நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

ஞாயிறு, 15 நவம்பர், 2020

சைவ சமயத்தின் முழுமுதல் தளம் – சைவம்.ஓஆர்ஜி

சைவ சமயத்தின் முழுமுதல் தளம் – சைவம்.ஓஆர்ஜி


இந்துமதம் என்பது, தொடக்கம் காண இயலாத பிரம்மாண்டத்தைத் தன்னகத்தே கொண்ட பெருமையுடையதாகும்.

கிளை விரித்தாளும் ஆலமரத்தைப் போன்று ஒன்றே பலவாக மாறும் தன்மையுடையதாகும்.

அறிவைக் கண்டு அடைவதற்கும், பிறப்பின் சூட்சுமத்தை விளங்கிக் கொள்வதற்கும், நிகழ்வுகளில் தெளிவு பெறுவதற்கும் துணையாய் இருப்பது இந்து மதமாகும்.

சிந்தனைகளும், வாழ்க்கை முறைகளும், உடலியல் அதிசயமும், அறிவியல் கூறுகளும் ஒருமித்து இறைக்கோட்பாடாக ஆக்கப் பெற்றிருக்கிற மதம் இந்து மதமாகும்.

இந்து மதத்தின் ஒரு பகுதியான ”சைவ சமயம்” தன் பரப்பில், மீண்டும் மீண்டும் உயர்ந்தும், ஆழமாகியும், நிறைந்தும், பெருகியும் காணப் பெற்று அனைவராலும் உணரத்தக்கதாக இருக்கிறது.

இவை அனைத்தையும் எழுத்தாலும், வாக்காலும், இசையாலும், நடிப்பாலும் அறிந்து கொள்ளும் பாக்கியம் நமக்கு இருக்கும் என்றால் ”சைவம்” எனும் இத்தளத்திற்குச் சென்றால் போதும்.

நமக்குத் தேவையான எல்லாம் அங்கு கிடைக்கும். இல்லை என்ற ஒன்று அங்கு இல்லை எனும் அளவு கடுமையான உழைப்பால் இத்தளம் உருவாக்கப் பட்டிருக்கிறது.

 

இணையதளத்தின் முகப்புப் பகுதியில் இந்துமதத்தின் வரலாறுகள், அவற்றின் தன்மை, சிறப்பு, விளக்கம் எனப் பல்வேறு விதமான தகவல்கள் விளக்கப்பட்டுள்ளன.

விளக்கங்கள் சைவ சமயம் குறித்தான அனைத்துச் சந்தேகங்களுக்கும் விடை அளிக்கும் விதமாக அமைந்திருக்கிறன.

பல்வேறு தலைப்புகளில் பல்வேறு ஆழமான கருத்துக்கள் இறைத் தன்மையின் வெளிப்பாடுகள், மகத்துவங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இவை சைவ சமயம் குறித்தான ஆழமான பார்வையை வெளிப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன.

அறிமுகம் எனும் பகுதியில், இந்து மதத்தின் அடிப்படைத் தன்மைகள் விளக்கப்பட்டுள்ளன. இத்தலங்கள் செய்துகொண்டிருக்கிற சமூகப்பணிகள் மற்றும் அதற்குத் தேவையானவைகள் போன்றவை இங்கு கூறப்பட்டிருக்கின்றன.

பொது எனும் தலைப்பில் உலக அளவில் நடைபெறும் சைவ சமயத் திருவிழாக்கள், முக்கியமான நாட்கள், விரதங்கள் போன்றவைகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.

நடந்து முடிந்த இந்து சமய நிகழ்வுகளையும் அறிமுகப்படுத்துவதாக இப்பகுதி காணப்படுகிறது.

பொதுஅறிவு எனும் துணைத் தலைப்பில், சைவம் குறித்தான பல்வேறு வினா விடைகள் இடம்பெற்றுள்ளன. இப்பகுதியில், இணையவழி சைவ சமய வினா விடைகளைத் தேர்வாக எழுதி, மதம் குறித்தான அறிவை பெருக்கிக் கொள்ள இப்பகுதி உதவுகிறது.

புத்தகம் மற்றும் இணையதளத் தொடர்பு முகவரி எனும் பக்கத்தில் சைவ சமயம் குறித்தானப் பல்லாயிரம் நூல்களின் பட்டியலும் கட்டுரைகளின் பட்டியலும், அறிஞர்களின் கோட்பாடுகள், சிந்தனைகள் போன்றவற்றை தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

சைவ சமய இதழ்கள் எனும் பகுதியில் சைவ சாஸ்திர பரிபாலனம் எனும் இதழும், அருள் ஒளி எனும் இதழும், அறுபத்துமூவர் சைவ சமய இலக்கிய மாத இதழும் பதிவிடப்பட்டுள்ளன.

மார்ச் 2020 வரை வந்துள்ள அறுபத்துமூவர் சைவ சமய இலக்கிய மாத இதழை இங்கு படிக்கலாம். மிகச் சிறப்பான ஆன்மீக இதழ் இதுவாகும்.

சைவநிறுவனங்கள் எனும் தலைப்பில், தமிழகம் மற்றும் பிற மாவட்டங்களில் மற்றும் உலக அளவில் காணப்படும் சைவசமய நிறுவனங்கள் எங்கெங்கு இருக்கின்றன, அவற்றின் செயல்பாடுகள் என்ன? என்பதை விளக்குவதாக இப்பகுதி அமைந்துள்ளது.

கோயில்கள் எனும் பகுதியில் உலக அளவில் காணலாகும் சிவ தலங்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளன. கோவில்களின் சிறப்புத் திருவிழாக்கள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. வரலாற்றுச் சிறப்புப் மிக்க கோவில்களின் பட்டியலும் இங்கு காணப்படுகிறது.

யாத்திரை எனும் தலைப்பிற்குள், இந்தியாவில் உள்ள யாத்திரை செல்ல வேண்டிய மிக முக்கியமான திருத்தலங்கள் குறித்தான முழுத் தகவல்களும் தரப்பட்டுள்ளன.

புனித இலக்கியம் எனும் மாபெரும் பகுதியில், திருமுறை எனும் துணைத் தலைப்பில் பன்னிருதிருமுறைகள், ஒவ்வொரு திருமுறைகளாகத் தனித்தனியாகத் தொகுக்கப்பட்டு விளக்கப்பட்டுள்ளன.

வரி வடிவமாகவும், இசை வடிவமாகவும் அந்தப் புனிதமான திருமுறைகள் காணப்படுகின்றன. வாழ்நாள் முழுவதும் படித்தாலும் படிக்க முடியாத, உணர்வதற்கு இயலாத மாபெரும் உன்னத உணர்வை இலக்கியமாக இங்கு நாம் காண்கின்றோம்.

இந்தப் பணியானது மிகச் சிறந்த மாபெரும் புனித பணியாகும். அதேபோல், தமிழ் எனும் துணைப் பகுதியில் திருமுறைகள், ஆகமங்கள், சைவ சித்தாந்தம், தல புராணங்கள், மொழிபெயர்ப்பு, வீர சைவம் ஆகியவை குறித்த பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சைவ சித்தாந்தம் பகுதியில் விளக்கங்கள், சொற்பொழிவுகள், பல்லாயிரம் பக்கங்கள் பேசப்பட்டுள்ளன. இது ஒரு ஆன்மீக களஞ்சியமாகக் காணப்படுகிறது.

தொகுப்பு எனும் பகுதியில், இசை ஒலித்தொகுப்பாகவும், படக்காட்சித் தொகுப்பாகவும், புகைப்படத் தொகுப்பாகும் காணப்படுகின்றன. இவை வரலாற்று ஆவணமாகச் சேகரிக்கப்பட்டுள்ளன.

புகைப்படக் கோப்புகள் சைவம் குறித்தான பல்வேறு ஆலயங்களை வரலாறாகப் பதிவு செய்துள்ளன. கோவில்கள், கோவில் கட்டுமானக் கலைகள், திருவிழாக்கள் இறைவனின் உற்சவப்படங்கள், அறிஞர் பெருமக்களின் இறை ஞான புகைப்படங்கள் எனப் பல்வேறு விதமான ஆவணங்கள் இங்குப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

சைவத் திருமுறைகள், வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள் போன்றவை அறிஞர் பெருமக்களால் விளக்கப்பட்டுள்ளன. இசை வடிவம் காணப்படுகின்றது.  அவற்றைத் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் இத்தளத்தில் காணலாம்.

24 மணி நேரமும் கேட்பதற்கு வசதியாக இசைச் சொற்பொழிவுகளும், இசைப் பாடல்களும் திருநெறிய தமிழோசை எனும் பகுதியிலும் சைவ லகரி என்னும் பகுதியிலும் ஒளிபரப்பப்படுகின்றன.

இவை நாள்தோறும் சைவ அன்பர்களுக்குச் சைவத்தின் சாராம்சங்களை எல்லாம் எடுத்தோதுகின்றன.

 

ஆன்மீகத்தைத் தேடுபவரின் கண்களுக்கும். காதுகளுக்கும், அறிவுக்கும், சிந்தனை மாற்றத்திற்கும் பெரும்வித்தாகவும் சொத்தாகவும் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மகான்களின் சிந்தனையில் உதித்த சைவ நூல்கள் பழங்காலம் தொட்டு இக்காலம் வரைச் சேகரிக்கப்பட்டு விளக்கத்துடன் பகிரப்பட்டுள்ளன.

இத்தளம் செல்பேசியில் பயன்படும் வகையிலும் தனிச் செயலியாக உருவாக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.

மொத்ததில் சைவம் தழைத்தோங்கச் செய்யும் இணையதளமாகவும், ஆன்மீக ஆவணமாகவும், அன்பர்களை வழி நடத்தும் வழிகாட்டி யாகவும் இத்தளம் விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.

”ஆதியாய் நடுவுமாகி அளவிலா அளவுமாகி…” என முழுமுதலைப் பாடும் சேக்கிழாரின் வரிகளுக்கிணங்க சைவத்தின் எல்லாவற்றையும் விளக்கி முழுமுதலாய்த் திகழ்கிறது இத்தளம்.

சைவம்.ஓஆர்ஜி பார்வையிட https://shaivam.org/ ஐ சொடுக்கவும்.

(இணையம் அறிவோமா?  தொடரும்)



பாரதிசந்திரன்

நன்றி இணைய இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக