நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

ஞாயிறு, 15 நவம்பர், 2020

கடவுளின் கண்ணில் ரத்தம் தெரிகிறது







”கண்ணில் தெரியும் கடவுள்” நூலைச் சமீபவத்தில் நண்பர் மு.தனஞ்செழியன் கொடுத்துப் படிக்கச் சொன்னார். ஹைக்கூக்களின் கவிதைத் தொகுப்பு அது. கொஞ்ச நேரத்தில் படித்து விடலாம் என்று படிக்க ஆரம்பித்தேன். நூலை வைக்க முடியவில்லை.ஆழமும், அகலமுமான பரப்பைத் தன்னகத்தே கொண்டிருந்தது நூல். சமகாலப் பிரச்சனைகள் மனதை வாட்டியது. மீள முடியாத வேதனையில் என் மனப் போராட்டங்கள் நீண்டு கொண்டிருந்தன. இது போதாதா, என் எழுது கோல்களுக்கு. கண்ணில் தெரிந்த கடவுளைத் தடவித் தடவி வார்த்தைகள் ஆக்கினேன்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க அறம் கிளையின் வெளியீடாக வந்திருக்கும் ஹைக்கூக் கவிதைகளின் தொகுப்பு இது.
கொரோனாக் கால நெருக்கடியில் பிறந்த கவிதைகள் இவை. மனதை நெருடுகிற காட்சிகளின் படிமங்கள் இவை. ரத்தம் உறைய வைக்கிற வார்த்தைகளின் வெளிப்பாடுகள் இவை.சீக்கு வந்த கோழிக் குஞ்சுகளின் கண்மூடிய தூக்கம் அல்ல இவை.

 தன் குஞ்சை தூக்க வருகிற கருடனை சிறகு விரித்து குரல் தெறிக்க கத்தி ஓட ஓட விரட்டுகிற தாய்க் கோழியின் பரவசம் இவை.இந்நூலிலுள்ள, கவிதையைப் படித்தால் சுளீர் என்று ஓரிடத்தில் சுடுகிறது.. எங்கிருந்தோ வந்து கண்ணில் விழுந்த தூசி போல் நெருடுகிறது..எவ்விதப் பாதிப்பையும் படிப்பவர் மனதில் ஒரு கவிதை ஏற்படுத்தவில்லை என்றால், அக்கவிதை தோற்றுப் போய் விடுகிறது. உள்ளே புகுந்து வெவ்வேறு தூண்டுதல்களை ஏற்படுத்தி அகலாது நிலைத்து நிற்குமானால் அக்கவிதை ஜெயித்து விடுகிறது. அதுவே உன்னதமான கவிதை ஆகிறது. காலம் கடந்தும் நிலைக்கிறது. அவ்வகையில், இந்நூல் கவிதைகளில் பல, பல்வேறு உரசல்களை மனதிற்குள் உண்டாக்கி உயர்ந்து நிற்கின்றன. ”உலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூ'விற்கு யாரையும் மயக்கக் கூடிய வசிய சக்தி இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அதன் சின்னஞ்சிறிய 3 அடி வடிவம், அழகான படிமங்களால், அழகான அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டு முறை பிரபஞ்சத்தின் அந்தரங்கங்களைத் திடீரெனத் திரை விலக்கிக் காட்டும்.அதன் தத்துவப் பார்வை, சுண்டக் காய்ச்சிய அதன் இறுகிய மொழி நடை எல்லாவற்றையும் விட அதன் எளிமை, இவையெல்லாம் ஹைக்கூவின் ஈர்ப்புக்குக் காரணம்” என்று ஜப்பானிய ஹைக்கூ, தமிழில் நிகழ்த்தும் தன்மையைத் திருமதி லீலாவதி அழகாகக் கூறுவார்.எழுபத்தைந்து (75) கவிஞர்களின் படைப்புகளைத் தாங்கி இந்நூல் இக்காலகட்டத்தின் காலக் கண்ணாடியாக விளங்குகிறது. நடப்பியலின் எதார்த்தத்தைக் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் காட்டாமல் அப்படியே வார்த்தைகளில் கொட்டித் தீர்த்து இருக்கிறார்கள்.சமுதாயத்தின் மேல் பயம் இல்லை. வீரமோடு தம்தம் கருத்தினை விளக்கி விளாசித் தள்ளி இருக்கிறார்கள். ஒவ்வொருவரின் கைகளிலும் ஒரு தீப்பந்தம் இருக்கிறது. உலகைக் கூட, அது சுட்டெரித்து விடும் தன்மையது. இன்று நடந்து கொண்டிருக்கும் அரசியலின் இழிநிலையைப் பா.செந்தில் தமது கவிதையில் கூறும்பொழுது,காசு வாங்காமல்வாக்களித்தேன்…விரலில் கறை.என்கிறார். காசு வாங்கிக் கொண்டு ஓட்டு அளிக்கும் முறை, அரசியல்வாதிகளின் நாடகங்கள், ஓட்டு வாங்கியமைக்குப் பிறகு மக்கள் ஏமாற்றப்படல் என இருக்கும் இந்நிலை உண்மையான ஜனநாயகவாதிக்கு ஏமாற்றமே அளிக்கிறது. எனவே, என் கைகளில் மை வைத்தது கறையாக இருக்கிறது என்று கவிஞர் வருத்தப்படுகிறார்.காவல்துறையில் நடக்கும் சில அக்கிரமங்கள், சாதாரண மனிதனை நிலைகுலைய வைக்கிறது. தூத்துக்குடியில் தற்போது நடந்த தந்தை, மகன் கொலை வழக்கு, காவல்துறை மீதான கேள்விக் கணைகளைத் தொடுக்கப் பலருக்குக் காரணமாய் அமைந்தது. அதைக் கவிதையாகத் தருவதற்கு முயற்சி செய்து கூறும்பொழுது,ஆணவ வெறியர்கள்.ரத்த லத்தியில் எழுதவில்லை…காவல்துறை உங்கள் நண்பன்.
எனக் கவிதா பிருந்தா கூறுகிறார்.
தமிழகத்தை உலுக்கிய மாபாதகச் செயல் அல்லவா அது? கவிஞர் எதற்கும் பயமில்லாது தமது கருத்தை தமது கவிதையில் பதிவு செய்துள்ளார். இது, தமிழக வரலாற்றில், கவிதை வரலாற்றில் அழிக்க முடியாத சுவடாகி இருக்கிறது. ஒரு நிகழ்வும், அது பார்வையாளன் உள்ளத்தில் ஏற்படுத்திய வடுவும், ஒரு சேர நிகழ்வையும் ஏற்படுத்திய சலனத்தையும் படமாக்கி தந்திருக்கிறது. இதேபோல் இன்னொரு கவிதையில், காவல்துறையின் மாண்பைக் கவிஞர் மு தனஞ்செழியன் கூறும்பொழுது,காவலரைக் கடித்தகொசுவும்...அடிபட்டே செத்ததுஎன்கின்றார் காவலரைக் கடித்த சிறு உயிரினம் கொசு. அதுகூட கடித்துவிட்டு சும்மா போய் விட முடியாது. கொசு தானே என்று கூட காவலர்கள் விட்டுவிட மாட்டார்கள் என்ற எண்ணத்தைக் கவிஞர் தம் கவிதையில் பதிவு செய்துள்ளார்.மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணம் ஒன்றையே கருதுகோளாகக் கொண்டிருக்கிறார்கள். நோயாளிகளிடம் பரிவோடு நடந்து கொள்வதில்லை. மருத்துவரும், மருத்துவ வசதிகளும், பணம் இருப்பவர்களுக்கே எனும் எண்ணம் பொதுவாக இன்று பொதுவெளியில் அனைவராலும் பேசப்படுகின்றன. அதனை, இனிப்பு மருந்து தான்.கசக்க வைக்கிறது…மருந்தின் விலை.      (ந ஜெகதீசன்)மருந்துக் கம்பெனிகளால்சாகா வரம் பெற்றன…நோய்கள்.                    (பூ முருகவேள்)
நடந்து சென்றவர்நடைப்பிணமாய் திரும்பினார்தீவிர சிகிச்சை.             ( பா கெஜலட்சுமி)இன்னும் இதுபோன்ற கவிதைகள் சமதளமற்ற நிலையைத் தோலுரித்துக் காட்டுகின்றன. உயிரை நேசிக்க வேண்டிய மருத்துவமனைகள் பணம் கொழிக்கும் கார்ப்பரேட் கம்பெனிகள் ஆக மாறிக் கொண்டிருக்கிறது என்ற வேதனை கவிஞர்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது. அதுவே படைப்பாகவும் வெளிவந்திருக்கிறது.சாதீயத் தீண்டாமை குறித்த ஹைக்கூக் கவிதைகள் அதிகம் காணப் படுகின்றன. அறிவியலில்..சமூகம் எவ்வளவு தான் முன்னேறி இருந்தாலும், ஜாதியின் கொடூர நாக்குகள் இன்னும் விஷத்தைக் கக்கிக் கொண்டு தானிருக்கின்றன.நவீன கவிதைப்புரட்சியில் புதுக்கவிதைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. அக்கவிதைப் புரட்சியில், அதன் பாடுபொருளான சமூகக் குறைகளும் ஒரு முக்கியக் கருதுகோளை அமைந்திருக்கின்றன என்பதை அறிகிறோம். கவிஞர் மு.தனஞ்செழியனின் ஒரு கவிதை சாதீயத்தீண்டாமையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறன அவ்வாறான ஒரு கவிதை,
 இறந்த சடலங்களிலும்ஜாதி பார்க்கின்றனமனித பிணங்கள்.என்பதாகும். மனிதன் பிணமாக அர்த்தமற்ற வெற்று வாழ்க்கை வாழ்கின்றான் என விரக்தியாய் சாடுகின்றார்.இத்தொகுப்பில், கொரோனாத் தொற்றுநோய் ஊரடங்கின் போது, பாதிக்கப் பட்ட வாழ்வாதாரங்கள் குறித்த அவலங்களை, பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்த சிறு, சிறு தொழில்கள் செய்தவர்களின் மன வேதனையை அதிகமாகக் கவிதையாக்கித் தந்துள்ளனர்.பசி, வறுமை, இயலாமை, இழப்பு, சமூக அவலங்கள், அரசியல் பித்தலாட்டம், மருத்துவமனை அநீதிகள், அழகியல் எனக் காட்சிகள் விரிய கருத்தாக்க வெளிப்பாடுகள் கவிஞர்களின் கைகளில் வெளிப்பட்டுள்ளன.கவிதைத் தொகுப்பில், மிகத் தரமான கவிதைகளை மட்டுமே தேர்வு செய்து வெளியிட்டு இருக்கின்றனர். மு.தனஞ்செழியன் எனும் கவிஞர் 15 கவிதைகளை எழுதியுள்ளார். சிறந்த பொருளாளுமை மிக்க கவிதைகளாக அவைகள் விளங்குகின்றன. குறிப்பாக,கட்டில் கால்கள்இழுத்துப் போயின வங்கிக்கு…முதியோர் உதவித் தொகைக்காக.
என்னும் கவிதையைக் கூறலாம்.இன்னும் வாகன வசதியும், மருத்துவ வசதியும், குடிநீர் வசதியும், கல்வி வசதியும் இல்லாத கிராமங்கள் இந்தியாவில் எத்தனை? எத்தனை?பசியால் உயிரிழந்த தாய், அதுகூடத் தெரியாமல் பிஞ்சுக் குழந்தை தாயிடம் விளையாடிக் கொண்டு இருந்த காட்சிகளைத் தினசரியில் பார்த்த பொழுது, இரத்தக்கண்ணீர் வடித்தார்கள் மக்கள். இந்தச் சோகமான காட்சியை, அசையாத அம்மாவின் இமைகளைவிளையாட்டாய் மூடின.பிஞ்சு விரல்கள்.என்கிறார் கவிஞர் மு தனஞ்செழியன். அரசியல் இன்று எவ்வளவு மலிந்து செய்யப்படுகிறது கட்சிகளால் என்பதைக் கண்டு வெறுக்கும் கவிதைகள் காணப்படுகின்றன. அதேபோல, கவிஞர் மு தனஞ்செழியன் கூறும் பொழுது,பொதுக்கூட்டம் முடிவதற்கு உள்ளேயேமுடிந்து போய்விட்டதுபிரியாணிஎன்கின்றார். பிரியாணியைக் காட்டிக் கூட்டம் கூட்டும் அரசியல்வாதிகளின் தன்மை, பிரியாணிக்காக அலையும் மக்கள். யாரைத் திருத்துவது? கவிஞரின் கோபம் கவிதையில் வெளிப்படுகிறது.போர்க்களக் காட்சியைப் பாடுவதைச் சங்க இலக்கியங்களில் பெரும்பான்மையாகப் ”புறத்திணைப் பாடல்கள்” எனும் வகையில் அதிகம் காண்கின்றோம். சிற்றிலக்கியங்களில் பரணி பாடுதல் எனும் வகையில் நிறைய இலக்கியங்கள் பாடியுள்ளமையை அறிகிறோம்தற்காலத்தில் வாழ்க்கை எனும் போர்க்களத்தில் நடக்கும் பல்வேறு விதமான சமூகப் போர்களைப் பதிவு செய்வது போல இந்நூல் காணப்படுகிறது.அழகியல் கவிதைகள் குறைவாகவும், சமூகப் பிரச்சனைகள் பெரும் பான்மையாகவும் கவிஞர்களின் படைப்பில் வெளிப்பட்டுள்ளன.குறிப்பாய், கவிதைகள் காலத்தின் தெறிப்புகள். கண்ணில் தெரியும் கடவுள் பசித்த பொழுது உணவு தந்தவன் என்றாலும், இங்கு சமூகத்தில் நடப்பவை கண்டு, கடவுள் நிசமாகவே இரத்தக் கண்ணீர் வடிப்பார்.- பாரதிசந்திரன்
நன்றி : கீற்று இணைய இதழ்

செல்ஃபிபுள்ள” கவிதைநூல் விமர்சனம்என்னுள்ளும் எப்போதாவது - மிருகங்கள்

என்னுள்ளும் எப்போதாவது - மிருகங்கள்  (செல்ஃபிபுள்ள” கவிதைநூல் விமர்சனம்)

              “மூளைக்குள் விஷம் வைத்து

              முகத்தில் அதை மறைத்து வைத்து

              எப்போதும் என்னைச் சுற்றி - மிருகங்கள்

              இனம் கண்டு எழுந்து கொள்ளும்

              என்னுள்ளும் எப்போதாவது - மிருகங்கள்

              நீதி வேண்டும் - என்னுள்

              நிரந்தரமாய் மிருகம் வேண்டும்”

ஒரு கவிஞனைச் சமூகம் சில நேரங்களில் மிருகமாக்குகிறது. மனிதனாக வாழவிடாது, ஆதிகால காட்டுமிராண்டித்தனத்தை உசிப்பேற்றி விடுகிறது. அந்த அவதாரம், பிறரைப் பயமுறுத்துகிறது. அவ்வாறு இருக்க, கவிஞனாகிய நான் விரும்பவில்லை. ஆனால் சமூகம் மாற வேண்டுமானால் கவிஞனாகிய நான் மிருகமாக ஆக வேண்டும்.

கவிஞர் க.வீரமணியின் “செல்ஃபிபுள்ள” கவிதைகள், படைப்பின் தன்மையில் அனுபவத்தை வெளிப்படுத்தும் பதிவுகளாகும். படைப்பு எவ்விதம் உருவாகிறது என்பதைக் கவிஞர்களின் வாழ்க்கை நிகழ்வுகளே தீர்மானிக்கின்றன.


 
படைப்பில் “முழுமை” இரு வகைகளில் சாத்தியமாகிறது. ஒன்று அனுபவத்தை கூறுகளாகக் கண்டு, அக்கூறுகளில் ஒன்றில் சாராம்சத்தை, முழுமையை, குறிப்பால் உணர்த்துவதாக மாற்றுவது. இதையே கவிதைகள். காவியங்கள் நக்கலாகச் செய்கின்றன.

சிறுகதைகளில் தளமும் இதுவே. இன்னொன்று, அனுபவங்கள் அனைத்தையும் தொகுத்து வகைப்படுத்தி முழுமையை உண்டு பண்ண முயல்வது. இரண்டாம் வகைச் செயல்பாடுகள் தான் நாவலுக்கு உரியது என்று ருஷ்ய பேரிலக்கியங்கள் நிறுவுகின்றன என்பார் எழுத்தாளர் ஜெயமோகன்.


 
அனுபவம் அதிகமாக அதிகமாக பக்குவமாகிப் படித்த வாழ்க்கைப் போக்கை ஏதோவொரு வகையில், பிறரிடம் பகிர்ந்துக் கொள்ள எத்தனிப்பது உலக இயல்பு. அதுவே, மாபெரும் இலக்கியப் பதிவுகளாக இதுகாறும் கண்டிருக்கின்றோம். ஆதிகால இலக்கியம் முதல் இன்று வரை இதுவே நிகழ்கின்றது. உலகின் அனைத்து நிகழ்வுகளும், ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடத்தைக் கற்றுத் தந்திருக்கின்றன.

இன்றைய சமூகம், கொஞ்சமும் எதிர்பார்க்காத, சகிக்க முடியாத அனுபவங்களைத் தருகின்றவைகளாகவே கூடுமானவரை மாறிப் போய் இருக்கிறன. லஞ்சம், வாவண்யம், குடி, பொய், பித்தலாட்டம், களவு, கற்பழிப்பு, சாதிய ஏற்றதாழ்வு, மதக்காழ்ப்பு இவற்றைக் கண்டு முகச் சுழிப்போடு இதோடு பயணம் செய்கிறவர்களாக அதிகப் பேர் இருக்கின்றனர்.


 
அவ்வகையில், தம் வாழ்வில் அடைந்த சமூகச் சிக்கல்களை மனக் குமுறலாக வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர். க.வீரமணி அவர்கள். அதற்கான வடிவமாக அவர் கவிதையை எடுத்துக் கொண்டுள்ளார். அதுவும் நக்கல் நிறைந்த கவிதைகளாக…

‘செல்ஃபிபுள்ள’ எனும் கவிதைத் தொகுப்பு தற்பொழுது அவரின் முதல் கவிதை நூலாக வெளி வந்திருக்கிறது. சமூகச் சாடல்கள் காரசாரமாகப் பரிமாறப் பெற்றுள்ளன. கொஞ்சம் கூடப் பாராபட்சம் இல்லாமல் தவறுகளை இனம் காட்டி, வெறுப்புக்களையும், கடும் கோபத்தினையும் பதிவு செய்துள்ளார்.

மிகக் குறைந்த அளவில், மனம் சார்ந்த உள்வெளி வெளிப்பாடுகளையும், காதல் உணர்வுகளையும் கூறும் ஆசிரியர், பெரும்பான்மையாக, மக்களின் இயலாமை, கொடுமைகள், மனச்சோர்வு, திண்டாட்டம், வயிற்றெரிச்சல், பிரச்சனைகள் இதனை அப்படியே அனல் தெறிக்கும் வார்த்தைகளால் வெளிப்படுத்தித் தன்னைத் தானே சாந்தப்படுத்திக் கொண்டுள்ளார்.

இராணுவ வீரர்கள் மனம் நேர்மைக்குப் பழக்கப்படடிருக்கும். அவர்களின் சிந்தனைகள் நாட்டின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும், சுயமரியாதையையும், நாட்டு நலனையும் காக்கக் கூடியதாகவே அமைந்திருக்கும். ஆனால், இன்றிருக்கும் நடைமுறைச் சீரழிவுகள் அவர்களின் மனதைப் பெரிதும் பாதிக்கின்றன.


 
நாம் சந்திக்கும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் மக்களோடு ஒத்துப் போவதில் சிரமப்படுகின்றனர் என்பதைக் கண்கூடாகக் காண்கின்றோம். இதற்கான காரணம் அவர்கள் எதிர்பாக்கும் உலகம் மிக நேர்மையானதும், உண்மையானதும் ஆகும். கவிஞர் க.வீரமணி அவர்களும் முன்னாள் இராணுவ வீரர் என்பதால், இச்சமூகச் சீர்கேடுகள் அவரது உள்ளத்தை எவ்வளவு பாதித்திருக்கின்றன என்பதை அவர்தம் கவிதைகள் மூலமாகவே அறிய முடிகின்றது. ‘தன்னிறைவு’ எனும் கவிதையில், தேசம் எவ்வாறு பிரித்து வைக்கப்பட்டுள்ளது என்பதை,

              “அரசியல் வாதிகளுக்கு - ஊழல்

              அரசு அதிகாரிகளுக்கு - லஞ்சம்

              ரவுடிகளுக்கு - கொலை

              ஆண்களுக்கு - கற்பழிப்பு

              பெண்களுக்கு-  பேதைமை

              பிரித்து வைத்திருக்கின்றோம் - இப்படி

              தவறுகளை - தனித்தனியே

              தவறுகளில் – தன்னிறைவு - என்தேசம்”

என்கின்றார். காவல் நிலையமும், சிறைச்சாலையும் எவ்வாறு இருக்கும் என்பதை நம் மனம் ஆண்டாண்டு காலமாய் கற்பனை செய்து வைத்திருக்கிறது. நீதியைக் காக்கும் தூய்மையான இடம் காவல் நிலையமாகவும், தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கும் இடம் சிறைச்சாலையாகவும் இருக்க வேண்டும். ஆனால் இன்றோ,

              “கைதிகளுக்கு

              நாள் தவறாமல்

              யோகா. மூச்சுப் பயிற்சி,

              எழுத்து, ஓவியம், கவினை, மேல்படிப்பு….

              காவலர் முகாமில் - எப்போதும்

              கோழிக்கறி - விஸ்கி

              நீலப்படம் - பீடி - சிகரெட்

              சீட்டுக்கட்டு - பெண்சிட்டு”

என இவ்வாறு இருக்கின்றன என்பதை மனம் நொந்துபோய் பதிவு செய்திருக்கின்றார்.

‘தமிழன் என்று சொல்லுவோம்’ எனும் தலைப்பிலான கவிதை நமது இருப்பை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. கேவலமான வாழ்க்கைச் சூழலில் நம் வாழ்ந்து கொண்டு, அதைப் பெருமையாகப் பிதற்றிக் கொண்டு வாழ்வதைச் சாடுகின்றார். இதுவல்ல வாழ்க்கை இது நரகவாழ்க்கை என விளக்குவதாக இக்கவிதை அமைந்துள்ளது.


 
தமிழினம் எத்தகைய மாட்சிமைகளைக் கொண்டது. ஆனால் இன்று கீழ்மையான வாழ்க்கை முறைகளால் பெருமைகள் இழந்து நிற்கின்றன என்பதாக அவரது குரல் இருக்கின்றது. இதே போல், விவசாயின் நிலை கண்டு இரத்தக் கண்ணீர் வடிக்கும் கவிதையாக ‘செல்ஃபிபுள்ள’ கவிதை இருக்கிறது.

‘அதிதி தேவோ பவ’ கவிதை, சுற்றுப்புறச் சூழலில். இந்தியா எவ்வளவு மோசமான நிலையை அமைந்துள்ளது என்பதை விளக்குகிறது. இதனால் அன்னியச் செலவாணி குறையும் என்பதோடு. எதிர்காலச் சமூகம். தம் வாழ்வாதாரத்தை இழந்து வாழ்க்கைச் சிக்கலில் கிடந்து சாகும் என்பதை நக்கலாகக் கூறுகிற பொழுது,

              “சுற்றுலா வாசிகளே

              இந்தியா உங்களை

              இனிதே வரவேற்கிறது

              ஆனால்.

              மூக்கைப் பிடித்துக் கொண்டு வரவும்”

என்கின்றார். நாட்டின் மேன்மை வளமாக வேண்டும் என்றால், சுற்றுப்புற சூழலில் மிகுந்த கவனத்தை மக்கள் காட்ட வேண்டும் என்பது இவரது அறிவுரையாக உள்ளது.

ஆண், பெண் இருவரும் இன்று வேலைக்குச் செல்வது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முக்கியமாகிறது. அவ்வாறு நகரில் வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலையை ‘மல்லிகைப் பூ’ கவிதை குறும் படமாக்கிக் காட்டுகிறது. அவளுக்கு சமூகம் தரும் இன்னல்களைப் பட்டியல் போடுகிறது.


 
ஓவ்வொரு நாளையும் கடத்துவதற்கு அவள் படும்பாடு, அவளுக்கு நேரும் இன்னல்கள் அதனால் அவள் அடையும் வேதனை இவை மாற வேண்டும் எனப் பதிவு செய்கின்றார். இக்கவிதையைப் போல் “ஆபிஸ் கோயிங்” கவிதையும் இத்தகையதே.

“சுபஸ்ரீ - பேனர் எனும் கவிதை அரசியல்வாதிகளினால் இறந்த சுபஸ்ரீயின் இறப்பைப் பற்றியது. சாலையில் பேனர் வைக்கும் கலாச்சாரம் தேவையற்றது. மக்களின் வரிப்பணத்தில். அரசுகள், அரசியல்வாதிகள் செய்யும் பல்வேறு ஊதாரித் தனமான செலவுகளும், அதனால் விளையும் பாதிப்புக்களையும் இனம் காட்டி, தம் நெருடல்களை மனக் குமுறலாக விளக்குகிறார்.

தமிழ் உணர்வும். தமிழின உணர்வும் அவரது பல கவிதைகளில் வெளிப்பட்டுள்ளன. தமிழன் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதைப் பதைபதைப்புடன் கவியாக்குவதைக் காண முடிகின்றது.

“கொள்ளி வாய்க்கால்” கவிதையில் இதனையுணரலாம். எவ்வளவு தான் தீமைகள் தமிழனுக்கு வந்தாலும், காக்க வேண்டிய கடவுள்கள் ஏன் வரவில்லை? எனப் படிப்பவரிடம் கேள்வி கேட்கின்றார். மொழியினால் கடவுளைப் பிரித்தலையும் சூழ்ச்சியையும் நக்கல் செய்கின்றார்.

தனிமனிதக் காதலுணர்வுக் கவிதைகளும் கவிஞரின் அற்புதமான காதல் மொழியை வெளிப்படுத்துகின்றன. பெண்களுக்கான கவிஞரின் இடம் அலாதியான இடத்தைப் பிடித்துள்ளது. பெண்களுக்கு மிகச் சரியான மரியாதையைத் தரும் மனதின் வெளிப்பாடுகள் காதல் கவிதைகளாக எழுதப் பெற்றுள்ளன.

எதார்த்த நடை, அழகியல் வெளிப்பாடு, கூட்டி குறைத்துக் கூறாத வார்த்தைகள் இவை இந்நூலின் தரமாகும். ‘எடை குறைப்பு’, ‘கமர்சியல் பிரேக்’ கவிதைகளில் கவிஞரின் சமூக விமர்சனம் மேலோங்கி நிற்கின்றது. நளினமாகப் பிறரின் போக்கைச் சாடும் தன்மையும் விளங்குகிறது.


 
பொதுவாக, கவிதைக்குள் கவிநயம் மிக்க வார்த்தைகள் குறைவு. உணர்வு மிக்க வார்த்தைகள் மிகமிக அதிகம். கவிதை வடிவத்தில், இன்னும் புனைவியலைத் தொட முயற்சிக்கலாமென்றாலும், வெளிப்பாட்டுத்திறன் கூற விழைந்த பொருளைச் சிறப்பாகவே கூறிச் செல்கின்றன. சமூகக் கவிதைகள் காலத்தின் பதிவுகளாக வரலாற்றில் பதிவாகியிருக்கின்றன என்பதே இந்நூலின் மிகப் பெரும் சாதனையாக அமைந்திருக்கிறது.

- பாரதிசந்திரன்

  நன்றி : கீற்று இணைய இதழ்

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

மனஸ்தாபம் – பாரதிசந்திரன் கவிதை

 

மனஸ்தாபம் – கவிதை

சதாகாலமும் நிந்திப்பதிலேயே உன் ஆட்டம்

எதிலிருந்தும் தொடங்குகிறன.

புள்ளப்பூச்சியின் புடுங்கலை ஒத்த

நச்சரிப்பில் அடி நாளங்கள் கூசுகின்றன.

எரிமலையின் வெடிப்பை

வார்த்தைகளாக்கி வதம் செய்கின்றாய் சுகமாய்.

 

சாகாவரம் பெற்ற மலைகளை மடுவாக்குகின்றாய்.

அற்பப் பதரென ஊற்றுப் பெருவெள்ளத்தை உதறித் தள்ளுகிறாய்.

 

அலமார்ந்து சுருங்கி விடுகின்றேன் ஆமையாய்.

நீ- என்னுடன் போராடாதே…

உழுவை மீனாய்

வழுவிச் செல்ல முடியா கழுதை நான்.

 

எனக்குள்ளேயே இருந்து எனையே அழிக்கும்

ஆட்டத்தை

எனக்குள்ளிருக்கும் என் மனமே

எப்போது விடுவதாக உத்தேசம்?

 நன்றி :  இனிது மின்னிதழ்

மூளைத் தொழில்- பாரதிசந்திரன் கவிதை

 

மூளைத் தொழில்


கூறெனப் பாய்ந்து

வானத்தில் ஏறும் வல்லூறுகளின் பார்வையில்

பூமி சிறிதானது.

 

பெய்த சிறுநீர்,  பகீரதன்

வரவழைத்த புனித நதியெனப்

பிரவாகமெடுக்கின்றது.

 

பிடரி சிலிர்த்த குதிரைகள்

கோவேறு கழுதையாய் மாறி

தொண்டை கணைத்துப் பேப்பர் தேடி ஓய்ந்தன‌.

கம்பெடுத்தவன் தண்டல்காரன்.

 

திசையெங்கும் அவள் அரிதாரம்.

கற்றவை மறந்து தேடி அலைகிறாள்

சிவப்புத் தாமரை சரஸ்வதி.

படிச்சிப் படிச்சி நீர்த்தாள்,

சிவப்புப்புழுக்கள் உண்டு நெளியும்

மூளைக்காரனிடம்.

 

கடலுக்குள் நிசப்தமென

அறிவுலகம் துகில் கொள்கிறது.


நன்றி : இனிது மின்னிதழ்

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும் - பாரதிசந்திரன்

ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்

கவிஞர் வீரமணி அவர்களின் ஓர் அருமையான கவிதையை முதலில் நம்மை படிக்கச் சொல்லுகிறார் இக்கட்டுரை ஆசிரியர். அதன்பின் ஒரு கவிதை படிக்கும் போது எத்தகைய தடுமாற்றம் நம்மை ஆட்கொள்கிறது என விளக்குகிறார். இதனை வாசித்தபின் நீங்கள் கவிதையை ரசிக்கும் முறையே மாறிவிடும்.

கண்ணற்றவன்

பார்த்துப் புளித்த பிரபஞ்சம்
யாராரோ மென்று துப்பிய – வார்த்தைகள்
எனதென்று புதிதாய் எழுத எதுவுமில்லை என்பதால்

நான்
வீடற்றவன் ஜன்னல் வழி
கண்ணற்றவன் – கவிதைகளைத் திருடி
முகமற்றவனிடம தந்தேன்…

அவன் வாசிக்காமலேயே
சிலாகிக்கிறான்…

பின் – பூவற்ற
மாலையில்
காற்றைக் கட்டி அணிவிக்கிறான்

சுமக்க முடியாமல் தள்ளாடுகையில்
கையற்றவன்
தாங்கிக் கொள்கிறான்

உடல் அற்ற ஒருவன்
திடீரென்று நெஞ்சைப் பிளந்து
வார்த்தைகளை
திணித்து
மூடுகிறான்

தொண்டைக்குழியில் வார்த்தைகள்
உயிரை அடைத்து நிற்கிறது…

யாரோ என் வீட்டு ஜன்னலை உடைத்து
கதவின் வழியே போயிருக்கிறார்கள்…

வீடு முழுதும் தேடியும்
மூக்குக் கண்ணாடி கிடைக்கவில்லை

பெரும் குடிகாரனின் அதிகாலை வியாதிபோல்
என் விரல்கள் நடுங்குகின்றன…

நான் எழுதத்
தொடங்குகிறேன்
என் கவிதையை
இதுவரை யாரும் கேட்காத வார்த்தைகளுடன்…

– கவிஞர் வீரமணி

 

கவிதையும் கவிஞரும் எப்பொழுதும் சும்மா இருப்பதில்லை….

வருவதை லபக்கென்று பிடித்தும் அதை லாபகமாய் கடை விரித்தும் விடுகின்றனர் அவர்கள்.

குழந்தை பிறந்தால் கண் காது மூக்கு நிறம் என ஒரு கூட்டம் விமர்சிக்க வரும் தானே?

கவிதை பிறந்தாயிற்று. பொத்தி வைக்க முடியுமா?

பூ மலர்ந்தால் தேனீக்களுக்குச் சொல்லி விடவா வேண்டும்?

ரசிப்போம்; ருசிப்போம்; கொண்டாட்டம்தான் தேனீக்களுக்கு.

கவிதை பிறப்பும் மலர்வும் தனக்கானதா? இல்லை பிறருக்கானதா? என்பதைப் போல் பெரிய தத்துவம் இது…..

 

தன் நேரங்களைப் பிய்த்துக் கொண்டு போகும் உயிரிகளிடம் இருந்து நேரத்தைக் காக்கப் போராட வேண்டியிருக்கிறது . கிடைத்த நேரங்களில் அந்தப் போராட்டத்தை நினைத்துப் பாதி நேரம் போய்விடுகிறது. அப்படி இப்படி நெளிந்து கவிதை குழிக்குள் தேடினால்…..

நெடுந்தொலைவு செல்ல வேண்டுமா? இல்லை கிளைகள் பிரிந்து பிரிந்து ஓரிடத்தில் நின்று விடுமா ? இல்லை பாறைகள் திடீரென்று விழுந்து வழி மறைக்குமா?

கவிதை படிக்கும் முன் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறதே!

அது சொல்ல முடியாத‌து.

கவிதை படிக்கும்போது, படிப்பவரை, தலைப்பு எங்கோ ஒரு பாதையை நோக்கி இழுத்துச் செல்லும்.

முதல்வரி, இரண்டாம் வரி, எனத் தொடர்கையில் உள்வெளி திறக்கிறது. வானம் வந்து கைகட்டிக் கிடக்கிறது. வார்த்தைகளும் வார்த்தைகளுக்கு இடையில் உள்ள சொல்லப்படாத பொருள்களும் முண்டியடித்துக் கொண்டு முன்னிற்கும்.

 

வார்த்தைகள் கவிஞரின் வார்த்தைகள் அல்ல. படிக்கும்பொழுது வார்த்தைகள் என் பொருள்களாலே நிறைந்து வழிகின்றன…. புரிதல் வார்த்தைகளைத் தன்வசம் இழுத்துச் செல்லுகிறது.

எனக்குள் சொல்லித் தரப்பட்ட வார்த்தைகள் அதன் நளினத்தை விட்டுக் கொடுக்காமலேயேதான், தன்னை அடையாளப்படுத்துகின்றன.

எங்கோ எதிலோ உணரப்பட்டவை என் உணர்தல்களோடே காட்சிப்படுகின்றன.

இப்பொழுது நான், கவிதைக்குள் என் வார்த்தைகள் சொல்லித் தருவதை உணர்வதா? வார்த்தைகளின் கைகோர்ப்பைக் கொண்டு கவிஞன் என்ன கூற நினைத்தான் எனக் கொள்வதா? தடுமாற்றம் தான்.

ஒவ்வொரு கவிதை படிக்கும் பொழுதும், இந்தத் தடுமாற்றம் இயல்பாய் ஏற்பட்டு விடுகிறது. என்னை அறவே தூக்கி எறிந்துவிட்டு எனக்குப் பதில் கவிஞரை உட்காரவைத்து அவர் வாயினால் அவ்வார்த்தைகளின் பொருளைக் கேட்பதானால் ரொம்ப கஷ்டம் தான்.

கவிதையைப் படிப்பதற்கு ஏன் ஒவ்வொரு முறையும் கஷ்டப்பட வேண்டும்? நானா? நீயா? எனக் கவிஞனிடம் ஏன் மல்லுக்கு நிற்க வேண்டும்?

அவன் ஏன் நாம் படிக்கும்பொழுது மூக்கை நுழைக்க வேண்டும்? எழுதியவனுக்கு எழுதியதோடு வேலை முடிந்துவிட்டது. பிறகு ஏன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவருக்கு முன்பும் தலை வணங்கி மீண்டும் பொருள் சொல்லத் தொடங்குகிறான்?… கவிஞன் தவிர்த்த வார்த்தைகளோடு பயணம் தொடர்ந்தது; தொடர்கிறது…

 

கவிதைக்குள் உள்ள வார்த்தைகள் பிரபஞ்சத்தில் சிலருக்குச் சொந்தமானதாகவும் இருக்கின்றன. அவர்கள் அந்த வார்த்தைகளுக்கு உரியவர்கள் தான் என உலகம் இலகுவாய் சொல்லி விடுகிறது. அம்மாதிரி வார்த்தைகள் வந்தால் நெருடுகிறது . ஒன்று, இதில் எதைப் போய்ப் பார்ப்பது….

சொல்லாமல் போன வார்த்தைகள் பெரும் அலங்காரங்களுடன் வரவில்லை என்றாலும் நெளிந்து நின்றன‌ கொஞ்சம் பிசுபிசுப்புடன்,…

அப்படியும் புரிந்து நகர்ந்தால்….

உலக மொழிகளுக்குத் தக வார்த்தைகள் சில இடங்களில் வளர்ந்து நிற்கின்றன. அந்த வார்த்தைகளின் மூலக்கூறுகள் எவை என்றே தெரியாமல் அதனை உணர்தல் முடியாது.

எப்பப் போறது அந்த இடத்துக்கு? புரியத் தாமதமாகும் வார்த்தைகளோடு வளரக் கற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

கவிதையைப் படித்து முடிப்பதற்குள் எத்தனை முறை சலிப்பு வீட்டிற்குள் தான்… சுயம் இருக்கிறதே…. அப்பப்பா…
கவிதையின் முடிப்பு எப்பொழுதும் இப்படியே தான் முடிய வேண்டுமா எனில், சில பொழுதுகளில் மாறும். அப்பொழுது மட்டுமல்ல; கவிதை எப்பொழுதும் இனிது…

பாரதிசந்திரன்

நன்றி:https://www.inidhu.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%b0/#more-20723

புதன், 12 ஆகஸ்ட், 2020

சோலா மலையாளத் திரைப்படம் – நவீனத்துவப் பார்வை

 

சோலா மலையாளத் திரைப்படம் – நவீனத்துவப் பார்வை

சோலா மலையாளத் திரைப்படம்

சோலா மலையாளத் திரைப்படம்பற்றிய நவீனத்துவப் பார்வையை உணருங்கள்.

 

நீங்கள் ஒரு இடத்தில் ஒன்றைக் காண்கிறீர்கள்!

அதை ஒன்றாகக் காண்பீர்களா?

பலவாகக் காண்பீர்களா?

நல்ல இலக்கியம் எது? எனக் கேட்டீர்கள்.

நான் ஒன்றைக் காட்டுகின்றேன்.

எதற்காக அதை இலக்கியம் என்று நான் கருதினேனோ, அதையே நீங்கள் கருதுதுவீர்களா?

நீர்தானே அது? வெவ்வேறு வடிவமும் நிறமும் பெயரும் ஏன் அதற்காகக் கொடுத்தீர்கள்?

இதுபோலக் கேள்விகள் நீண்டு கொண்டே போகலாம் ”சோலா” போன்ற அதீதத் தரமான படங்களைப் பார்த்தால்.

பார்க்கும்போது….

ரொம்பக் கால தாமதமாகவே இப்படத்தை நான் காண நேர்ந்தது. பார்த்த நாள் முதல் உருட்டி எடுக்கிறது மனது.

பெரிதாகச் சொல்லிவிட வேண்டும் என்ற கனத்த யோசனைகளுக்கு மத்தியில், பெரிதாய் எதுவும் சொல்லிவிட இயலாது என்றே தோன்றுகிறது.

காற்றின் ஸ்பரிசம் உணர முடியுமே தவிர அதை மிகுதியாகப் பெரிதாக விளக்கிட முடியாது.

சோலா மலையாளத் திரைப்படம் தரும் உணர்வு

அனாந்திரமான பெருங்காடு அது. பலவற்றை உண்டு கொள்கிறது. அது பெற்று போடும் பலவும் பல்கி, ஒன்றுக்கொன்று பிணைந்து இரையாகி, அது வேறுக்கு உணவாகி, எல்லாம் நடக்கும்.

யாரும் அறிந்திராத அந்த அருவி காட்டில், காட்டின் அத்தனை மூர்க்கங்களையும் ஆதி குணத்தையும் ஒரு கேமராவுக்குள் பொதித்து விடமுடியும் என்றால் ”சோலா” எனும் மலையாளப் படம் பாருங்கள்.

(சோலா என்றால் சோலை அல்லது காடு என்று பொருள்.)

உலகத்தைத் தொட்டுவிடத் துடிக்கும் கண்களால் செதுக்கப்பட்டது. ரசிகர்கள் நாலாந்தரமானவர்கள் அல்ல; முதல் தரமான ஜீரணிப்பாளர்களே எனும் பாதையில் சமைக்கப்பட்டது தான் இந்தப் படம்.

இசையை யாரும் இசைக்க வேண்டியதில்லை. இசையை இசையே இசைக்கும். காற்று, மரத்தை ஆட்டுகிறது. மரம் ஆடுகின்றது. நீர், அருவியில் ப்ரவாகம் எடுக்கிறது; எடுத்து மண் தொட்டு ஓடுகிறது. உள்ளாக ஒவ்வொன்றும் தனக்குள் இசைத்தபடி.

அதை அதன் போக்கிலேயே அதாகவே உலவ விட்டால்? இசையை யார் தான் இசைக்க முடியும்? காடு, அருவி, பறவை, இரவு மழை எல்லாம் என்ன விரும்புமோ, எதைக் கூறுமோ, அதுவே இப்படத்தின் இசை.

வார்த்தைகள் எல்லா இடங்களிலும் உண்மையன்று. சொல்ல நினைத்தவை அப்படியே வார்த்தைகளில் பயணம் ஆவதில்லை. கூற விழைந்தவையும் புரிதலில் மாறிவிடும். இடத்திற்கு இடம், வார்த்தைகள் வேறு வர்ணங்களைத் தாங்கி நிற்கின்றன. உணர்ச்சிகள் வாழ்தலாகும்.

வெளிப்படுத்த இயலாத உணர்ச்சிகள் கோடியுண்டு இப்புவியில். உன்னப் புரிஞ்சுக்காம விட்டுட்டண்டா! என்பது போல, பேசாமலே பேசும் மொழி, எல்லா ஜீவராசிகளிலும் தலைமை தாங்குகிறது. அது கூறும் விளக்கம் வார்த்தைகளைத் தாண்டிய பெருக்கத்தைக் கொண்டது. அவையே இப்படத்தின் வசனம்.

முழுப்படத்திலும், செங்கல்லை வரிசையில் நிரவி, இடுக்கில் சாந்து திணிப்பது போல, அங்கொன்றும் இங்கொன்றுமாய் அலைகிறது வசனம். கதையை வசனம் நடத்திச் செல்லவில்லை. காட்சியும், அதன் அனுமானமும் தான் கதையை நடத்துகின்றன.

இயற்கை அதன் பிரம்மாண்டத்தைக் காட்டிவிட்டால் ஏற்றுக் கொள்ளவோ தள்ளிவிடவோ முடியாது. அது, அனுபவத்திற்கு அப்பாற்பட்டது; இதுவரை காணாதது; அதற்கு உள்ளே நுழைய ஆசைப்படுவது.

கடல், மலையருவி, மேகம் இவை எப்பொழுதும் விசுவரூப தரிசனத்தையே தன் பார்வையாளர்களுக்குத் தருவன‌. அவைதான் இந்தப் படத்தில் முழு காட்சிகளிலும் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பிரேமிலும் ஓராயிரம் அர்த்தம் பொதிந்த பதிவுகள்.

எதார்த்தத்தைப் பெரிதும் தாங்கி, உள்வெளிப் பெரும் தீயைச் சுவாலையாகப் பறக்க விட்டு, பின் நவீனத்துவ சாயம் பூசி, வெளித்தள்ளிய யதார்த்தம் அல்லது பதார்த்தம் இது.

ஆனந்தக் கூத்தும் அடாவடியும் ஆற்ற முடியாத பெரும் துயரமும் தொண்டையைக் கிழிக்கும் கதறலும் பீறிட, தொட்டு அணைத்து ஆறுதல் கூறக் கைகளை நீட்ட வேண்டியுள்ளது.

தோளில் தட்டிக்கொடுத்து ஆசுவாசப்படுத்த, மிகத்தீவிரமாய் பக்கத்தில் உட்கார இடம் தேட வேண்டியுள்ளது. படத்தின் பின் நவீனத்துவமான புறச்செய்திகள் கூறக் கூறச் சொல்லி மாளாது. அகத்தின் சாயலைக் குறித்து இனிக் காண்போம்.

சோலா மலையாளத் திரைப்படம் (chola) கதை

மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மலைவாழ் பெண்ணொருத்தி, தன் காதலனுடன் கொச்சி நகரத்தை ஒருநாள் சுற்றிப் பார்க்க விரும்புகிறாள்.

காதலன், தன் எஜமானனான ஆசானின் ஜீப்பிலேயே நகரத்தைச் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்து வருகிறான். இது, கதாநாயகிக்குப் பிடிக்கவில்லை.

தனிமையில் சுற்றிப் பார்க்க நினைத்தவள், இன்னொரு பற்றாளன் உடன் சுற்றுவதை வெறுத்தாள். காதலன் வேண்டச் சுற்றுலாவிற்கு மனம் இல்லாமல் கிளம்புகிறாள்.

சூப்பர் மால், நகர வீதி, கடை உணவு, படகுச்சவாரி, கடற்கரையெனச் சந்தோசமாகவே செல்கிறது பயணம்.

வீடு திரும்ப நினைக்கையில், மலையிலிருந்து நண்பனின் தொலைபேசி அனைவரையும் திடுக்கிட வைக்கிறது.

கதாநாயகியின் தாய்க்கு இவ்விசயம் தெரிந்து விட்டது எனவும், ”காலம் தாழ்த்தி வா” எனவும் கூற, ஆசான், “இன்று இங்கேயே தங்கி காலை மலைக்குத் திரும்பலாம்” எனக் கூறி ஒரு லாட்ஜில் தங்க அழைத்துச் செல்கிறான்.

 

அது மோசமான லாட்ஜ் என்பதை நேரில் பார்த்த கதாநாயகி வர மறுக்கிறாள். இரவு பஸ் பிடித்து ஊர் சென்று விடலாமெனக் கதறுகிறாள். ஆசானிடம் அதட்டலுக்குப் பயந்து கட்டாயப்படுத்தி அவளை அறைக்குள் அழைத்துச் செல்கிறான் கதாநாயகன்.

அங்கு, ஆசான் ”உணவும் சாராயமும் வாங்கி வா” எனக் கூறிக் கதாநாயகனை அனுப்புகிறான். தயங்கி தயங்கி மனம் இல்லாமல் செல்கிறான். ஆனால், கதாநாயகி செல்ல வேண்டாமென அவனிடம் கெஞ்சிக் கேட்கிறார்.

உணவும் சாராயமும் வாங்கிவர காலதாமதமாகிறது. இரைக்க இரைக்க வந்து கதவைத் தட்ட, ஆசான் மேலாடையைத் தோளில் போட்டுக் கொண்டு கீழே இறங்கிச் செல்லுகிறான்.

அறையினுள்ளே கதாநாயகன் சென்று பார்க்க, அலறுகிறான்; துடிக்கின்றான்; கதறுகிறான். காரணம், படுக்கையில் ரத்தக்கரை, குளியலறையில் மேலாடையின்றி அவள் அமர்ந்திருந்தாள்.

உலகம் வெகுவேகமாய் மண்டைக்குள் சுழல்கிறது. அதைத் தட்டி கேட்க முடியாமல் ஆசானிடம் கெஞ்சுகிறான். இரவு செல்கிறது மூன்று தனித்த உலகமாய்.

 

மறுநாள், எதார்த்தங்கள் சுக்கு நூறாகிக் காட்டுத்தனமான எண்ண ஓட்டங்களின் நடத்தை வெளிப்பாடுகள் ஓட்டம் எடுக்கின்றன.

காட்டருவிப் பாதையை யாரும் தீர்மானித்து விடமுடியாது. அது சக்திகளின் முழு வீரியம் கொண்டது. தானே தன்னைச் அமைத்துக்கொள்வது. எதையும் உள்வாங்கி ஜீரணிப்பது.

ஆசானின் முரட்டு தனத்தில், பெண்மை தன் இளமையைச் சுவீகாரம் கொடுக்கிறது. அருவி நீரின் போதையில் மிதந்து மூழ்கிக் காமக்களியாட்டம் போடுகிறான்.

நீர் வேள்வி, எதிர்ப்பாற்றல் குரல்வளையை நெரித்துக் குரல்வளையை நெரித்துச் சுழன்று, அடித்து வானம் மேலே ஏறிக் குதித்துத் தவம் செய்கிறது.

முதல் இணைதல், லாட்ஜ் அறையில் நடந்த பின்னிலிருந்து காதலன் வில்லனாகிறார். வில்லன் காதலன் ஆகின்றார். கதாநாயகி மனதில்.

புள்ளிக் கோலங்கள் முதலில் ஒன்றுதான். பின் தான் வேறு வேறு. வடிவம், நிறம் மாறுகின்றன. மகுடம் ஊதாமல் பாம்பாட்டியின் கண்ணசைவில் எல்லாம், பாம்பு தன்னை ஆட்டுவித்துக் கொள்கின்றது.

பாம்பாட்டி உலகை வென்ற எகத்தாளத்தில் பெருமித ஆனந்தமடைந்து சிலிர்கின்றான். அந்தப் போதைகளில், போதையை விட இப்போது தலையாய ஏதும், எதுவும் தர முடியாததை, இக்காமம் தரவல்லதுமாகும்.

ஒரு நெருக்கடியில், ஆசானைக் கொன்று விடுவது எனக் கத்தியுடன் வந்து நீருக்குள் போராடி, குத்தியும் கட்டியும் சாய்த்து விடுகிறான் கதாநாயகனாக உள்ள வில்லன்.

இரவுக்குள் சலனமில்லாத மழைநீரின் தொடுதல், இரவு மிருகங்களின் உருவமற்ற ஓசைகளின் ஊடுருவல், படத்தின் காட்சிகள், ஆழ்மனதில் அழுகையைப் பிறப்பெடுக்க செய்கின்றன.

 

மறு விடியல்… ஆசான் ஆற்றோரத்தில் கொடிகள் கட்டப்பட்டுக் கொல்லப்பட்டு கிடக்கிறான். கரையில் முகம் வீங்கிய காயங்களுடன்.

கதாநாயகிக்குத் தாங்கொணா துயரம். இறந்த ஆசானின் தலையைத் தூக்கி வைத்துக் கொண்டு அழுகிறாள். புலம்புகிறாள். பின் மயான அமைதியுடன் தரையில் அமர்ந்து அழுகிறாள்.

நிலைகுலைந்த மனது, தறிகெட்டு சில நேரம் அலைபாயும். மழையும் சில நேரம் அமைதியாகிவிடும். சில நேரம்  பைத்தியக்காரத் தனமான செயலைச் செய்யும்.

அதே மனநிலையில் காதலன் அருவியின் ஓரத்தில் பித்துப் பிடித்தவன் போல் கையூன்றி இருக்கும்பொழுது, பாராங்கல் கொண்டு அடித்துச் சாகடிக்கிறாள் கதாநாயகி.

அருவியைப் பார்த்து அமர்ந்து இருக்கிற காட்சியைக் காட்டிக் கடைசியாய் படம் இவ்வாறு முடிகின்றது.

என்னதான் சொல்ல வருகிறது இந்தப் படம்?

படம் பார்த்தவர்கள் இந்தக் கேள்வியை, உள்ளுக்குள் பலமுறை கேட்காமல் இருந்திருக்க முடியாது. சரியான பார்வையாளர் ஒருவர், படம் பார்க்காத ஒருவரை அழைத்து இக்கதையைக் கூறி விமர்சனம் கூறுங்கள் எனக் கேட்காமல் இருந்திருக்க முடியாது.

எத்தனை கோணங்களில் அணுக முடியுமோ, அத்தனைக்கும் இடமளிக்கும் கோட்பாடுகளின் மறை அங்கமாக உலா வந்து இருக்கிறது இந்தத் தேர்.

 

ஆசான் அவளைக் கெடுத்து விடுவானோ என்ற தவறான எண்ணத்துடன் காதலன் வேகமாக உணவு வாங்கி வருகிறான். அதுவே காட்சிகளை அடுக்கி வைக்கிறது.

நான் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறேன் என்ற அவனின் எண்ணமே அவனைக் கொலை செய்யச் சொல்லுகிறது. அவர்கள் இருவரும் பாவம், அப்பாவிகள். தவறு ஏதும் செய்யவில்லை என்பது ஒருசாரார் பார்வை.

 

காதலனை தவிரப் பிற ஆடவருடன் சுற்றுலாச் செல்ல விரும்பாத அவள், அந்த முரடனின் கண் அசைவிற்குத் தொடர்ந்து போய்க் காமத்தை அனுபவித்து ஏற்றுக்கொள்வது, மறுப்பேதும் கூறாமல் உடன் சென்று, காதலனை வெறுப்பது என்பதெல்லாம் அவளின் மனப்பிறழ்வு.

சாதகமான ஒன்றைத் தனதாக்கிக் கொள்ளத் தன்னை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்வது என்ற பசப்பு தன்மையுடையது என்பது மற்றொரு சாரார் கருத்து.

அதனால்தான் அருவியைப் படமாக்கிக் காட்டியுள்ளார் இயக்குனர் என்று அவரையும் சாட்சிக்கு அழைத்துக் கூறுகின்றனர்.

 

அவள் தன் காதலனை மலைபோல் எண்ணினாள். தன்னைக் காப்பானெனத் துணிந்து வந்தாள். ஆனால், அவனோ ஆசான் என்பவனின் அடிவருடியாக இருந்து தன்னைச் சிறிதும் நினைத்துப் பார்க்காமல், தன்னைச் சிக்கலில் மாட்டிக் கொள்ளவும் அனுமதித்தான்.

இவனோடு எப்படி வாழ்வது? சரியான தேர்வு அல்ல இது என வருந்தித் தன் வேதனையால் அவனுக்குத் தண்டனை கொடுக்கிறாள் என்பது இன்னொரு கருத்து.

 

மாதவிடாய் ஆனவளைக் குளிக்கச் செய்து, மேலும் மகிழ்ச்சிப்படுத்தி உலகைக் காட்டவும், தகப்பன் இடத்திலிருந்து அவளை நடத்தினான் ஆசான்.

அங்கு எவ்வித துன்பமும் வல்லுறவும் நடைபெறவே இல்லை. வல்லுறவு நடைபெறுவதாக நினைப்பதையே ரசிகர்களைக் குழப்ப நிலையில் உணர்வதற்கான உத்தி என்று ஆழமாக ஒன்றை கூறுவது மற்றொரு சாரார் கருத்தாகும்.

 

ஒரு பெண்ணை எந்த ஆடவன் முதன்முதலில் தொட்டுப் புணர்கிறானோ, அவனே கணவன். அந்தக் கணவனைத் தவிர வேறு ஆடவனை நினைப்பது பெண்ணுக்கு அழகல்ல என்பது பழைய கால வழக்கம்.

தூங்கும்பொழுது குங்குமத்தை நெற்றியில் வைத்து விட்டால் அவனே கணவன் என்ற பத்தாம்பசலித் தனத்தை மீண்டும் வேறொரு கோணத்தில் கூறிய கதை என்பது இன்னொரு சாரார் கருத்து.

இப்படி இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விசய‌த்தைப் படத்திற்கு நிரப்பிப் பொருள் தந்து தன்னையும் தன் ரசனையையும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.

 

மொத்தத்தில் சோலா மலையாளத் திரைப்படம் ஒரு சிறந்த படம்.

படம், படம் ஆயிற்று…

கதை, கதை ஆயிற்று…

ரசனை ரசனையாயிற்று…

புரிந்தவர் இந்த வகையிலேயே புரிந்து கொண்டனர். அது தவறுமன்று.

புரியாததும் தவறுமல்ல…

ஏனென்றால் அதுதான் இலக்கியம்…

பார்ப்பவர், படிப்பவர் அவரவருள்ள அனுபவத்தோடு இலக்கியம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று தருகின்றது…

இலக்கியம் ஒன்றல்ல….

அது ஒவ்வொன்று…


நன்றி : இனிது மின்னிதழ்(ஆகஸ்டு- 9,2020)

செவ்வாய், 21 ஜூலை, 2020

தூக்கம்



எனக்குள் எதுவாகவோ மறைந்து கொண்ட தூக்கம்


உண்ண ஆகாரம் தேடி 
அலையும் தேனீயைப் போல் 
மலர்ந்த கண்களில் 
உலர்ந்தது தூக்கம்

உள்ளிருந்த காலம் 
சுயம் மறந்த உள்ளார்ந்த லார்வா

வெளிப்படும் சதுக்கப்பூதம்
 உடல் காட்டி உடல் எடுத்த சுவிகாரம்

மறைப்பின் சிம்மாசனம் 
அது முதலாளித்துவம் அதனால் மறப்பீர்.

கோசங்கள் வான் தொட்டது.

முடிவு திறப்பின் பாதாளம்

புல்தரை மணம் மேடோ புகுத்திப்பார்க்கும் 
மூளை மழுக்கியின் நர்த்தனங்கள்

ஆவலோடு அமிழ்த்தி ஆழ்ந்து
 உள்குளிர வந்து வாய்க்கிறது

நிகழ்ச்சிக் காலசர்ப்பம் தீண்ட 
உமிழும் விஷத்தைவிடப் 
பிடிப்புத் தளர்வாகி 
மாறி மாறி மொய்த்துத் தின்கிறது
எனக்குள் அதுவாகவே மறைத்துக் கொண்ட தூக்கம்.

நன்றி   தமிழ் ஆதர்ஸ்



திங்கள், 20 ஜூலை, 2020

கவிதையும் ரோட்டுக்கடை காளான் ஃப்ரையும்

கவிதையும் ரோட்டுக்கடை காளான் ஃப்ரையும்

கவிதையும்

ரோட்டுக்கடை காளான் ஃப்ரையும்

ஒன்றல்ல. இங்கொன்றும் அங்கொன்றும்

பொறக்கிக் கலக்க.

 

நுரைத்த கடல்

கக்கித் துப்பிய வார்த்தை.

கூழாங்கற்களாக்கி

மறை(பார்)க்கின்ற எழுத்தாக்கிகள்.

 

சன்னலோரக் கண்,

புவி ஆடிய ஆட்டம்.

மனம் பிறாண்டும் நனவோடை நிகழ்வு.

தராசுத் தட்டு இறங்கி ஏறி இறங்கி.

கவிதைத் தூம்பு பீறிட

அடைத்த அடைப்பு எடுப்பார் எவரோ?

 

முப்பாட்டன் சொத்து.

நான் கட்டிய வீடாகிறபொழுது,

ஆதிமூலமே கா

விதை மரமாகும்

மரமெல்லாம் விதையாகும்.

 

வெப்பப் பிரளயமோ?, தண்ணீர் ஊற்றோ?

அது – கலவையின் விஸ்வரூபம்.

எனவே, கவிதையும்

ரோட்டுக்கடை காளான் ஃப்ரையும்

ஒன்றல்ல இங்கொன்றும் அங்கொன்றும்

பொறக்கிக் கலக்க.


 நன்றி : www.inithu.com

https://www.inidhu.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%88-%e0%ae%95%e0%ae%be/

மூன்றாமிடத்தில் குரு

மூன்றாமிடத்தில் குரு

மனிதவாடை அற்ற சிலமாதப் பொழுதுகளில்,

பொரிக்காக வாய் பிளந்து அலைந்தன

கோயில் குளங்களிலெல்லாம் மீன்கள்.

 

கால்நடையோ, பறவையோ நீரருந்த வரும் போது,

மொசுமொசுத்த அகோரப் பசியுடைய

அந்த மீன்கள்,

முதலையாய் உருவெடுத்து

அதைக் குதறித் தின்றுவிடக் கூடாதென

கடவுளிடம் மண்டியிட்டு மன்றாடின.

 

கடவுளும் இவ்வாறே ஆசியளித்தார்…

“உங்கள் குத்தகைக்காரன் நூறாண்டு வாழட்டும்”

 

குத்தகைக்காரனுக்கு எங்கே தெரியும்?

மாதா – பிதா – குரு என்னவென்று.

 

மலை முகடுகளிலிருந்து உருண்டு வரும் பாறைகள் சிதற,

மேகத்திற்கும் குளத்திற்கும் நடுவே சூறாவளியொன்று

குளத்திலுள்ள மீன்களை அள்ளிச் சென்று,

பனிக்கட்டிகளுக்கு இடையே தூங்க வைக்கும்

கனவொன்றைக் கண்டன,

பசியாறத் துடித்த

மீன்கொத்திப் பறவைகள்.


 நன்றி  : www.inithu.com, (https://www.inidhu.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81/)

வெள்ளி, 10 ஜூலை, 2020

”சுனை சாமியார்” சிறுகதை


”சுனை சாமியார்”


”தாடி, மீசை, காவி உடையோடு இருந்தாதான் சாமியாரா? அப்படியெல்லாம் இல்லை. இவன் பேண்ட் டீ-ஷர்ட் போட்டுக்கிட்டு  தான் எப்பொழுதும் இருக்கான். என்ன பேச்சு கம்மியா இருக்கு. சாப்பாடு வேற மாதிரி அவ்வளவு தான். மற்றபடி நம்மள மாதிரி தான் பார்க்கிறதுக்குத் தெரியும்”. என்ற மதினியின் வாயைப் பார்த்தபடியே கேட்டுக் கொண்டிருந்தான் சரவணன். மதினியின் வலப்புறத்தில் மதியச் சாப்பாட்டிற்குக் காய் நறுக்கிக் கொண்டே ஏதோ உலகத்தில் நடக்காத புதுக் கதையைக் குழந்தை வாய் திறந்து கேட்பது போல் அக்காவின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தாள் சரவணன் மனைவி சரசு.
தன் அக்காவின் வீட்டிற்குச் சென்றால், புது உலகம் சென்ற சந்தோசம் தான் அவளுக்கு. தாங்க முடியாது. தண்ணீர் கூட, இவ்வூர் மாதிரி வராதுன்னு ஓராயிரம் முறை கூறியிருப்பாள். இருந்தாலும் அது மாதிரி கூறுவது அவளுக்குப் பெரிதும் பிடித்து இருந்தது.

”அது சரி, அவன், அம்மா அப்பா இவன மாற்ற முயற்சிகள் ஏதும் எடுக்கலயா? இப்படி ஒரேடியா சாமியாராக மாறிய கதைய உலகத்துல, நான் கேட்டதே இல்லை” என்று பேச்சைச் சூடாக்கினாள்.

பக்கத்தில், மதினியின் மகள்கள் ஆளுக்கொரு போனை கையில் வைத்துக் கொண்டு ஏதோ விளையாடிக் கொண்டிருந்தார்கள் ஏதும் கேட்காதது போல். ஒரத்தில் இருந்த கட்டிலில் மல்லாக்கப் படுத்திருந்த மதினியின் கணவர் திரும்பித் திரும்பிப் பேசிக்கொண்டு இருந்தார்.

மதனி ஆரம்பித்தார், ”அவங்க என்ன பண்ணுவாங்க, மருமக இறந்து போனதில் இருந்து அவர்களைக் கவனிக்கவே ஆள் வேண்டியிருக்கும். ஒருத்தர் மாற்றி ஒருத்தர் போய் தான் பார்த்துக்கிறோம். இவனப் பாக்குறப்ப, எல்லோரும் அதை, இதைப் பேசினதைப் பார்த்து, கண்டிஷனா சொல்லிப்புட்டான். என்னன்னா,’எல்லோரும் வர்றப்ப போறப்ப இப்படிப் பேசினா, இனி, நான் வீட்டுக்கு வரமாட்டேன். தோட்டத்திலேயே நான் தங்கிப் புடுவேன். எதுவும் பேசக்கூடாது. மனசு மாற, நான் மாறுவேன். அதுவரை என்னைக் கட்டாயப்படுத்தாதீர்கள். சொல்லிட்டேன்.’ அப்படின்னு சொல்லிப்புட்டான். அதிலிருந்து, அத்தை, மாமா கூட, ஏன்? இவன்  சித்தப்பா கூட எதுவும் பேசவில்லை” எனக் கூறிக் கொண்டே எழுந்து சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

”யாரு குருன்னு சொல்லிட்டு வாய் நிறைய எப்பவும் பேசிகிட்டு இருப்பாரே, அவரால கூடவா இவனை மாற்ற முடியலையா?” என்றாள் சரசு.

மூன்று வயது சின்னவன் என்பதால், சிறுவயதி லிருந்தே, ’அவன்’ ’இவன்’ என்று தான் அக்கா தங்கை இருவரும் அழைப்பார்கள்.

”இல்லைப்பா, அவனுக்கு அமைதி இப்ப தேவை. அவனே பொண்டாட்டி செத்த துயரத்திலே இருக்கான். எல்லாரையும் போலவா இது. கொடுமையான சாவு. கல்யாணம் பண்ண ஒரே மாதத்தில் கழுத்தறுத்து கிடந்த மனைவியை யாருக்குத் தான் பார்க்கச் சகிக்க  முடியும். இதுதான், இப்படிச் சாமியார் ஆக்கிடுச்சு”. நீண்ட நேரங்களுக்குப் பிறகு கட்டிலில் படுத்தவாறு பேச்சின் உள்ளே நுழைந்தார் சுப்பு.

சரசு உடனே கட்டிலை நோக்கித் திரும்பி உட்கார்ந்து, ”இல்ல, அத்தான் என்னதான் துக்கமாக இருந்தாலும், எல்லாத்தையும் எப்படி துறக்கிறது? விட்டுட முடியுமா? உலகத்தில் எல்லோரும் இப்படியா இருக்கிறாங்க? பாவடித் தெருவுல இருந்த வெத்தலைக் கிழவி பேத்தி இறந்தப்ப, அவளுக்கு இரண்டு பிள்ளை. மாப்பிள்ளை பிணம் கிடக்கிறப்பவே, தன் மாமா கிட்ட போய், ’என் பிள்ளைகளுக்கு வழி சொல்லுங்க? மாமா. யாரு அதுகள  வளர்ப்ப, இனி? எங்க போவேன் நா?. உங்க இரண்டாவது மகள, எனக்கே கொடுத்துடுங்க. புள்ளைங்கள பார்த்துக் கொள்ளட்டும்.’ என்று கேட்டானாம். இது தான் இப்ப உலகம். சாமியார் ஆயிட்டானாம், சாமி.” என்றாள் எதார்த்தமான மனதோடு சரசு.
”காலைல சாப்பாடு எல்லாம் கிடையாதாம். ஒரு டம்ளர் பால் அவ்வளவுதான். குளிச்சதுக்கப்புறம் ஒரே தியானமாம். அவன் ரூம்முக்குள்ளே,  இதுவரை யாரும் போனதே இல்லை, அதுவும், அவன் பொண்டாட்டி செத்ததுக்கு அப்புறம், கதவைத் தட்டினாலும் வெளியே வரவே மாட்டான். மத்தியானம் உப்பு புளி போடாம, நிலத்துக்கு அடியில்  விளைந்த காய்கறி பருப்புக் குழம்பு. அவன் வயல்ல விளைஞ்ச பச்சரிசிச் சாதம். வீட்டுக்குத் தோட்டத்தில் இருந்து வரும் பசு மாட்டு பால் போதுமானது. அதிலிருந்து தயிருக்கு ஊற்றி, மோராக்கிக் கொடுத்தால் குடிப்பானாம். கடைப்பொருள் இதுவரைத் தொட்டதில்லை. மதியம் 3 மணிக்கு மேல் வெயில் தாழக் கிளம்புவான். யார் கிட்டயும் சொல்லிக்காம, அவனாக் கிளம்பிடுவான். தோட்டத்துக்கு போறவன், மறுநாள் காலையில்  பால், காய்கறிகளோடு வருவான். வீட்டாரோடு ஒரு வார்த்தையும் பேசுவதில்லை. தோட்டத்துல பேசுவானோ?  இல்ல சைகையிலேயே ஆடுவானோ தெரியல.” சாமியார் கதை போய்க்கொண்டே இருந்தது.

தங்கையும் அக்காவும் இப்படி மெய்மறந்து அத்தை மகன் சாமியாரான ஒவ்வொரு அசைவையும் பேசுவது கடுப்பா இருந்தாலும், சரவணன் யோசித்துப் பார்த்தான். சொந்த மாமா மகன், தடபுடலாக நடந்த கல்யாணம், இவர்கள் அப்பாவின் சொந்தத் தங்கச்சி மகன். இப்படி சோகத்தை அனுபவிப்பதை யாரால் தாங்க முடியும்?
’வயது வித்தியாசம் இல்லாமல் இருந்திருந்தால் சரசுவைத் திருமணம் செய்து வைத்திருப்பார்கள். பாவம் அதுவும் வாய்க்கல’. என மனதிற்குள்  நினைத்தவாறே சரவணன் வீட்டிலிருந்து கிளம்பினான்.

”ஏங்க… எங்க கிளம்பிட்டீங்க” சரசு கேட்டாள்.

”இந்தா.. வாரேன்.. தெருக்கோடியில் இருக்கிற மலை அடிவாரத்தில் போய், கொஞ்ச நேரம் இருந்துட்டு வர்றேன்.” சொல்லிட்டு சரவணன் கிளம்பினான்.

அவனுக்கு ரொம்ப நேரமாகவே, சாமியார் கதை கேட்பது ரொம்ப கஷ்டமாகப் பட்டது. இந்த மனநிலையில் இருந்து வெளியே வர, மலையடிவாரம் கட்டாயம் ஒரு அமைதியை தரும் என்று எண்ணினான்.

”ஏங்க இப்ப மேல போகாதீங்க.. கோயில் சாத்தி இருப்பாங்க. வேணுமுன்னா, கீழே மாப்பிள்ளைச் சத்திரத்துக்குப் பக்கத்தில் மரத்தடியிலே இருந்துட்டு வாங்க.. காத்து நல்லா வரும்.. அமைதியாக இருக்கும்.”

அவன் கிளம்புவது அவளுக்கு வசதியாகவே பட்டது. எனவே அனுப்பி வைத்தாள்.
--2--

மலை அப்படி ஒன்னும் பெரிசு இல்லை. வழுக்குப் பாறை போல. மொழு மொழுனு இருக்கும். நடுப்பகுதியில் சமதளமாய் சில இடங்களில் இருக்கும். அங்கு மட்டும் மரங்கள் அடர்ந்து காணப்படும். கீழிருந்து எல்லாப் பக்கத்திலிருந்தும் ஏறி விட முடியாது. சில வழிகள் தான் உண்டு. ஆனால்  சுனையம்மன் கோவிலுக்குப் போற பாதை தவிர வேறு வழியில் யாரும் ஏறுவதில்லை.

சுனையம்மன் கோவில் மலைப்பாதை அடிவாரத்தில், நிறைய மாமரங்கள், முழு நெல்லி மரம், பூமரங்கள் என நிறைய மரங்களுண்டு. நடுநடுவே தென்னைகளும் இருக்கும். ஒரு ஓரத்தில் நிறைய வாழை மரங்கள் வைத்திருந்தார்கள். சிறிய நீரோடை மிகச் சரியாக எல்லா மரங்களுக்கும் நீர் போவது போலிருந்தது. மரத்தின் கிளைகள் பரந்து விரிந்து இருப்பதனால், சூரிய ஒளியே இல்லாமல் குகை போன்று இருக்கும். நிறைய படிக்கற்கள் இருக்கும். இதைச் சுற்றியுள்ள நான்கைந்து தெருக்களில் உள்ள பெரியோர்களின் சொர்க்கலோகம் இவ்விடம். குழந்தைகளுக்கும் தான்.

உச்சியில் ஜோதிப் பிழம்பாய் பகலவன் தன் உடலால் ஒளியை உக்கிரப்படுத்திக் கொண்டிருந்தார். கோயில் அடிவாரத்திற்கு முன்னுள்ள நான்கைந்து வீடுகளில் இரண்டு வீட்டிற்கும் நடுவில் உள்ள குறுக்குச் சந்தில் நுழைந்தால், அடிவாரத்திற்குள் எளிமையாய் நுழைந்து விடலாம். இல்லை என்றால், முள்வேலி சுற்றித் தான் வரவேண்டும். அது கொஞ்சம் சுற்று. எனவே, சரவணன் இரண்டு வீட்டிற்கும் நடுவில் உள்ள குறுக்கு சந்தில் நுழைந்தான்.

அடிவாரத்தில் யாருமில்லை. பறவைகள் ஒலி எழுப்பவும் இல்லை.
பலமுறை சரவணன் இங்கு வந்திருந்தாலும், இன்று ஏனோ, இந்த அமானுஷ்யமான ரம்மியமான இடம், அவனுக்கு அந்நியமாகவே இருந்தது. காற்று அவன் உடலுக்குச் சுகம் தந்தாலும், மனம் ஏதோ பாரத்தைச் சுமந்து கொண்டு, முடங்கி இருப்பது போல வெறுமையாய் இருந்தது.

எல்லாவற்றிற்கும், மணி சாமியாரான கதை தான் காரணமாக இருக்கிறது. இருக்கும் சோகத்தை  மதினியின் பேச்சு மனதை இன்னும் அதிகப்படுத்தியது.
“என்ன மாப்பிள்ள… எப்ப வந்தீங்க? பேரன்கள் வந்திருக்காங்களா? கேட்டுக்கொண்டே, சரவணனின் தோளில் கைவைத்தவாறு பின்பக்கத்திலிருந்து வந்து கேட்டார் அந்த முதியவர்.

திடுக்கென்று திரும்பி, ”மாமாவா நான் பயந்தே போயிட்டேன்” என்றான் சரவணன்.
”சுனையம்மன் சன்னதியில் ஏம்மாப்பிள்ளை கலக்குறீங்க? அவள் எல்லார் பயத்தையும் போக்குறவளாச்சே.”  சிரித்துக்கொண்டே அருகே அமர்ந்து, அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டார்.

அது, அன்பின் நெடிய சுகம் கொண்டதாக இருந்தது சரவணனுக்கு.

எப்பொழுது இவ்வூருக்கு வந்தாலும் இந்த மாமாவைப் பார்க்காமல் போறது இல்ல. ஏன்னா அவருக்கு குடும்பம்ணு யாரும் இல்லை. அவர் தனியாள். எப்படி இருந்த குடும்ப அவர் குடும்பம். ஒண்ணும் இல்லாம இப்ப இவர் தனிமரமாக நிற்கிறார். கூலி வேலைகளுக்குப் போவாரு. தானே ஆக்கியும், சில பொழுது கடையில சாப்பிட்டும் பொழுதைக் கழிக்கிறார். எனவே எப்போது வந்தாலும் மாமாவை பார்க்காம அவன் போறதில்லை.

அவருக்கும், என் மேல, என் குடும்ப மேல, ரொம்ப பாசம். உருகிப்போவார்.
”தற்பொழுது எங்கு வேலை” எனக்கேட்ட சரவணனைப் பார்த்து, மாமா மெதுவாகப் புன்முறுவல் செய்தார். முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டு அன்னார்ந்து பார்த்துக்கொண்டே,

”மாப்பிள... சின்ன சின்ன வேலைகளுக்குத் தான் இப்ப என்ன கூப்பிடுறாங்க. முன்ன மாதிரி முரட்டு வேலைகளுக்கு எல்லாம் போக முடியல”  அவர் குனிந்து அமைதியானார்.

”மாப்பிள்ளை வாழ்க்கை நம்மளை எப்படி புரட்டிப் போட்டாலும், அதை வாழாம இருக்க முடியாது. துன்பம் வரும். சோகம் வரும். அது நமக்கான போட்டி. டப்பா உள்ளேயே அடைபட்டு கிடக்கக் கூடாது. நமக்குன்னு கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு கொடுத்திருக்கிறார். அதை நிறைவேத்தனும். அது நம்ம கடமை. போயிட்டே இருக்கிற ஆறு ஒருநாளும் தனக்காக  நிற்க்காது.”

த்ராணி குறைய, வேறு ஒரு குரலில் பேசியது போல் பேசிவிட்டு, இன்னும் நெருக்கமாக உட்கார்ந்தார். அந்த நெருக்கம் அவர் சொல்லாமல் விட்டதையும் அவனிடம் கூறியது.

”நம்ம மணியோட தோட்டத்துக்குத் தான், இப்ப  நீங்க வேலைக்குப் போறீங்கன்னு என் வீட்டுக்காரி சொன்னா. மணி எப்படி நல்லா வச்சுக்கிறாப்பிலய? ரொம்ப நாளா அவனப் பத்தி ஒரு சந்தேகம் மாமா, அப்பா, அம்மா கிட்ட கூடப் பேசாம, சாமியாரா தெரியுறான்னு  எல்லாரும் வருத்தப்பட்டாங்க. தோப்புக்குள்ளே, சொந்தக்காரங்க யாரும் வருவதில்லை, போவதில்லை, அதனால தோட்டத்திலே அவன் நடவடிக்கைகள் எதுவும் இங்கே இருக்கிறவங்களுக்குத் தெரியல. தோட்டத்தில் மணி எப்படி மாமா? எல்லோரையும் போல நல்லா பேசுவானா? சந்தோசமா இருக்கிறானா? எனக் கேள்விகளை அடுக்கி வைத்தான் சரவணன்.

கேள்விகள் அவர் மனதிற்குள் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. லேசாக நெற்றியைத் தடவிக் கொடுத்தார்.

“மேலே இருக்கிறாளே சுனையம்மன். அவளுக்குத் தெரியும் எல்லாம். தோட்டத்திலே என்ன நடக்குதுன்னு. நம்ம முன்னாடிப் போறவனுக்குச் செஞ்சா, நமக்கு நம்ம பின்னாடி வர்றவன் செய்வான். இது தான் உலகம். சமநிலை நீதி, அவன் வாழ்ற வாழ்க்கைக்கு, அவன் என்ன பண்ணான்னு யாருக்குத் தெரியும்?”

என்றவாறு தோளில் கிடந்த துண்டை எடுத்து படிக்கட்டின் இடதுபுறம் விரித்தார். மெல்ல உடலைச் சாய்த்து கொண்டே மீண்டும் அவரே பேசத் தொடங்கினார்.

”பசுந்தோல் மாப்பிள வெளில…. உள்ள புலிக்கூட்டமே தெரியுது. பணமும் சுகமும் தேடும் புலிகள். புரிஞ்சுக்கங்க மாப்பிள்ளை அவ்வளவுதான்”

அப்படியே, தன் உடலை மெல்ல சாய்த்து தூங்க ஆரம்பித்தார் மாமா.

யாரிடமும் அதிர்ந்து கூட பேசாத மாமா ஏன் இவ்வளவு வார்த்தைகளைக் கடுமையாகப் பேசுகிறார் என்று தெரியவில்லை. எப்பொழுதும் இன்னொருவரைக் குறித்து அவர் இவ்வாறு பேசியதே இல்லை. துன்பப்படும் எல்லா நிலைகளிலும் யாரையும் குறைத்துப் பேசுவதும் இல்லை.

ஆமாம், தோட்டத்தில் அப்படி என்னதான் நடக்கிறது. நடந்து விட்டது.

 நன்றி : இனிது இணைய இதழ்

 பாரதிசந்திரன்