பாரதிசந்திரன்
கற்றது போதும்,கணைக்க வா....
நன்றி......
சனி, 30 டிசம்பர், 2023
அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகம் 2024 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது...
மகிழ்ச்சியான அறிவிப்பு
நண்பர்களுக்குப் பகிரவும்
AMERICAMUTAMIL UNIVERSITY
அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகம்
2024 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது...
அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு கால பட்டயச் சான்றிதழ் படிப்புகள் 2023 ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டு உலக நாடுகளிலிருந்து 43 மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இச்சான்றிதழ் படிப்புக்கான வகுப்புகள் இணையத்தின் வழியாக அந்தந்த துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தி வருகிறோம்.
2024 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது. ஆர்வம் உள்ளவர்களை இப்பல்கலைக்கழகத்தின் வாயிலாகப் பட்டம் பெற அன்போடு அழைக்கின்றோம்.
பட்டயப்படிப்பு சார்ந்த விவரங்களைக் கீழ்கண்டவாறு காண்க.
Diploma in Introduction to Folklore
நாட்டுப்புறவியல் அறிமுகம்
Diplomain Religious literature
சமய இலக்கியங்கள்
Diploma in tribals language & Culture
பழங்குடியினரின் மொழியியல் மற்றும் பண்பாடு
Diploma in History and Studies of Tamil Literature
தமிழ் இலக்கிய வரலாறும் ஆய்வும்
Diploma in Self Assertive verses, training & report
தன்முனைக் கவிதைகள் பயிற்சியும் ஆய்வறிக்கையும்
Diploma in Tamil grammer - I
தமிழ் மரபிலக்கணப் பட்டயச்சான்றிதழ்
Diploma in Tamil grammer - I
தமிழ் மரபிலக்கணப் பட்டயச்சான்றிதழ்-
Diploma in Inscription
கல்வெட்டியல்
மேலும், தகவலுக்கு அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழக (www.americamutamiluniversity.
amutamiluniversity@gmail.com
University பதிவு எண்: 202201061554843/9275709
அமெரிக்கா முகவரி: 6643,லோகஸ்ட் குரோவ் டிரைவ், இண்டியானாபொலீஸ், இண்டியானா 46237, அமெரிக்கா.
தமிழக முகவரி:எண்:10.முதல் தெரு,ஸ்ரீ ராமாபுரம், ஆம்பூர் - 635802, திருப்பத்தூர் மாவட்டம்
எதிர்காலத்தில் அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகம் பெரிய அளவிலான கல்வி நிறுவனமாக இயங்க இருக்கிறது. பல ஆராய்ச்சிகளைச் செய்ய இருக்கிறோம். இந்த வாய்ப்புகளை உலக அளவில் இருக்கும் தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.
முனைவர் தாழை இரா. உதயநேசன்
வேந்தர்
டாக்டர் உ. ஆல்வின்
துணைவேந்தர்
முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன்
பதிவாளர் 9283275782
முனைவர் ஜோ.சம்பத்குமார்
கல்விக்குழுத்தலைவர் 99760 25731
திங்கள், 19 ஜூன், 2023
தமிழ்ச் சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- பாராட்டுரை
தமிழ்ச் சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- பாராட்டுரை
முனைவர் பெ சசிக்குமார்
தமிழ்ச் சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம் என்ற தங்களுடைய புத்தகத்தைப் படித்தேன். சிற்றிதழ் என்றால் என்ன என்ற சந்தேகம் புத்தகத்தின் அட்டை படத்தைப் பார்த்தது முதல் இருந்தது. அதற்குச் சரியான விளக்கம் கொடுக்கும் வகையில் அணிந்துரை தொடங்கியது. அது மட்டுமல்லாமல் தேனி சுப்பிரமணி அவர்களின் அணிந்துரை புத்தகம் என்ன பேசப் போகிறது என்ற கருத்துக்களைத் தெளிவாக எடுத்துரைத்திருந்தது.
விளம்பரம் இருந்தால் தான் விற்க முடியும் என்ற இந்த உலகத்தில் தரமான படைப்புகள் சிற்றிதழ்களில் இருந்து மக்களைச் சென்றடையாதது வருத்தம் தான். விளம்பரத்தின் மூலம் சுமாரான திரைப்படம் சிறப்பான திரைப்படமாக மாற்றப்படுவதைப் பலமுறை பார்த்திருக்கிறோம் . கண்டு கொள்ளாத கண்களுக்கு அகப்படாத ஆனால் தரமானதாக வந்துள்ள சிற்றிலக்கியப் படைப்புகளை இந்தப் புத்தகம் கொண்டு வந்துள்ளது சிறப்பு.
எங்கிருந்து எடுக்கப்பட்டது யார் எழுதினார்கள் என்ற தரவுகள் ஒவ்வொரு கட்டுரையின் பின்பும் இணைக்கப்பட்டுள்ளது புத்தகத்தின் சிறப்பு. சிறிய அளவில் அச்சிடப்பட்டு வெளியிடப்படும் மாத இதழ்கள் வெளியே காண்பது கடினம். அதுவும் ஒருமுறை வந்தால் எங்கே போகிறது என்று பலருக்கும் தெரியாது. புத்தக வடிவில் இப்படி வரும் பொழுது அதைச் சேமித்துப் பலமுறை படிக்க ஏதுவாக இருக்கிறது.
இதுவரை நான் கவிதை எழுதியது இல்லை என்றாலும் புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்த கவிதைகள் மனதை வருடும் வகையிலும் சமுதாயப் பிரச்சனைகளைப் பேசும் வகையிலும் இருந்தது என்றால் மிகையல்ல.
ஒரு கல்லூரி ஆய்வுக் கட்டுரையைப் போல நல்லதொரு தலைப்பை எடுத்து ஆய்வு செய்து காணக் கிடைக்காத படைப்புகளைத் தொகுத்து அதன் பின்னே இருக்கும் கருத்துக்களையும் வழங்கியது அருமை.
புதியதொரு முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
முனைவர் பெ சசிக்குமார்
அறிவியல் எழுத்தாளர்
விஞ்ஞானி இஸ்ரோ
நார்த்தாமலை சிவன் கோயில்களின் அற்புதங்கள் - பாராட்டுரை
நார்த்தாமலை சிவன் கோயில்களின் அற்புதங்கள் - பாராட்டுரை
நார்த்தாமலை சிவன் கோயில்களின் அற்புதங்கள் என்ற தலைப்பில் பாரதி சந்திரன் ஐயா அவர்கள் எழுதிய புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன்.
சைவ சமயம் ஆனது சோழர் ஆட்சி காலத்தில் ஆலயங்கள் எழுப்பித் தெய்வ வழிபாடுகள் மேற்கொண்டு சிறப்பாக வளர்ச்சி அடைந்து வந்தது.
அதிலும் குறிப்பாகச் சிவாலயங்கள் எழுப்பப்பட்டு சிவ வழிபாடு சிறப்பாக நடந்துள்ளது என்பதற்கு ஐயா அவர்களின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கோயில்களைப் பற்றிய விளக்கங்கள் நமக்குத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
வெவ்வேறு காலகட்டங்களில் ஆண்ட மன்னர்கள் பற்றியும் அவர்கள் எவ்வாறு ஆலயங்களை எழுப்பித் தங்களின் சிறந்த கட்டிடக்கலையை உலகிற்கு தந்துள்ளார்கள் என்பதை பற்றியும் விளக்கமாக இந்நூலில் காண முடிகிறது.
ஆலயத்தில் உள்ள மூலவரைப் பற்றிய விளக்கங்கள் உடன் மற்ற பரிவார தெய்வங்களின் விளக்கங்களும் ஆலயத்தில் உள்ள அனைத்து தெய்வங்களைப் பற்றிய விளக்கங்களுடன் அவற்றின் அமைப்பு அவற்றின் சிறப்புக்கள் போன்றவற்றையும் எடுத்துக் கூறிய விதம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
அது மட்டுமன்றி ஊரின் தனிச்சிறப்பாகச் சஞ்சீவி பர்வதத்தின் ஒரு பகுதி இங்கே விழுந்து இருப்பதால் இம்மலையில் மூலிகைகள் மருத்துவத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது போன்ற தகவல்களையும் காண முடிகிறது.
விசயாலய சோழீச்சுரம் கோயிலைப் பற்றி விளக்கும் போது அதன் விமான அமைப்பு காஞ்சி கைலாசநாதர் கோயிலில் உள்ள விமான அமைப்பைப் போலவும் மற்றும் கோவை அன்னூரிலும் மற்றும் தாராபுரத்தில் உள்ள வலஞ்சுலிநாதர் கோயிலிலும் அமைந்துள்ள அமைப்பு போன்று இருக்கிறது என்ற விளக்கங்கள் கட்டிடக்கலை எந்த அளவுக்குச் சிறப்பாகச் செய்துள்ளார்கள் என்பதை தெளிவாக விளக்குகிறது.
புத்தகத்தின் மற்றும் ஒரு சிறப்பு பின்னிணைப்பாக அனைத்து கோயில்களின் அமைப்பையும் காட்சிக்குக் கொடுத்திருப்பது நேரில் சென்று வழிபாடு செய்வது போல் ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.
நார்த்தாமலை சிவன் கோயில்களின் அற்புதங்கள் என்ற தலைப்பில் ஐயா அவர்கள் ஒரு அற்புதமான படைப்பை நமக்கு அளித்துள்ளார்கள்.
இந்த நூல் நார்த்தாமலை சென்று வழிபாடு செய்வதற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
வரலாற்றுச் சான்றுகள் மன்னர்களின் ஆட்சிக் காலங்களில் நடந்த திருப்பணிகள் கோயில்களின் கட்டிடக்கலை மற்றும் அனைத்து தெய்வங்களைப் பற்றிய அரிய விளக்கங்கள் போன்றவை அடங்கிய இந்த அற்புதமான புத்தகத்தைப் படிக்கும் போது ஒரு முறை நேரில் சென்று நார்த்த மலையைக் காண வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.
ஆன்மீகத் தகவல்களை அடுத்த தலைமுறையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஐயா எழுதிய இந்தப் புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
நார்த்தாமலை பற்றியும் ஆன்மீக செய்திகளையும் இந்தப் புத்தகத்தின் மூலம் தெரிந்து கொண்டதற்காக ஐயாவிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
முனைவர் பெ சசிக்குமார்
அறிவியல் எழுத்தாளர்
விஞ்ஞானி இஸ்ரோ
புதன், 11 ஜனவரி, 2023
"அது தன்னில் தன்னால் பிரகாசிக்கும்”
”அது தன்னில் தன்னால் பிரகாசிக்கும்”
(அப்பாவின் காதலி- சிறுகதை நூல் விமர்சனம்)
பாரதிசந்திரன்.
“படைப்பாற்ற உளவியல்” (CREATIVE PSYCHOLOGY) வெளிப்பாடுகள், தொடர் சமூக வரலாற்றில் மிகுந்த கவனத்துடன் அவதானிக்கப்படுகையில், படைப்பாளர் மற்றும் சுற்றுச்சூழல், காலம், சமூக ஒழுங்கு, குழுவாழ்க்கை, அறம் சார்ந்த நடைமுறைகள் ஆகியவை
ஒருங்கே சேர்ந்து கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுகின்றன.
சமூகத்திற்குப் படைப்பு எதையோ நகர்த்திச் செல்ல வேண்டிய
பொறுப்பைப் பெற்றிருக்கவில்லை. அதன் நம்பிக்கை முழுமையுமான நிகழ்வுப் பதிவுகளின் உணர்வுப் பரிமாறுதலையே மையம்
கொண்டு சுழல்கின்றன.
தனிமனித கவனித்தலும், ரசித்தலும், மேம்பட்ட தீவிர உள்வாங்குதலுக்குப்
பிரதானமான காரணமாக இருந்தாலும், பிரிது ஒருவருக்குக் கடத்தி விட உணர்வு துடிப்பதே பெரும் பகுதி நியாயமாயும்
இருக்கிறது. இயல்பாகவும் இருக்கிறது.
மாபெரும் உளவியல் அறிஞர் ’ஆல்பிரட் ஆட்லர்’ (Alfred Adler) கூறிய படைப்பு வெளிப்பாடு தாழ்வு மனப்போக்கை ஈடு செய்ய வெளிவந்த அற்புதமான உத்தி
என்பதை உற்று நோக்குகிறபொழுது, படைப்பாளரின் தேவைக்கான விருந்தாகவும், அவன் படைக்க விரும்பிய மாற்றாருக்கான
விருந்தாகவும் படைப்பு மிகுந்து மிளிர்கிறது.
இவ்வாறான படைப்புத்திறனைச் சிறுகதை இலக்கிய வகையில் தெளிவு
படுத்திக் காண முடியும். பிற துறைகளைவிட இத்துறை அதிகமாய் இக்கருத்தைப் புகுத்திக் கொண்டது எனலாம்.
படைப்பின் உணர்வுகள் அப்படியே வாசகனுக்கு சென்றடையும் சிறந்த
கட்டமைப்பைச் சிறுகதை இலக்கியம் பெற்றிருக்கின்றன. இங்கு ‘சிக்மண்ட் பிராய்ட்’(Sigmund Freud) படைப்புத்திறன் குறித்தான கருத்தானது ஒப்புமைக் கருத்தாகிச் சரியாகப் பொருந்துவதைப்
அறிந்து கொள்ளலாம். அதாவது சிக்மன்ட் பிராய்ட் படைப்பின் அடிப்படையில் குறித்து
கூறும்பொழுது, “ ஆக்கப்பூர்வமான செயல்பாட்டைக் கோளத்திற்கு பாலியல் ஆசையின் பதங்கமாதல் (SUBLIMATION) (மாற்றம்) விளைவாகவும், பாலியல் கற்பனையானது சமூக ரீதியாக
ஏற்றுக் கொள்ளக்கூடிய வடிவத்தில் ஒரு படைப்பு தயாரிப்பில் புறநிலைப் படுகின்றது” என்பார். படைப்புக்கு அடிப்படை இயற்கையின்
எதிரி எதிர் விருப்பே காரணமென்கின்றார்.
மேற்கண்ட படைப்பு மற்றும் படைப்புத்திறன் குறித்த விளக்கம்
எல்லாம் எழுத்தாளர் க வீரமணி அவர்கள் எழுதிய ”அப்பாவின் காதலி” சிறுகதை படித்து முடிக்கும்பொழுது, ஒப்புமையோடு மனதில் எழுகின்றன.
ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு படைப்பு வெளிப்பாடு. ஜி ஆல்போர்ட் தன் திறனோடு சில கதைகளில் நிற்கின்றார். ஏ.மாஸ்லோ சில கதைகளில் சிரிக்கின்றார். யுங் சில கதைகளில் அவரே வெளிப்படுகின்றார். அறிவியலும் தொழில்நுட்பமும் இப்பிரபஞ்சத்தையே
தலைகீழாக மாற்றிவிடும் என்பதை உணர்ந்த முதலாவது தத்துவஞானி பிரான்சிஸ் பேக்கன்
சில கதைகளில் நின்று தத்துவம் கூறுகின்றார். இவ்வாறு படைப்புத்திறனைக் கோட்பாடுகளாகக் கூறிய பல அறிஞர்கள் இந்த நூலைப் படித்து
முடிக்கும்பொழுது, இயல்பாகவே நம் நினைவுக்கு வருகிறார்கள் என்பது இச்சிறுகதை தொகுப்பின் மிகப்பெரும்
பெருமையாகும்.
எழுத்தாளர் க.வீரமணி அனுபவங்களை அனுபவங்களாகப் பார்க்காமல் சமூகத்தின் அறமாகப் பார்க்கின்றார். எவ்வகை அனுபவமும் ஒவ்வொரு அறக்கருத்தை
உலகத்திற்கு சொல்லுகிறது எனும் தத்துவத்தை வெளிப்படுத்துகின்றார். மொத்தம் 22 அனுபவங்கள் 22 சிறுகதைகளாக 22 அறக்கருத்துக்களாகச் சமூகத்திற்குப்
பாடம் நடத்தப்பட்டிருக்கின்றன.
காலத்தால் அழிவு பெறாத சிறுகதைகள் தமிழில் பல நூறு உண்டு
என்னும் வரிசையில் இக்கதைகள் வருங்காலத்தில் சேர்க்கப்படலாம்.
கதாபாத்திரங்களாக, இச்சிறுகதைகளுக்குள் உலா வருகிறவர்கள்
சாதாரணமானவர்களாக நாம் அவர்களைக் கருதி விட முடியாது. கதை படித்து முடித்தவுடன் பசை
போடாமல், பிரித்து விட முடியாதபடி நம்மோடு
நாமாக ஒட்டிக் கொள்ளக் கூடியவர்கள்.
பெண் கதாபாத்திரங்களை ரசித்தலின் உச்சத்தில் வைத்தும், அடி ஆழத்தின் வலிகளைத் தேடிப்
பிடித்து, அந்த ரணத்தை ஆற்றியும் தலைமேல் தூக்கிக் கொண்டு அவர்களின் பண்பை நினைந்து நினைந்து பேசுதலும் தெய்வமெனப்
பாவித்து ஆராதனை செய்தும் பெண் கதாபாத்திரங்களைப் பதிவு செய்திருக்கிறார். ஆசிரியர் க. விரமணி.
எல்லோரும் புரிந்து வைத்திருக்க வேண்டிய சரியான பெண் உலகம், இவரின் பொன் உலகமாகும்.
நியாயம் தேடி முள் சங்கிலியைச் சாட்டையாய் உயர்த்தும் குரலும்
சில இடங்களில் ரத்தக்கரை கொண்டிருக்கின்றன. படைப்பாளன் இதனைக் கூடச் செய்யாமல் விட்டிருந்தால், கொஞ்சம் கூட நிறமற்றவராக அல்லவா
இருந்திருப்பார்? எனவே எந்தவிதப் பாகுபாடும் காட்டாமல் சில கதைகளில் புரட்சி வண்ணங்களைப் பூசிக்கொண்டு
களமாடுகிறார். இதற்குச் சில கதைகள் உதாரணமாக இருக்கின்றன.
உள்ள அன்பை, நேசத்துடன் காதல் செய்யும் நேர்த்தியும், உடன் கலந்து ஒன்றாகி மெய்சிலிர்த்துப்
புளகாங்கிதம் அடையும் காதல்இல்லறம் எனும் சொர்க்கலோகத்தை அடையாளப்படுத்திக் கதையாக்கி
இருக்கிறார்.
இந்தக் கதைகள் வருங்கால இளைஞர்களுக்கு மெய் சிலிர்க்கும்
முத்த தேசத்தை அடையாளம் காட்டும். உணர்வுகள் மிக நெருக்கமானவை. மனித மனங்கள் இந்தச் சொர்க்கபுரியில் முழுமையுமாகத் தன்னைக் கரைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த உணர்வுகளை அதன் இன்பம் குறைந்து
விடாமல் அப்படியே கதையாக்கி தந்திருப்பது மிகச் சிறப்பானதாக இருக்கின்றது
.இலக்கியத்தில் உணர்வுகள் எப்படிப்பட்டதாயினும் ரசனைக்கானது எனில் மொழி கடந்தும், நாடு கடந்தும் பயணிக்கும். தொட்டால் சுண்டும் மின்சாரம்
போன்றது இலக்கியமெனின் எவ்விடமெனினும் அது தன்னில் தன்னால் பிரகாசிக்கும். அதை நோக்கிய பயணம், ஆசிரியர் க.வீரமணி அவர்களால் தொடங்கப்பட்டு
விட்டது இச்சிறுகதைகளால்.
பாரதிசந்திரன்.
திருநின்றவூர்
9283275782
குறிச்சொற்கள்:
படைப்பாற்ற உளவியல், படைப்பாளர், ஆல்பிரட் ஆட்லர், சிக்மண்ட் பிராய்ட், ஜி ஆல்போர்ட், ஏ.மாஸ்லோ, யுங், பிரான்சிஸ் பேக்கன், க.வீரமணி, சொர்க்கபுரி
சனி, 31 டிசம்பர், 2022
தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்
தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம்
(நிறைவேறாத ஆசை- சிறுகதை விமர்சனம்)
“காற்றுவெளி” ஐப்பசி மாத மின்னிதழில் வெளிவந்த “நிறைவேறாத ஆசை” எனும் இந்தச் சிறுகதை, படிப்போரின் உள்ளத்தினுள் அமிழ்து கிடக்கும் ஆயிரம் ஆயிரம் உணர்வுகளைத் தட்டி எழுப்பிக் கிளை விடச் செய்யும் தன்மை வாய்ந்தது. அச்சிறுகதையின் தன்மைகுறித்துக் காண்பது தேவையாகிறது
“மனதின் உள்ளே புதைக்கப்பட்டிருக்கும் ஆசைகளும், எண்ணங்களும், நினைவுகளும், கனவில் வெளிப்படும் அத்தகைய கனவுக் காட்சிகளையே கலை இலக்கியங்களாகப் படைப்பது தான் மிகையதார்த்தவாதம் ஆகும்” எனும் இலக்கியக் கோட்பாடு ஒரு சிறுகதையைப் படித்தவுடன் அப்படியே பொருந்துகிறது அந்தச் சிறுகதை தான், எழுத்தாளர் சுந்தரிமணியன் எழுதிய ‘நிறைவேறாத ஆசை’
உலக உயிர்களின் அடிப்படை மூலக்கூறுகள் தன் தாயின் பாசத்திற்கு நெருங்கிய தொடர்பை எப்பொழுதும் பெற்றிருப்பவை ஆகும். தாயின் உடலோடு, தாயின் மனதோடு, தாயின் செயல்களோடு உருவாகி அதை உள்வாங்கித் திரிபவைகள் தான் எல்லா உயிர்களும்.
அம்மா… அம்மா… அம்மாவின் கருவறையை விட உலகில் பெரிது எது? அம்மாவோடு நெருங்கிய நினைவலைகள், இறக்கும் வரை நீண்டு கிடக்குமே, அதனைத் தொட்டுத் தடவிப் பார்த்து எவ்விதக் கற்பனையும் கலக்காமல் அப்படியே உருவம் அமைத்துத் தந்திருப்பது தான், இச்சிறுகதையின் மாபெரும் உத்தியாக இருக்கிறது.
’மிகைஎதார்த்தவாதம்’ எதையும் ஆராய்வதை மறுக்கிறது. ஒழுங்கு அமைத்தலை வெறுக்கிறது. இருப்பதை அப்படியே ஆழ்மனத்தைத் தூரிகையோடும், பேனாவோடும் நினைத்துக் கலையழகும் கவினழகும் காண வேண்டும்’ என்பது மிகைஎதார்த்த வாதத்தின் அறிவுரையாகும்.
சிறுகதையின் தொடக்கமானது, அந்த நாளில் நடந்த நிகழ்வுகுறித்த சிந்தனையாகத் தொடங்குகிறது. ஒரு நிமிடச் சிந்தனை, பத்து ஆண்டுகளை அது சுமந்து நிற்கிறது.
தாய் இறந்து இன்றோடு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதாகக் கதை தொடங்குகிறது. அந்த நிமிடத்தில் தாயின் வாழ்வில் குறைந்தது 10 ஆண்டுகளினுடைய சிறப்பை மனம் அசை போடுகிறது. அன்புமகளின் மனம் படுகிற வேதனையை இந்தச் சிறுகதை அப்படியே வெளிப்படுத்துகிறது.
ஜி. நாகராஜனின் ’நாளை மற்றும் ஒரு நாளே’ என்கின்ற நாவலில் உள்ள காலம் எவ்வளவு குறுகியதோ, அத்தன்மையைப் போல் இச்சிறுகதையும் காலத்தால் சிறிதாகி, நினைவூட்டங்களால் நீண்டு தரமிக்க இலக்கியமாக மாறி இருக்கிறது.
அன்புமகள் தன் தாயின் நினைவுகளைத் தன் ஒவ்வொரு செயலின் பொழுதும் நினைத்துப் பார்த்துக் கொள்ளும் தன்மையை இச்சிறுகதை எடுத்துக்காட்டுகிறது. தன் வாழ்க்கையில் நடந்த சோகங்களின் ஒட்டுமொத்தப் பிரிவையும் அந்த நினைவோட்டத்தில், சிறுகதை ஆசிரியர் நினைத்துப் பார்த்துத் தன் வலியைக் கதையினூடாக வாசகனுக்கு அனுப்புகிறார்.
அம்மா இறந்ததற்குக் காரணம், அப்பாவின் இறப்பும், அண்ணனின் இறப்பும் தான் காரணம் எனக் காரணம் கற்பிக்கின்றாள். அது முக்கியமான காரணம் அல்லவா? எந்தத் தாயாலும் தன் மகன் இறப்பை, தன் முன்னால் காணவா முடியும்?
தன் கணவனுக்கு முன் தான் இறந்து விட வேண்டும் என்று எல்லாப் பெண்களும் வயது முதிர்ந்த காலத்தில் நினைக்கிறார்கள். இதுவே அன்பின் முதிர்ச்சியாகும். ஒருவரைப் பிரிந்து ஒருவர் இருக்க முடியாது என்பதை அன்றில் பறவை கொண்டு கூறும் இனமல்லவா நம் இனம்.
மூவரின் இறப்பு. அதாவது அப்பா முதலில் இறக்கிறார். பின் அண்ணன் இறக்கிறார். இதெல்லாம் தாங்க முடியாது தாயும் நோய் வாய்பட்டு இறக்கிறார். இதை எல்லாம் தாங்கிக் கொண்டு அன்புமகள் துன்பத்தோடு நினைத்துப் பார்க்கிறார். வலியின் நெருடல்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வடிவில் இருக்கின்றன என்பது விளங்குகிறது.
இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், அம்மாவோடு வாழ்ந்த நாட்கள். அன்பு மகள் கண் முன்னே நிழலாடுகின்றன. அம்மாவின் சர்க்கரை குறைவான காப்பி. அவள் போடுகின்ற அந்த முறை. தினம் தினம் பேரக்குழந்தைகளுக்குச் செய்து தரும் உடனடிப் பலகாரங்கள். அதன் சுவை, பணம் இருந்தும் இப்பொழுது எங்களால் அதனைச் செய்து சாப்பிட முடியவில்லை. செய்தாலும் அந்தச் சுவை வரவில்லை என்பதாக ஒவ்வொரு செயல்களிலும் தன் தாயை நினைத்து நினைத்துப் பூரிக்கிறாள் அன்பு மகள்.
அப்பாவிற்கும் அம்மாவிற்கும் இடையில் வாக்குவாதம் தொடர்ந்து இருக்கும். அப்படி இருந்து வந்தாலும் அதற்குள் காணப்பட்ட அன்பையும், பாசத்தையும் உணர்ந்து பார்க்கும் உணர்வுகள்,
முதியோர்காதலை ரசிக்கும் ரசனையே தம்மை ஈடற்ற வாழ்வை வாழச் செய்யும் என்பது தானே படிப்பினை. அதனை இக்கதையில் ஆசிரியர் பலவாறாக நினைத்துப் பார்த்துச் சந்தோஷப்படுகிறார்.
அப்பாவின் மேல் அம்மா கொண்ட காதலை உணர்ந்த உணர்வு அத்தகையது.
அப்பாவின் குணம், அம்மாவை நேரடியாகப் பாராட்டாமல் தன் நெருக்கமானவர்களிடம் அம்மாவின் செயல்களைப் பாராட்டிக் கூறுவதும், கோலத்தை ரசிப்பதுமான உணர்வு, அதைக் கண்டும், அதன் உள்ளார்ந்த உணர்வுகளைப் புரிந்து கொண்டு கூறியிருக்கின்ற விதம் சிறப்பாகும்.
அன்பு மகள் தன் அம்மாவைப் போலவே வாழ வேண்டும் என இயங்குகிறாள். ஏங்குகிறாள். சேலை கட்டும் அழகு உள்பட. சேலை கட்டும் லாபகம் கூடத் தன் தாயின் சாயலில், அதன் மென்மையில் இருக்க வேண்டும் எனும் ஆவல். அதன் உணர்வு மிகவும் மெல்லியதானது.
தாயின் வாழ்வியல் கூறுகள் அனைத்தும் ரசனைக்கு உட்படுத்தப்பட்டு அடுத்த தலைமுறைக்கு அப்படியே பரிணாமம் ஆகி இருக்கின்றன.
தாய் சமைத்து வைக்கும் இடியாப்பமும் புதினா சட்னியும் இனி எப்பொழுது சாப்பிட போகிறோம் எனும் ஏக்கம் சிறுகதை ஆசிரியரின் எழுத்தில் தெரிகிறது. பிரிவு எவ்வளவு கசப்பானது. அதுவும் முழுமையாகப் பிரிந்து விடும்பொழுது ஆழமான துன்பம் வாட்டி வதைக்கத்தான் செய்கிறது.
படைப்பின் பரிமாற்றம் இந்த இடத்தில், உலகளாவிய மானிட சமூகத்தின் ஆழ்மனப் பதிவு ஒற்றுமைகளை எல்லாம் தொட்டுப் பார்க்கின்றன. உண்மையான இலக்கியம் எதுவோ, அது இவ்வேலையைக் கட்டாயம் செய்யும். அவ்வாறான இலக்கியமே, பொதுவியல் தன்மை பெற்று உலகம் தழுவியதாக அடையாளப் படுகிறது. அவ்வகையில் நிறைவேறாத ஆசை சிறுகதை உலகப் பொதுமைக்குமான தரத்தைத் தன்னிடத்தில் கொண்டுள்ளது என்பதைக் காலம் இலக்கியவாதிகளுக்கு விளக்கும்.
சிறுகதை ஆசிரியரின் மன ஓட்டங்கள் அப்படியே சர்ரியலிச பாணியில் ஒன்றன் பின் ஒன்றாக அல்லாது, சரியாக மனப் பேதலித்தல் நிலையில் எங்கெங்கு செல்கிறதோ, அங்கங்கு கதையின் ஓட்டம் இருக்கிறது.
எண்ணங்கள் அலைபாயும் போக்கில், அதை அப்படியே எழுதுவது எழுத்தாளனுக்கு பெரும் சவால். அதைவிட அந்த அனுபவ வெளிப்பாட்டை வாசகனுக்குக் கடத்துவது அதைவிடச் சவாலாக இருக்கும். ஆனால், இச்சிறுகதை அப்படியே சென்று விடாமல், வாசகனுக்கு அந்த உணர்வுகளைக் கடத்துகிறது.
மேம்பட்ட எழுத்து நடை கொண்ட எழுத்தாளர்களே இது போன்ற உணர்வுக் கடத்தலைச் செய்ய முடியும். அதற்கு இச்சிறுகதை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஒரு பக்கம் தாயின் சோகம். இன்னொரு பக்கம் தாயோடு வாழ்ந்த வாழ்வியலின் இன்பம். இவை இரண்டும் இக்கதையில் சாமர்த்தியமாக வெளிப்படுத்தப் பட்டுள்ளன.
தாயின் பிரிவு தாங்காத அன்பு மகளின் தூக்கத்தைக் கெடுக்கும் பேரழுத்தம் இது. கதை படித்து முடிக்கும்பொழுது, இந்தப் பேரழுத்தம், நம் தூக்கத்தையும் கெடுக்கத்தான் செய்கிறது.
சிறுகதை விமர்சனம்:
பாரதிசந்திரன்
9283275782
chandrakavin@gmail.com