள் மனதை வருடும் வகையிலும் சமுதாயப் பிரச்சனைகளைப் பேசும் வகையிலும் இருந்தது என்றால் மிகையல்ல. 

ஒரு கல்லூரி ஆய்வுக்  கட்டுரையைப் போல நல்லதொரு தலைப்பை எடுத்து ஆய்வு செய்து காணக் கிடைக்காத படைப்புகளைத் தொகுத்து அதன் பின்னே இருக்கும் கருத்துக்களையும் வழங்கியது அருமை.


புதியதொரு முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.



முனைவர் பெ சசிக்குமார் 

அறிவியல் எழுத்தாளர்

 விஞ்ஞானி இஸ்ரோ

நார்த்தாமலை சிவன் கோயில்களின் அற்புதங்கள் - பாராட்டுரை



 நார்த்தாமலை சிவன் கோயில்களின் அற்புதங்கள் - பாராட்டுரை 

முனைவர் பெ சசிக்குமார் 


நார்த்தாமலை சிவன் கோயில்களின் அற்புதங்கள் என்ற தலைப்பில் பாரதி சந்திரன் ஐயா அவர்கள் எழுதிய புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன்.

சைவ சமயம் ஆனது சோழர் ஆட்சி காலத்தில் ஆலயங்கள் எழுப்பித் தெய்வ வழிபாடுகள் மேற்கொண்டு சிறப்பாக வளர்ச்சி அடைந்து வந்தது.


அதிலும் குறிப்பாகச் சிவாலயங்கள் எழுப்பப்பட்டு சிவ வழிபாடு சிறப்பாக நடந்துள்ளது என்பதற்கு ஐயா அவர்களின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கோயில்களைப் பற்றிய விளக்கங்கள் நமக்குத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.


வெவ்வேறு காலகட்டங்களில் ஆண்ட மன்னர்கள் பற்றியும் அவர்கள் எவ்வாறு ஆலயங்களை எழுப்பித் தங்களின் சிறந்த கட்டிடக்கலையை உலகிற்கு தந்துள்ளார்கள் என்பதை பற்றியும் விளக்கமாக இந்நூலில் காண முடிகிறது.


ஆலயத்தில் உள்ள மூலவரைப் பற்றிய விளக்கங்கள் உடன் மற்ற பரிவார தெய்வங்களின் விளக்கங்களும் ஆலயத்தில் உள்ள அனைத்து தெய்வங்களைப் பற்றிய விளக்கங்களுடன்  அவற்றின் அமைப்பு அவற்றின் சிறப்புக்கள் போன்றவற்றையும் எடுத்துக் கூறிய விதம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.


அது மட்டுமன்றி ஊரின் தனிச்சிறப்பாகச் சஞ்சீவி பர்வதத்தின் ஒரு பகுதி இங்கே விழுந்து இருப்பதால் இம்மலையில் மூலிகைகள் மருத்துவத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது போன்ற தகவல்களையும் காண முடிகிறது.


விசயாலய சோழீச்சுரம் கோயிலைப் பற்றி விளக்கும் போது அதன் விமான அமைப்பு காஞ்சி கைலாசநாதர் கோயிலில் உள்ள விமான அமைப்பைப் போலவும் மற்றும் கோவை அன்னூரிலும் மற்றும் தாராபுரத்தில் உள்ள வலஞ்சுலிநாதர் கோயிலிலும் அமைந்துள்ள அமைப்பு போன்று இருக்கிறது என்ற விளக்கங்கள் கட்டிடக்கலை எந்த அளவுக்குச் சிறப்பாகச் செய்துள்ளார்கள் என்பதை தெளிவாக விளக்குகிறது.


புத்தகத்தின் மற்றும் ஒரு சிறப்பு பின்னிணைப்பாக அனைத்து கோயில்களின் அமைப்பையும் காட்சிக்குக் கொடுத்திருப்பது நேரில் சென்று வழிபாடு செய்வது போல் ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.


நார்த்தாமலை சிவன் கோயில்களின் அற்புதங்கள் என்ற தலைப்பில் ஐயா அவர்கள் ஒரு அற்புதமான படைப்பை நமக்கு அளித்துள்ளார்கள்.


இந்த நூல் நார்த்தாமலை சென்று வழிபாடு செய்வதற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.


வரலாற்றுச் சான்றுகள் மன்னர்களின் ஆட்சிக் காலங்களில் நடந்த திருப்பணிகள் கோயில்களின் கட்டிடக்கலை மற்றும் அனைத்து தெய்வங்களைப் பற்றிய அரிய விளக்கங்கள் போன்றவை அடங்கிய இந்த அற்புதமான புத்தகத்தைப் படிக்கும் போது ஒரு முறை நேரில் சென்று நார்த்த மலையைக் காண வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.


ஆன்மீகத் தகவல்களை அடுத்த தலைமுறையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஐயா எழுதிய இந்தப் புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.


நார்த்தாமலை பற்றியும் ஆன்மீக செய்திகளையும் இந்தப் புத்தகத்தின் மூலம் தெரிந்து கொண்டதற்காக ஐயாவிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்




முனைவர் பெ சசிக்குமார் 

அறிவியல் எழுத்தாளர் 

விஞ்ஞானி இஸ்ரோ

புதன், 11 ஜனவரி, 2023

"அது தன்னில் தன்னால் பிரகாசிக்கும்”

அது தன்னில் தன்னால் பிரகாசிக்கும்

(அப்பாவின் காதலி- சிறுகதை நூல் விமர்சனம்)

 

பாரதிசந்திரன்.


 

படைப்பாற்ற உளவியல்” (CREATIVE PSYCHOLOGY) வெளிப்பாடுகள், தொடர் சமூக வரலாற்றில் மிகுந்த கவனத்துடன் அவதானிக்கப்படுகையில், படைப்பாளர் மற்றும் சுற்றுச்சூழல், காலம், சமூக ஒழுங்கு, குழுவாழ்க்கை, அறம் சார்ந்த நடைமுறைகள் ஆகியவை ஒருங்கே சேர்ந்து கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுகின்றன.

 

சமூகத்திற்குப் படைப்பு எதையோ நகர்த்திச் செல்ல வேண்டிய பொறுப்பைப் பெற்றிருக்கவில்லை. அதன் நம்பிக்கை முழுமையுமான நிகழ்வுப் பதிவுகளின் உணர்வுப் பரிமாறுதலையே மையம் கொண்டு சுழல்கின்றன.

 

தனிமனித கவனித்தலும், ரசித்தலும், மேம்பட்ட தீவிர உள்வாங்குதலுக்குப் பிரதானமான காரணமாக இருந்தாலும், பிரிது ஒருவருக்குக் கடத்தி விட உணர்வு துடிப்பதே பெரும் பகுதி நியாயமாயும் இருக்கிறது. இயல்பாகவும் இருக்கிறது.

 

மாபெரும் உளவியல் அறிஞர்ஆல்பிரட் ஆட்லர்’ (Alfred Adler) கூறிய படைப்பு வெளிப்பாடு தாழ்வு மனப்போக்கை ஈடு செய்ய வெளிவந்த அற்புதமான உத்தி என்பதை உற்று நோக்குகிறபொழுது, படைப்பாளரின் தேவைக்கான விருந்தாகவும், அவன் படைக்க விரும்பிய மாற்றாருக்கான விருந்தாகவும் படைப்பு மிகுந்து மிளிர்கிறது.

 

இவ்வாறான படைப்புத்திறனைச் சிறுகதை இலக்கிய வகையில் தெளிவு படுத்திக் காண முடியும். பிற துறைகளைவிட இத்துறை அதிகமாய் இக்கருத்தைப் புகுத்திக் கொண்டது எனலாம்.

 

படைப்பின் உணர்வுகள் அப்படியே வாசகனுக்கு சென்றடையும் சிறந்த கட்டமைப்பைச் சிறுகதை இலக்கியம் பெற்றிருக்கின்றன. இங்குசிக்மண்ட் பிராய்ட்’(Sigmund Freud) படைப்புத்திறன் குறித்தான கருத்தானது ஒப்புமைக் கருத்தாகிச் சரியாகப் பொருந்துவதைப் அறிந்து கொள்ளலாம். அதாவது சிக்மன்ட் பிராய்ட் படைப்பின் அடிப்படையில் குறித்து கூறும்பொழுது, “ ஆக்கப்பூர்வமான செயல்பாட்டைக் கோளத்திற்கு பாலியல் ஆசையின் பதங்கமாதல் (SUBLIMATION) (மாற்றம்) விளைவாகவும், பாலியல் கற்பனையானது சமூக ரீதியாக ஏற்றுக் கொள்ளக்கூடிய வடிவத்தில் ஒரு படைப்பு தயாரிப்பில் புறநிலைப் படுகின்றதுஎன்பார். படைப்புக்கு அடிப்படை இயற்கையின் எதிரி எதிர்  விருப்பே காரணமென்கின்றார்.

 

மேற்கண்ட படைப்பு மற்றும் படைப்புத்திறன் குறித்த விளக்கம் எல்லாம் எழுத்தாளர் க வீரமணி அவர்கள் எழுதியஅப்பாவின் காதலிசிறுகதை படித்து முடிக்கும்பொழுது, ஒப்புமையோடு  மனதில் எழுகின்றன.

 

ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு படைப்பு வெளிப்பாடு. ஜி ஆல்போர்ட் தன் திறனோடு சில கதைகளில் நிற்கின்றார். .மாஸ்லோ சில கதைகளில் சிரிக்கின்றார். யுங் சில கதைகளில் அவரே வெளிப்படுகின்றார். அறிவியலும் தொழில்நுட்பமும் இப்பிரபஞ்சத்தையே தலைகீழாக மாற்றிவிடும் என்பதை உணர்ந்த முதலாவது தத்துவஞானி பிரான்சிஸ் பேக்கன் சில கதைகளில் நின்று தத்துவம் கூறுகின்றார். இவ்வாறு படைப்புத்திறனைக் கோட்பாடுகளாகக் கூறிய பல அறிஞர்கள் இந்த நூலைப் படித்து முடிக்கும்பொழுது, இயல்பாகவே நம் நினைவுக்கு வருகிறார்கள் என்பது இச்சிறுகதை தொகுப்பின் மிகப்பெரும் பெருமையாகும்.

 

எழுத்தாளர் க.வீரமணி அனுபவங்களை அனுபவங்களாகப் பார்க்காமல் சமூகத்தின் அறமாகப் பார்க்கின்றார். எவ்வகை அனுபவமும் ஒவ்வொரு அறக்கருத்தை உலகத்திற்கு சொல்லுகிறது எனும் தத்துவத்தை வெளிப்படுத்துகின்றார். மொத்தம் 22 அனுபவங்கள் 22 சிறுகதைகளாக 22 அறக்கருத்துக்களாகச் சமூகத்திற்குப் பாடம்  நடத்தப்பட்டிருக்கின்றன.

 

காலத்தால் அழிவு பெறாத சிறுகதைகள் தமிழில் பல நூறு உண்டு என்னும் வரிசையில் இக்கதைகள் வருங்காலத்தில் சேர்க்கப்படலாம்.

 

கதாபாத்திரங்களாக, இச்சிறுகதைகளுக்குள் உலா வருகிறவர்கள் சாதாரணமானவர்களாக  நாம் அவர்களைக் கருதி விட முடியாது. கதை படித்து முடித்தவுடன் பசை போடாமல், பிரித்து விட முடியாதபடி நம்மோடு நாமாக ஒட்டிக் கொள்ளக் கூடியவர்கள்.

 

பெண் கதாபாத்திரங்களை ரசித்தலின் உச்சத்தில் வைத்தும், அடி ஆழத்தின் வலிகளைத் தேடிப் பிடித்து, அந்த ரணத்தை ஆற்றியும் தலைமேல் தூக்கிக் கொண்டு அவர்களின் பண்பை  நினைந்து  நினைந்து பேசுதலும் தெய்வமெனப் பாவித்து ஆராதனை செய்தும் பெண் கதாபாத்திரங்களைப் பதிவு செய்திருக்கிறார். ஆசிரியர் க. விரமணி.

 

எல்லோரும் புரிந்து வைத்திருக்க வேண்டிய சரியான பெண் உலகம், இவரின் பொன் உலகமாகும்.

 

நியாயம் தேடி முள் சங்கிலியைச் சாட்டையாய் உயர்த்தும் குரலும் சில இடங்களில் ரத்தக்கரை கொண்டிருக்கின்றன. படைப்பாளன் இதனைக் கூடச் செய்யாமல் விட்டிருந்தால், கொஞ்சம் கூட நிறமற்றவராக அல்லவா இருந்திருப்பார்? எனவே எந்தவிதப் பாகுபாடும் காட்டாமல் சில கதைகளில் புரட்சி வண்ணங்களைப் பூசிக்கொண்டு களமாடுகிறார். இதற்குச் சில கதைகள் உதாரணமாக இருக்கின்றன.

 

உள்ள அன்பை, நேசத்துடன் காதல் செய்யும் நேர்த்தியும், உடன் கலந்து ஒன்றாகி மெய்சிலிர்த்துப் புளகாங்கிதம் அடையும் காதல்இல்லறம் எனும் சொர்க்கலோகத்தை அடையாளப்படுத்திக் கதையாக்கி இருக்கிறார்.

 

இந்தக் கதைகள் வருங்கால இளைஞர்களுக்கு மெய் சிலிர்க்கும் முத்த தேசத்தை அடையாளம் காட்டும். உணர்வுகள் மிக நெருக்கமானவை. மனித மனங்கள் இந்தச் சொர்க்கபுரியில் முழுமையுமாகத் தன்னைக் கரைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த உணர்வுகளை அதன் இன்பம் குறைந்து விடாமல் அப்படியே கதையாக்கி தந்திருப்பது மிகச் சிறப்பானதாக இருக்கின்றது

 

.இலக்கியத்தில் உணர்வுகள் எப்படிப்பட்டதாயினும் ரசனைக்கானது எனில் மொழி கடந்தும், நாடு கடந்தும் பயணிக்கும். தொட்டால் சுண்டும் மின்சாரம் போன்றது இலக்கியமெனின் எவ்விடமெனினும் அது தன்னில் தன்னால் பிரகாசிக்கும். அதை நோக்கிய பயணம், ஆசிரியர் க.வீரமணி அவர்களால் தொடங்கப்பட்டு விட்டது இச்சிறுகதைகளால்.

 

 

பாரதிசந்திரன்.

திருநின்றவூர்

9283275782

chandrakavin@gmail.com

 

குறிச்சொற்கள்:

 

படைப்பாற்ற உளவியல், படைப்பாளர், ஆல்பிரட் ஆட்லர்,  சிக்மண்ட் பிராய்ட், ஜி ஆல்போர்ட், .மாஸ்லோ, யுங், பிரான்சிஸ் பேக்கன், .வீரமணி,  சொர்க்கபுரி