நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

புதன், 11 ஜனவரி, 2023

"அது தன்னில் தன்னால் பிரகாசிக்கும்”

அது தன்னில் தன்னால் பிரகாசிக்கும்

(அப்பாவின் காதலி- சிறுகதை நூல் விமர்சனம்)

 

பாரதிசந்திரன்.


 

படைப்பாற்ற உளவியல்” (CREATIVE PSYCHOLOGY) வெளிப்பாடுகள், தொடர் சமூக வரலாற்றில் மிகுந்த கவனத்துடன் அவதானிக்கப்படுகையில், படைப்பாளர் மற்றும் சுற்றுச்சூழல், காலம், சமூக ஒழுங்கு, குழுவாழ்க்கை, அறம் சார்ந்த நடைமுறைகள் ஆகியவை ஒருங்கே சேர்ந்து கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுகின்றன.

 

சமூகத்திற்குப் படைப்பு எதையோ நகர்த்திச் செல்ல வேண்டிய பொறுப்பைப் பெற்றிருக்கவில்லை. அதன் நம்பிக்கை முழுமையுமான நிகழ்வுப் பதிவுகளின் உணர்வுப் பரிமாறுதலையே மையம் கொண்டு சுழல்கின்றன.

 

தனிமனித கவனித்தலும், ரசித்தலும், மேம்பட்ட தீவிர உள்வாங்குதலுக்குப் பிரதானமான காரணமாக இருந்தாலும், பிரிது ஒருவருக்குக் கடத்தி விட உணர்வு துடிப்பதே பெரும் பகுதி நியாயமாயும் இருக்கிறது. இயல்பாகவும் இருக்கிறது.

 

மாபெரும் உளவியல் அறிஞர்ஆல்பிரட் ஆட்லர்’ (Alfred Adler) கூறிய படைப்பு வெளிப்பாடு தாழ்வு மனப்போக்கை ஈடு செய்ய வெளிவந்த அற்புதமான உத்தி என்பதை உற்று நோக்குகிறபொழுது, படைப்பாளரின் தேவைக்கான விருந்தாகவும், அவன் படைக்க விரும்பிய மாற்றாருக்கான விருந்தாகவும் படைப்பு மிகுந்து மிளிர்கிறது.

 

இவ்வாறான படைப்புத்திறனைச் சிறுகதை இலக்கிய வகையில் தெளிவு படுத்திக் காண முடியும். பிற துறைகளைவிட இத்துறை அதிகமாய் இக்கருத்தைப் புகுத்திக் கொண்டது எனலாம்.

 

படைப்பின் உணர்வுகள் அப்படியே வாசகனுக்கு சென்றடையும் சிறந்த கட்டமைப்பைச் சிறுகதை இலக்கியம் பெற்றிருக்கின்றன. இங்குசிக்மண்ட் பிராய்ட்’(Sigmund Freud) படைப்புத்திறன் குறித்தான கருத்தானது ஒப்புமைக் கருத்தாகிச் சரியாகப் பொருந்துவதைப் அறிந்து கொள்ளலாம். அதாவது சிக்மன்ட் பிராய்ட் படைப்பின் அடிப்படையில் குறித்து கூறும்பொழுது, “ ஆக்கப்பூர்வமான செயல்பாட்டைக் கோளத்திற்கு பாலியல் ஆசையின் பதங்கமாதல் (SUBLIMATION) (மாற்றம்) விளைவாகவும், பாலியல் கற்பனையானது சமூக ரீதியாக ஏற்றுக் கொள்ளக்கூடிய வடிவத்தில் ஒரு படைப்பு தயாரிப்பில் புறநிலைப் படுகின்றதுஎன்பார். படைப்புக்கு அடிப்படை இயற்கையின் எதிரி எதிர்  விருப்பே காரணமென்கின்றார்.

 

மேற்கண்ட படைப்பு மற்றும் படைப்புத்திறன் குறித்த விளக்கம் எல்லாம் எழுத்தாளர் க வீரமணி அவர்கள் எழுதியஅப்பாவின் காதலிசிறுகதை படித்து முடிக்கும்பொழுது, ஒப்புமையோடு  மனதில் எழுகின்றன.

 

ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு படைப்பு வெளிப்பாடு. ஜி ஆல்போர்ட் தன் திறனோடு சில கதைகளில் நிற்கின்றார். .மாஸ்லோ சில கதைகளில் சிரிக்கின்றார். யுங் சில கதைகளில் அவரே வெளிப்படுகின்றார். அறிவியலும் தொழில்நுட்பமும் இப்பிரபஞ்சத்தையே தலைகீழாக மாற்றிவிடும் என்பதை உணர்ந்த முதலாவது தத்துவஞானி பிரான்சிஸ் பேக்கன் சில கதைகளில் நின்று தத்துவம் கூறுகின்றார். இவ்வாறு படைப்புத்திறனைக் கோட்பாடுகளாகக் கூறிய பல அறிஞர்கள் இந்த நூலைப் படித்து முடிக்கும்பொழுது, இயல்பாகவே நம் நினைவுக்கு வருகிறார்கள் என்பது இச்சிறுகதை தொகுப்பின் மிகப்பெரும் பெருமையாகும்.

 

எழுத்தாளர் க.வீரமணி அனுபவங்களை அனுபவங்களாகப் பார்க்காமல் சமூகத்தின் அறமாகப் பார்க்கின்றார். எவ்வகை அனுபவமும் ஒவ்வொரு அறக்கருத்தை உலகத்திற்கு சொல்லுகிறது எனும் தத்துவத்தை வெளிப்படுத்துகின்றார். மொத்தம் 22 அனுபவங்கள் 22 சிறுகதைகளாக 22 அறக்கருத்துக்களாகச் சமூகத்திற்குப் பாடம்  நடத்தப்பட்டிருக்கின்றன.

 

காலத்தால் அழிவு பெறாத சிறுகதைகள் தமிழில் பல நூறு உண்டு என்னும் வரிசையில் இக்கதைகள் வருங்காலத்தில் சேர்க்கப்படலாம்.

 

கதாபாத்திரங்களாக, இச்சிறுகதைகளுக்குள் உலா வருகிறவர்கள் சாதாரணமானவர்களாக  நாம் அவர்களைக் கருதி விட முடியாது. கதை படித்து முடித்தவுடன் பசை போடாமல், பிரித்து விட முடியாதபடி நம்மோடு நாமாக ஒட்டிக் கொள்ளக் கூடியவர்கள்.

 

பெண் கதாபாத்திரங்களை ரசித்தலின் உச்சத்தில் வைத்தும், அடி ஆழத்தின் வலிகளைத் தேடிப் பிடித்து, அந்த ரணத்தை ஆற்றியும் தலைமேல் தூக்கிக் கொண்டு அவர்களின் பண்பை  நினைந்து  நினைந்து பேசுதலும் தெய்வமெனப் பாவித்து ஆராதனை செய்தும் பெண் கதாபாத்திரங்களைப் பதிவு செய்திருக்கிறார். ஆசிரியர் க. விரமணி.

 

எல்லோரும் புரிந்து வைத்திருக்க வேண்டிய சரியான பெண் உலகம், இவரின் பொன் உலகமாகும்.

 

நியாயம் தேடி முள் சங்கிலியைச் சாட்டையாய் உயர்த்தும் குரலும் சில இடங்களில் ரத்தக்கரை கொண்டிருக்கின்றன. படைப்பாளன் இதனைக் கூடச் செய்யாமல் விட்டிருந்தால், கொஞ்சம் கூட நிறமற்றவராக அல்லவா இருந்திருப்பார்? எனவே எந்தவிதப் பாகுபாடும் காட்டாமல் சில கதைகளில் புரட்சி வண்ணங்களைப் பூசிக்கொண்டு களமாடுகிறார். இதற்குச் சில கதைகள் உதாரணமாக இருக்கின்றன.

 

உள்ள அன்பை, நேசத்துடன் காதல் செய்யும் நேர்த்தியும், உடன் கலந்து ஒன்றாகி மெய்சிலிர்த்துப் புளகாங்கிதம் அடையும் காதல்இல்லறம் எனும் சொர்க்கலோகத்தை அடையாளப்படுத்திக் கதையாக்கி இருக்கிறார்.

 

இந்தக் கதைகள் வருங்கால இளைஞர்களுக்கு மெய் சிலிர்க்கும் முத்த தேசத்தை அடையாளம் காட்டும். உணர்வுகள் மிக நெருக்கமானவை. மனித மனங்கள் இந்தச் சொர்க்கபுரியில் முழுமையுமாகத் தன்னைக் கரைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த உணர்வுகளை அதன் இன்பம் குறைந்து விடாமல் அப்படியே கதையாக்கி தந்திருப்பது மிகச் சிறப்பானதாக இருக்கின்றது

 

.இலக்கியத்தில் உணர்வுகள் எப்படிப்பட்டதாயினும் ரசனைக்கானது எனில் மொழி கடந்தும், நாடு கடந்தும் பயணிக்கும். தொட்டால் சுண்டும் மின்சாரம் போன்றது இலக்கியமெனின் எவ்விடமெனினும் அது தன்னில் தன்னால் பிரகாசிக்கும். அதை நோக்கிய பயணம், ஆசிரியர் க.வீரமணி அவர்களால் தொடங்கப்பட்டு விட்டது இச்சிறுகதைகளால்.

 

 

பாரதிசந்திரன்.

திருநின்றவூர்

9283275782

chandrakavin@gmail.com

 

குறிச்சொற்கள்:

 

படைப்பாற்ற உளவியல், படைப்பாளர், ஆல்பிரட் ஆட்லர்,  சிக்மண்ட் பிராய்ட், ஜி ஆல்போர்ட், .மாஸ்லோ, யுங், பிரான்சிஸ் பேக்கன், .வீரமணி,  சொர்க்கபுரி

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக