நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

திங்கள், 19 ஜூன், 2023

நார்த்தாமலை சிவன் கோயில்களின் அற்புதங்கள் - பாராட்டுரை



 நார்த்தாமலை சிவன் கோயில்களின் அற்புதங்கள் - பாராட்டுரை 

முனைவர் பெ சசிக்குமார் 


நார்த்தாமலை சிவன் கோயில்களின் அற்புதங்கள் என்ற தலைப்பில் பாரதி சந்திரன் ஐயா அவர்கள் எழுதிய புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன்.

சைவ சமயம் ஆனது சோழர் ஆட்சி காலத்தில் ஆலயங்கள் எழுப்பித் தெய்வ வழிபாடுகள் மேற்கொண்டு சிறப்பாக வளர்ச்சி அடைந்து வந்தது.


அதிலும் குறிப்பாகச் சிவாலயங்கள் எழுப்பப்பட்டு சிவ வழிபாடு சிறப்பாக நடந்துள்ளது என்பதற்கு ஐயா அவர்களின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கோயில்களைப் பற்றிய விளக்கங்கள் நமக்குத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.


வெவ்வேறு காலகட்டங்களில் ஆண்ட மன்னர்கள் பற்றியும் அவர்கள் எவ்வாறு ஆலயங்களை எழுப்பித் தங்களின் சிறந்த கட்டிடக்கலையை உலகிற்கு தந்துள்ளார்கள் என்பதை பற்றியும் விளக்கமாக இந்நூலில் காண முடிகிறது.


ஆலயத்தில் உள்ள மூலவரைப் பற்றிய விளக்கங்கள் உடன் மற்ற பரிவார தெய்வங்களின் விளக்கங்களும் ஆலயத்தில் உள்ள அனைத்து தெய்வங்களைப் பற்றிய விளக்கங்களுடன்  அவற்றின் அமைப்பு அவற்றின் சிறப்புக்கள் போன்றவற்றையும் எடுத்துக் கூறிய விதம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.


அது மட்டுமன்றி ஊரின் தனிச்சிறப்பாகச் சஞ்சீவி பர்வதத்தின் ஒரு பகுதி இங்கே விழுந்து இருப்பதால் இம்மலையில் மூலிகைகள் மருத்துவத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது போன்ற தகவல்களையும் காண முடிகிறது.


விசயாலய சோழீச்சுரம் கோயிலைப் பற்றி விளக்கும் போது அதன் விமான அமைப்பு காஞ்சி கைலாசநாதர் கோயிலில் உள்ள விமான அமைப்பைப் போலவும் மற்றும் கோவை அன்னூரிலும் மற்றும் தாராபுரத்தில் உள்ள வலஞ்சுலிநாதர் கோயிலிலும் அமைந்துள்ள அமைப்பு போன்று இருக்கிறது என்ற விளக்கங்கள் கட்டிடக்கலை எந்த அளவுக்குச் சிறப்பாகச் செய்துள்ளார்கள் என்பதை தெளிவாக விளக்குகிறது.


புத்தகத்தின் மற்றும் ஒரு சிறப்பு பின்னிணைப்பாக அனைத்து கோயில்களின் அமைப்பையும் காட்சிக்குக் கொடுத்திருப்பது நேரில் சென்று வழிபாடு செய்வது போல் ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.


நார்த்தாமலை சிவன் கோயில்களின் அற்புதங்கள் என்ற தலைப்பில் ஐயா அவர்கள் ஒரு அற்புதமான படைப்பை நமக்கு அளித்துள்ளார்கள்.


இந்த நூல் நார்த்தாமலை சென்று வழிபாடு செய்வதற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.


வரலாற்றுச் சான்றுகள் மன்னர்களின் ஆட்சிக் காலங்களில் நடந்த திருப்பணிகள் கோயில்களின் கட்டிடக்கலை மற்றும் அனைத்து தெய்வங்களைப் பற்றிய அரிய விளக்கங்கள் போன்றவை அடங்கிய இந்த அற்புதமான புத்தகத்தைப் படிக்கும் போது ஒரு முறை நேரில் சென்று நார்த்த மலையைக் காண வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.


ஆன்மீகத் தகவல்களை அடுத்த தலைமுறையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஐயா எழுதிய இந்தப் புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.


நார்த்தாமலை பற்றியும் ஆன்மீக செய்திகளையும் இந்தப் புத்தகத்தின் மூலம் தெரிந்து கொண்டதற்காக ஐயாவிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்




முனைவர் பெ சசிக்குமார் 

அறிவியல் எழுத்தாளர் 

விஞ்ஞானி இஸ்ரோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக