நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

சனி, 31 ஜூலை, 2021

புழுதிபடிந்த சொற்கள்- கவிதை நூலை முன்வைத்து... “யாதொன்றின் மீவுரு”

 நூல் அறிமுகம்: 

 “யாதொன்றின் மீவுரு” 

(புழுதிபடிந்த சொற்கள்- கவிதை நூலை முன்வைத்து…) – பாரதிசந்திரன்.



நூல்: புழுதிபடிந்த சொற்கள்- கவிதை நூல் 
ஆசிரியர்: கவிஞர் க. சித்தார்த்தன் 

பருவம் கடந்து பயணிப்பதும், அந்நாட்களின் உணர்வுப் பிரதிபலிப்புகளை அப்படியே உணர்வதும், அதன் பிம்பம் மாறாமல் மனக்கண் முன் காட்சியை உருவாக்கித்தருவதும் படைப்பின் சிறப்பு எனலாம். தன்முன்னதான நிகழ்வை உருவமைப்பது கூடச் சிலசிலநேரங்களில் இல்லாததாக மாறிவிடும் படைப்பாளனின் இயலாமைக்கு நடுவில், இது சாத்தியமானது ஒருவகை வியப்பே !

அசங்கல் புசங்களாக மனத் திரையில் விரியும் பழமையின் சுவடுகள் நீண்ட மறைத்தன்மை கொண்டவை. அவை, நிழலாடும் இருண்மையைத் தனக்குள் பொதித்து வைத்திருப்பவை. முழுவதுமான அதன் உள்ளார்ந்த பேரழகை அல்லது நெடிது நீண்ட சோகப் பின்னணியைத் தொட்டுத் தடவி உள்ளது உள்ளவாறு உணர்ந்து விடுவது எல்லாப் படைப்பாற்றலையும் விட உன்னதமாய் இருக்கிறது.

ஆழ்மன உணர்வுகளைக் கவிதைக்குள் வடிப்பதைக் கவிஞர்கள் பெரும்பாலும் விரும்புவர். அது கவிதையையும், கவிதையைப் படிப்பவரையும் சிறந்த இடத்துக்கு அழைத்துச் செல்லும். கவிதை எல்லோருக்கும் பொதுவான எல்லாருக்குமான உணர்வுகளை மீட்டெடுத்து தருவதாகும்.

”ஒரு நல்ல கவிதை, தன்னை அனைத்திலிருந்தும் துண்டித்துக் கொள்ளக்கூடியது. அப்படியான கவிதை காலத்திற்கும் அப்பால் எடையறு சுழற்சியைத் தனதே கொண்டபடி அலைகிறது. எப்பொழுதெல்லாம் வாசிக்கப்படுகிறதோ, அப்போதெல்லாமான பொழுதுகளின் தொகுப்பாக அதன் அதன் காலம் அமைகிறது. மௌனம் என்பது கவிதையைப் பராமரிக்கிற காலத்தின் பேழையாகிறது” என்பர் அசோகமித்திரன்.



அதேபோல, கவிஞர் சித்தார்த்தன் எழுதிய புழுதி படிந்த சொற்கள் நூலிலுள்ள கவிதைகளும் காலத்திற்கு அப்பால் உள்ள உண்மையான உணர்வுகளைப் பதிவு செய்து வெளிப்படுத்தியுள்ளன.

”வெறுமை சூழ்ந்து இருக்கும் அறையில்

தாழிட்ட கதவுக்குப் பின்

தனிமையில் இருந்த நான்

கடந்த கால ஞாபகங்களின்

கதவைத் தட்டினேன்”

இக்கவிதை வரிகள் தான் அனைத்துக் கவிதைகளுக்குமான திறவுகோல் ஆக அமைந்திருக்கிறது. இதை வைத்துக் கொண்டு நூலின் ஒட்டுமொத்த கவிதைகளையும் படைப்பாளனின் உணர்வாக இதைக் கொண்டே கூறிவிடலாம். இதுவே கவிதைகளுக்கான தன்மையை வெளிப்படுத்தும் வசனமாக இருக்கிறது.

கவிஞன் தன் இளமைக் காலத்தின் நடுவில், கேமராவுடன் நின்று உறவுகளை வரிசையாய் வட்டமாய் நிற்கவைத்து ஒவ்வொருவரையும் பல கோணங்களில் அலாதியான உணர்வுகளின் விழி கொண்டு அவர்களைப் படம் பிடித்து இருக்கின்றார் . அதுவே இக்கவிதைத் தொகுப்பின் கவிதைகள் ஆகியிருக்கின்றன.

பள்ளிப்பருவத்தில், வீட்டில் சாப்பிட்டுப் போட்ட மாங்கொட்டை ஒன்று துளிர்க்கத் தொடங்கியது. கவிஞன் அதை நட்டு வைத்துப் பராமரிக்கிறார். அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறது. ஆனால், உறவுகள் அனைவரும் ஒவ்வொன்றாய் கூறி அந்தச் செடியை வளர்க்க வேண்டாம் என்கின்றனர். அது கேட்காமல் பாசம் கொட்டி அதைக் கவிஞர் வளர்க்கிறார். ஆனால் ஒருநாள், பள்ளி விட்டு வரும்பொழுது அந்தச் செடிக் காய்ந்து போய்க் கிடந்தது. அது அவருக்குள் பெரும் இழப்பாக இருந்தாக மாங்கன்று கவிதையில் ஒரு காட்சியை விளக்குகிறார். அந்தச் செடி காய்ந்து போனதை,

”பள்ளி விட்டு வீடு திரும்பும்

ஒரு மாலை நேர வேளையில்

என் எதிர்கால மாமரம்

இறந்து கிடந்தது .

கள்ளிப்பால் ஊற்றிக் கொன்ற ஒரு

பெண் சிசுவைப் போல ”

எனச் செடியைக் குழந்தையாகப் பாவித்து இறந்த கதையை இக்கவிதை மிகச் சோகமாக விளக்கி நிற்கின்றது.

தனிமையின் பொழுதுகளில், நம் நினைவுகள் நம்மைத் தனித்து இருக்க விடாது. அது பல நிகழ்வுகளை நம் கண் முன்னே ஓடவிடும். அங்கு பல உறவுகளுடன் நமது வாழ்க்கையில் நடந்த பல காட்சிகள் விரியும். அதை, ”உடன் இருக்கும் நினைவுகள்” கவிதை விளக்கிக் காட்டுகிறது.



கவிஞரின் பார்வையில், சமூக ஓட்டத்தில் மிக முக்கியமானவர்கள் எனக் கூறும்பொழுது, தன்னைச் சுற்றி இருக்கும் சொந்தங்கள் மற்றும் விவசாயிகள், தொழிலாளிகள் தான். அவ்வகையில் ”விவசாயி” எனும் கவிதையில், விவசாயி படும் வேதனைகள் பல நேர்த்தியாகக் கூறப்பட்டுள்ளன.

”பசுமை பூத்திருக்கும் வயல்களின்

வரப்பில் அமர்ந்து

சோறு உண்ணும் சேறு பூசிய முகங்களில்

காய்த்துப் போன

கண்ணீர் கோடுகள்”

உளப் பிறழ்வுக் கவிதையாகப் ” பயம்” கவிதை விளங்குகிறது. அக்கவிதையில்,

”இரவு எட்டுமணிக்குப் பிறகே

நினைவில் வந்து

நீந்துகின்றன

மந்திரவாதி அனுப்புவதாய் சொன்ன

குட்டிச் சாத்தான்கள்.

 

தூரத்து நாயொன்று

ஜாமத்தில் குரைக்கையில்

அப்பாவை அணைத்தபடி

ஆறுதல் அடைகிறேன்.”

எனப் பயத்தை விரிவாக விளக்குகிறார். இளமையில், அறியாமையில், தனக்குள் நிகழ்ந்த பய உணர்வைத் தற்பொழுது மீண்டும் அவ்விடத்திற்குச் சென்று, அதைத் தோண்டி எடுத்து அழகான உணர்வுகளோடு கவிதை ஆக்குவது எவ்வளவு கடினமான செயல்பாடு, அந்த மனநிலையைத் தன் படைப்பாற்றலில் கொண்டு வந்த சிறப்பு அரியதாகும். அதைக் கவிஞர் சித்தார்த்தன் இக்கவிதையில் செய்து காட்டியிருக்கிறார்

”சாதாரண செயல்பாடுகளில் கூடப் பதற்றம் அல்லது பயம் ஏற்படும் பிறழ்வு ”பதக்களிப்புக் கோளாறு” என இம் மனப்பிறழ்வு வகைப்படுத்தப்படுகிறது. அச்சக் கோளாறுகளில் ஒன்று பொதுவாக வகைப்படுத்தப்படும். அவற்றில், பலரது சமூகத்து முன் வருவதற்கு வெட்கப்படல் (SOCIAL ANXIETY DISORDER) திகில் அடைதல், வெளியே கண்டும் மருளல் (agoraphobia) அதிர்ச்சியால் ஏற்படும் அழுத்தப் பிறழ்வு, மனஅலைக்கழிவுப்பிறழ்வு( obsessive compulsive disorder) என்பன சில இவற்றின் சில ஆகும்” என உளவியல் குறித்த கோட்பாடுகள் விளக்கப்படுகின்றன. இவ்வகைக்கு உதாரணமாகக் கவிதைகள் பலவற்றை இத்தொகுப்பில் காணமுடிகின்றது. கடைசி நிமிடங்கள், தற்கொலை, வெட்டியான் போன்ற கவிதைகள் இதற்கு உதாரணமாகும்.



ஒரு பிச்சைக்காரனின் இயல்பு வாழ்க்கையானது, இன்பத்தை வெறுத்து மேம்பட்ட வாழ்வைத் தருவதாகவே வாழ வேண்டியுள்ளது. அதுவே நல்ல வாழ்வும் கூட, அது புத்தனின் வாழ்வை போன்றும், போதனையைப் போன்றும் உள்ளன என ”யாசகனின் கவிதை” விளக்குகிறது

”ஜாதி மதங்கள் அற்ற ஒரு

சமத்துவ தேசத்தை

அவனுக்குள் அவன்

ஆட்சி செய்து கொண்டிருக்கிறான்.

பசிக்கு இரை

படுக்கத் தரை

இதனின் நிம்மதி

எங்கேனும் உண்டோ எனப்

போய்க்கொண்டிருந்தான்

புத்தனைப் போல்”

வாழ்வை வெவ்வேறு கோணங்களில் பார்க்கும் கவிஞனின் பார்வை மற்றவர்களிடமிருந்து அவரை வித்தியாசப்படுகின்றது.

”தூய்மை இந்தியா” கவிதை ஒரு சமூகக் கவிதையாகக் காணப்படுகிறது. அனைத்து விதமான தரம்கெட்ட அரசியல் நிகழ்வுகளைக் கவிதையால் நக்கல் செய்கின்றார். அதில்,

”ஜாதிமதச் சண்டையால்

கிழிந்து கிடக்கும் இந்த ஆடையில்

எப்படி தைக்க போகிறாய்

உன் தேசியக்கொடியை.

மாதக் கடைசியில்

மணிப் பர்சைப் போல

இளைத்துக் கிடக்கிறது

இந்தியா”

என நம் நாட்டைப் பார்த்து ஆதங்கப்படுகிறார். மேலும்,

”சலூன் கடைக்காரர்

கூட்டிப் பெருக்கி

ஓரம் தள்ளினார்

எல்லா ஜாதி மயிரையும்”

என்னும் கவிதை சமூகத்துக்கு அளித்த சவுக்கடி ஆகும். நம் நிலையை மிக நேர்த்தியான முறையில், தமது கவிதைகளில் விளக்கமாக, அதேநேரம் உணர்வுப் பிரதிபலிப்பாகச் சமூகக் கவிதைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

கவிஞனின் பல்வேறு கவிதைகள் இத்தொகுப்பில் ஆழ்மன உளவியல் கவிதைகளாக, சமூகக் கவிதைகளாக, அழகியல் கவிதைகளாக, நவீனக் கவிதைகளாகக் காணப்படுகின்ற நிலையை அறிய முடிகிறது.



அழகியல் கவிதையாக ”விடியல்” கவிதை உள்ளது. அதில், ”அம்மா காலைப்பொழுதில் வீட்டின் முன் கோலம் இடுகிறாள். விடியல் அவள் காலில் விழுந்து கிடக்கிறது” என்று கற்பனையாக ஒரு காட்சியைக் கொண்டு வருகிறார். பூக்களின் முகத்தில் பனித்துளி பருக்கள் என்று இயற்கை அழகைப் பாடுகிறார் இப்படியாக, இயற்கை கற்பனைகள் இன்னும் இக்கவிதைத் தொகுப்பில் நீண்டு கிடக்கிறன.

கவிஞர் சித்தார்த்தன் தன் எழுத்துக்களால் தன் துன்பமும் கோபமும் சோகமும் அடியோடு காணாமல் போகிறது என்பதை

”கண்கள் நிரம்பி தளும்பும்

கண்ணீரைத் துடைத்து

என்னைக் கழுவத் துவங்கியது

எழுத்து”

கவிதை மிக அற்புதமான செயலைச் செய்வதாகத் தன் துயரத்தை எல்லாம் நீக்குவதாகத் தனது படைப்பாற்றல் தனக்குள் விளங்குகிறது என்னும் கருத்தைக் கவிதையாக்கித் தந்திருக்கிறார்.

தற்கொலை, இறப்பு, முதுமை, இயலாமை எனக் கவிதைகள், இக்கவிதைத் தொகுப்பில் அதிகமாக எழுதப்பட்டிருக்கின்றன.

தனிமனித உணர்வுகள், வேதனை, பயம், எதிர்பார்ப்பு, பாசம், நேசம், உறவுகளின் தேவை போன்றவையும் இக்கவிதைத் தொகுப்பில் காணப்படுகின்றன. எனவே ஆழ்மனம் சார்ந்த கவிதைகளையும், இயல்பு நடத்தைகள் குறித்தும், சமூகம் குறித்தான பார்வையையும் முப்பரிமான தோற்றத்தில் இக்கவிதைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன .

இக்கவிதைத் தொகுப்பில் வெளிவந்திருக்கும் அனைத்துக் கவிதைகளும் முகநூல் கவிதைகள் ஆக வலம் வந்த கவிதைகள் ஆகும். அதிகமான, ஆழமான வாசகர்களைப் பெற்ற கவிதைகளாகவும் இக்கவிதைகள் விளங்குகின்றன. கால மாற்றத்திற்குத் தக முகநூலில் கவிதைகள் இன்று வலம் வருகின்றன. அதற்கான உடனடி விமர்சனமும் உடனே இங்கு கிடைத்து விடுவதால் படைப்பாளனும் மகிழ்கிறான்.

தன் கவிதையை நாடி பிடித்துப் பார்த்துத் திருத்தம் செய்து கொள்ளவும் முகநூல் கவிதைகள் அதிகமான அளவிற்கு உதவி வருகின்றன. காலத்துக்குத் தக கவிதைகள் பல வடிவங்களில் தன்னை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன என்பதற்கு இதுபோன்ற கவிதைத்தொகுப்புகள் சாட்சியாக இருக்கின்றன.

அவ்வகையில், கவிஞர் சித்தார்த்தனின் கவிதைகள், யாதோன்றின் மீவுருவாக்கச் சொற்களாக இந்தப் புழுதி படிந்த சொற்களில் காணப்படுகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக