நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

புதன், 12 ஆகஸ்ட், 2020

சோலா மலையாளத் திரைப்படம் – நவீனத்துவப் பார்வை

 

சோலா மலையாளத் திரைப்படம் – நவீனத்துவப் பார்வை

சோலா மலையாளத் திரைப்படம்

சோலா மலையாளத் திரைப்படம்பற்றிய நவீனத்துவப் பார்வையை உணருங்கள்.

 

நீங்கள் ஒரு இடத்தில் ஒன்றைக் காண்கிறீர்கள்!

அதை ஒன்றாகக் காண்பீர்களா?

பலவாகக் காண்பீர்களா?

நல்ல இலக்கியம் எது? எனக் கேட்டீர்கள்.

நான் ஒன்றைக் காட்டுகின்றேன்.

எதற்காக அதை இலக்கியம் என்று நான் கருதினேனோ, அதையே நீங்கள் கருதுதுவீர்களா?

நீர்தானே அது? வெவ்வேறு வடிவமும் நிறமும் பெயரும் ஏன் அதற்காகக் கொடுத்தீர்கள்?

இதுபோலக் கேள்விகள் நீண்டு கொண்டே போகலாம் ”சோலா” போன்ற அதீதத் தரமான படங்களைப் பார்த்தால்.

பார்க்கும்போது….

ரொம்பக் கால தாமதமாகவே இப்படத்தை நான் காண நேர்ந்தது. பார்த்த நாள் முதல் உருட்டி எடுக்கிறது மனது.

பெரிதாகச் சொல்லிவிட வேண்டும் என்ற கனத்த யோசனைகளுக்கு மத்தியில், பெரிதாய் எதுவும் சொல்லிவிட இயலாது என்றே தோன்றுகிறது.

காற்றின் ஸ்பரிசம் உணர முடியுமே தவிர அதை மிகுதியாகப் பெரிதாக விளக்கிட முடியாது.

சோலா மலையாளத் திரைப்படம் தரும் உணர்வு

அனாந்திரமான பெருங்காடு அது. பலவற்றை உண்டு கொள்கிறது. அது பெற்று போடும் பலவும் பல்கி, ஒன்றுக்கொன்று பிணைந்து இரையாகி, அது வேறுக்கு உணவாகி, எல்லாம் நடக்கும்.

யாரும் அறிந்திராத அந்த அருவி காட்டில், காட்டின் அத்தனை மூர்க்கங்களையும் ஆதி குணத்தையும் ஒரு கேமராவுக்குள் பொதித்து விடமுடியும் என்றால் ”சோலா” எனும் மலையாளப் படம் பாருங்கள்.

(சோலா என்றால் சோலை அல்லது காடு என்று பொருள்.)

உலகத்தைத் தொட்டுவிடத் துடிக்கும் கண்களால் செதுக்கப்பட்டது. ரசிகர்கள் நாலாந்தரமானவர்கள் அல்ல; முதல் தரமான ஜீரணிப்பாளர்களே எனும் பாதையில் சமைக்கப்பட்டது தான் இந்தப் படம்.

இசையை யாரும் இசைக்க வேண்டியதில்லை. இசையை இசையே இசைக்கும். காற்று, மரத்தை ஆட்டுகிறது. மரம் ஆடுகின்றது. நீர், அருவியில் ப்ரவாகம் எடுக்கிறது; எடுத்து மண் தொட்டு ஓடுகிறது. உள்ளாக ஒவ்வொன்றும் தனக்குள் இசைத்தபடி.

அதை அதன் போக்கிலேயே அதாகவே உலவ விட்டால்? இசையை யார் தான் இசைக்க முடியும்? காடு, அருவி, பறவை, இரவு மழை எல்லாம் என்ன விரும்புமோ, எதைக் கூறுமோ, அதுவே இப்படத்தின் இசை.

வார்த்தைகள் எல்லா இடங்களிலும் உண்மையன்று. சொல்ல நினைத்தவை அப்படியே வார்த்தைகளில் பயணம் ஆவதில்லை. கூற விழைந்தவையும் புரிதலில் மாறிவிடும். இடத்திற்கு இடம், வார்த்தைகள் வேறு வர்ணங்களைத் தாங்கி நிற்கின்றன. உணர்ச்சிகள் வாழ்தலாகும்.

வெளிப்படுத்த இயலாத உணர்ச்சிகள் கோடியுண்டு இப்புவியில். உன்னப் புரிஞ்சுக்காம விட்டுட்டண்டா! என்பது போல, பேசாமலே பேசும் மொழி, எல்லா ஜீவராசிகளிலும் தலைமை தாங்குகிறது. அது கூறும் விளக்கம் வார்த்தைகளைத் தாண்டிய பெருக்கத்தைக் கொண்டது. அவையே இப்படத்தின் வசனம்.

முழுப்படத்திலும், செங்கல்லை வரிசையில் நிரவி, இடுக்கில் சாந்து திணிப்பது போல, அங்கொன்றும் இங்கொன்றுமாய் அலைகிறது வசனம். கதையை வசனம் நடத்திச் செல்லவில்லை. காட்சியும், அதன் அனுமானமும் தான் கதையை நடத்துகின்றன.

இயற்கை அதன் பிரம்மாண்டத்தைக் காட்டிவிட்டால் ஏற்றுக் கொள்ளவோ தள்ளிவிடவோ முடியாது. அது, அனுபவத்திற்கு அப்பாற்பட்டது; இதுவரை காணாதது; அதற்கு உள்ளே நுழைய ஆசைப்படுவது.

கடல், மலையருவி, மேகம் இவை எப்பொழுதும் விசுவரூப தரிசனத்தையே தன் பார்வையாளர்களுக்குத் தருவன‌. அவைதான் இந்தப் படத்தில் முழு காட்சிகளிலும் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பிரேமிலும் ஓராயிரம் அர்த்தம் பொதிந்த பதிவுகள்.

எதார்த்தத்தைப் பெரிதும் தாங்கி, உள்வெளிப் பெரும் தீயைச் சுவாலையாகப் பறக்க விட்டு, பின் நவீனத்துவ சாயம் பூசி, வெளித்தள்ளிய யதார்த்தம் அல்லது பதார்த்தம் இது.

ஆனந்தக் கூத்தும் அடாவடியும் ஆற்ற முடியாத பெரும் துயரமும் தொண்டையைக் கிழிக்கும் கதறலும் பீறிட, தொட்டு அணைத்து ஆறுதல் கூறக் கைகளை நீட்ட வேண்டியுள்ளது.

தோளில் தட்டிக்கொடுத்து ஆசுவாசப்படுத்த, மிகத்தீவிரமாய் பக்கத்தில் உட்கார இடம் தேட வேண்டியுள்ளது. படத்தின் பின் நவீனத்துவமான புறச்செய்திகள் கூறக் கூறச் சொல்லி மாளாது. அகத்தின் சாயலைக் குறித்து இனிக் காண்போம்.

சோலா மலையாளத் திரைப்படம் (chola) கதை

மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மலைவாழ் பெண்ணொருத்தி, தன் காதலனுடன் கொச்சி நகரத்தை ஒருநாள் சுற்றிப் பார்க்க விரும்புகிறாள்.

காதலன், தன் எஜமானனான ஆசானின் ஜீப்பிலேயே நகரத்தைச் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்து வருகிறான். இது, கதாநாயகிக்குப் பிடிக்கவில்லை.

தனிமையில் சுற்றிப் பார்க்க நினைத்தவள், இன்னொரு பற்றாளன் உடன் சுற்றுவதை வெறுத்தாள். காதலன் வேண்டச் சுற்றுலாவிற்கு மனம் இல்லாமல் கிளம்புகிறாள்.

சூப்பர் மால், நகர வீதி, கடை உணவு, படகுச்சவாரி, கடற்கரையெனச் சந்தோசமாகவே செல்கிறது பயணம்.

வீடு திரும்ப நினைக்கையில், மலையிலிருந்து நண்பனின் தொலைபேசி அனைவரையும் திடுக்கிட வைக்கிறது.

கதாநாயகியின் தாய்க்கு இவ்விசயம் தெரிந்து விட்டது எனவும், ”காலம் தாழ்த்தி வா” எனவும் கூற, ஆசான், “இன்று இங்கேயே தங்கி காலை மலைக்குத் திரும்பலாம்” எனக் கூறி ஒரு லாட்ஜில் தங்க அழைத்துச் செல்கிறான்.

 

அது மோசமான லாட்ஜ் என்பதை நேரில் பார்த்த கதாநாயகி வர மறுக்கிறாள். இரவு பஸ் பிடித்து ஊர் சென்று விடலாமெனக் கதறுகிறாள். ஆசானிடம் அதட்டலுக்குப் பயந்து கட்டாயப்படுத்தி அவளை அறைக்குள் அழைத்துச் செல்கிறான் கதாநாயகன்.

அங்கு, ஆசான் ”உணவும் சாராயமும் வாங்கி வா” எனக் கூறிக் கதாநாயகனை அனுப்புகிறான். தயங்கி தயங்கி மனம் இல்லாமல் செல்கிறான். ஆனால், கதாநாயகி செல்ல வேண்டாமென அவனிடம் கெஞ்சிக் கேட்கிறார்.

உணவும் சாராயமும் வாங்கிவர காலதாமதமாகிறது. இரைக்க இரைக்க வந்து கதவைத் தட்ட, ஆசான் மேலாடையைத் தோளில் போட்டுக் கொண்டு கீழே இறங்கிச் செல்லுகிறான்.

அறையினுள்ளே கதாநாயகன் சென்று பார்க்க, அலறுகிறான்; துடிக்கின்றான்; கதறுகிறான். காரணம், படுக்கையில் ரத்தக்கரை, குளியலறையில் மேலாடையின்றி அவள் அமர்ந்திருந்தாள்.

உலகம் வெகுவேகமாய் மண்டைக்குள் சுழல்கிறது. அதைத் தட்டி கேட்க முடியாமல் ஆசானிடம் கெஞ்சுகிறான். இரவு செல்கிறது மூன்று தனித்த உலகமாய்.

 

மறுநாள், எதார்த்தங்கள் சுக்கு நூறாகிக் காட்டுத்தனமான எண்ண ஓட்டங்களின் நடத்தை வெளிப்பாடுகள் ஓட்டம் எடுக்கின்றன.

காட்டருவிப் பாதையை யாரும் தீர்மானித்து விடமுடியாது. அது சக்திகளின் முழு வீரியம் கொண்டது. தானே தன்னைச் அமைத்துக்கொள்வது. எதையும் உள்வாங்கி ஜீரணிப்பது.

ஆசானின் முரட்டு தனத்தில், பெண்மை தன் இளமையைச் சுவீகாரம் கொடுக்கிறது. அருவி நீரின் போதையில் மிதந்து மூழ்கிக் காமக்களியாட்டம் போடுகிறான்.

நீர் வேள்வி, எதிர்ப்பாற்றல் குரல்வளையை நெரித்துக் குரல்வளையை நெரித்துச் சுழன்று, அடித்து வானம் மேலே ஏறிக் குதித்துத் தவம் செய்கிறது.

முதல் இணைதல், லாட்ஜ் அறையில் நடந்த பின்னிலிருந்து காதலன் வில்லனாகிறார். வில்லன் காதலன் ஆகின்றார். கதாநாயகி மனதில்.

புள்ளிக் கோலங்கள் முதலில் ஒன்றுதான். பின் தான் வேறு வேறு. வடிவம், நிறம் மாறுகின்றன. மகுடம் ஊதாமல் பாம்பாட்டியின் கண்ணசைவில் எல்லாம், பாம்பு தன்னை ஆட்டுவித்துக் கொள்கின்றது.

பாம்பாட்டி உலகை வென்ற எகத்தாளத்தில் பெருமித ஆனந்தமடைந்து சிலிர்கின்றான். அந்தப் போதைகளில், போதையை விட இப்போது தலையாய ஏதும், எதுவும் தர முடியாததை, இக்காமம் தரவல்லதுமாகும்.

ஒரு நெருக்கடியில், ஆசானைக் கொன்று விடுவது எனக் கத்தியுடன் வந்து நீருக்குள் போராடி, குத்தியும் கட்டியும் சாய்த்து விடுகிறான் கதாநாயகனாக உள்ள வில்லன்.

இரவுக்குள் சலனமில்லாத மழைநீரின் தொடுதல், இரவு மிருகங்களின் உருவமற்ற ஓசைகளின் ஊடுருவல், படத்தின் காட்சிகள், ஆழ்மனதில் அழுகையைப் பிறப்பெடுக்க செய்கின்றன.

 

மறு விடியல்… ஆசான் ஆற்றோரத்தில் கொடிகள் கட்டப்பட்டுக் கொல்லப்பட்டு கிடக்கிறான். கரையில் முகம் வீங்கிய காயங்களுடன்.

கதாநாயகிக்குத் தாங்கொணா துயரம். இறந்த ஆசானின் தலையைத் தூக்கி வைத்துக் கொண்டு அழுகிறாள். புலம்புகிறாள். பின் மயான அமைதியுடன் தரையில் அமர்ந்து அழுகிறாள்.

நிலைகுலைந்த மனது, தறிகெட்டு சில நேரம் அலைபாயும். மழையும் சில நேரம் அமைதியாகிவிடும். சில நேரம்  பைத்தியக்காரத் தனமான செயலைச் செய்யும்.

அதே மனநிலையில் காதலன் அருவியின் ஓரத்தில் பித்துப் பிடித்தவன் போல் கையூன்றி இருக்கும்பொழுது, பாராங்கல் கொண்டு அடித்துச் சாகடிக்கிறாள் கதாநாயகி.

அருவியைப் பார்த்து அமர்ந்து இருக்கிற காட்சியைக் காட்டிக் கடைசியாய் படம் இவ்வாறு முடிகின்றது.

என்னதான் சொல்ல வருகிறது இந்தப் படம்?

படம் பார்த்தவர்கள் இந்தக் கேள்வியை, உள்ளுக்குள் பலமுறை கேட்காமல் இருந்திருக்க முடியாது. சரியான பார்வையாளர் ஒருவர், படம் பார்க்காத ஒருவரை அழைத்து இக்கதையைக் கூறி விமர்சனம் கூறுங்கள் எனக் கேட்காமல் இருந்திருக்க முடியாது.

எத்தனை கோணங்களில் அணுக முடியுமோ, அத்தனைக்கும் இடமளிக்கும் கோட்பாடுகளின் மறை அங்கமாக உலா வந்து இருக்கிறது இந்தத் தேர்.

 

ஆசான் அவளைக் கெடுத்து விடுவானோ என்ற தவறான எண்ணத்துடன் காதலன் வேகமாக உணவு வாங்கி வருகிறான். அதுவே காட்சிகளை அடுக்கி வைக்கிறது.

நான் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறேன் என்ற அவனின் எண்ணமே அவனைக் கொலை செய்யச் சொல்லுகிறது. அவர்கள் இருவரும் பாவம், அப்பாவிகள். தவறு ஏதும் செய்யவில்லை என்பது ஒருசாரார் பார்வை.

 

காதலனை தவிரப் பிற ஆடவருடன் சுற்றுலாச் செல்ல விரும்பாத அவள், அந்த முரடனின் கண் அசைவிற்குத் தொடர்ந்து போய்க் காமத்தை அனுபவித்து ஏற்றுக்கொள்வது, மறுப்பேதும் கூறாமல் உடன் சென்று, காதலனை வெறுப்பது என்பதெல்லாம் அவளின் மனப்பிறழ்வு.

சாதகமான ஒன்றைத் தனதாக்கிக் கொள்ளத் தன்னை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்வது என்ற பசப்பு தன்மையுடையது என்பது மற்றொரு சாரார் கருத்து.

அதனால்தான் அருவியைப் படமாக்கிக் காட்டியுள்ளார் இயக்குனர் என்று அவரையும் சாட்சிக்கு அழைத்துக் கூறுகின்றனர்.

 

அவள் தன் காதலனை மலைபோல் எண்ணினாள். தன்னைக் காப்பானெனத் துணிந்து வந்தாள். ஆனால், அவனோ ஆசான் என்பவனின் அடிவருடியாக இருந்து தன்னைச் சிறிதும் நினைத்துப் பார்க்காமல், தன்னைச் சிக்கலில் மாட்டிக் கொள்ளவும் அனுமதித்தான்.

இவனோடு எப்படி வாழ்வது? சரியான தேர்வு அல்ல இது என வருந்தித் தன் வேதனையால் அவனுக்குத் தண்டனை கொடுக்கிறாள் என்பது இன்னொரு கருத்து.

 

மாதவிடாய் ஆனவளைக் குளிக்கச் செய்து, மேலும் மகிழ்ச்சிப்படுத்தி உலகைக் காட்டவும், தகப்பன் இடத்திலிருந்து அவளை நடத்தினான் ஆசான்.

அங்கு எவ்வித துன்பமும் வல்லுறவும் நடைபெறவே இல்லை. வல்லுறவு நடைபெறுவதாக நினைப்பதையே ரசிகர்களைக் குழப்ப நிலையில் உணர்வதற்கான உத்தி என்று ஆழமாக ஒன்றை கூறுவது மற்றொரு சாரார் கருத்தாகும்.

 

ஒரு பெண்ணை எந்த ஆடவன் முதன்முதலில் தொட்டுப் புணர்கிறானோ, அவனே கணவன். அந்தக் கணவனைத் தவிர வேறு ஆடவனை நினைப்பது பெண்ணுக்கு அழகல்ல என்பது பழைய கால வழக்கம்.

தூங்கும்பொழுது குங்குமத்தை நெற்றியில் வைத்து விட்டால் அவனே கணவன் என்ற பத்தாம்பசலித் தனத்தை மீண்டும் வேறொரு கோணத்தில் கூறிய கதை என்பது இன்னொரு சாரார் கருத்து.

இப்படி இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விசய‌த்தைப் படத்திற்கு நிரப்பிப் பொருள் தந்து தன்னையும் தன் ரசனையையும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.

 

மொத்தத்தில் சோலா மலையாளத் திரைப்படம் ஒரு சிறந்த படம்.

படம், படம் ஆயிற்று…

கதை, கதை ஆயிற்று…

ரசனை ரசனையாயிற்று…

புரிந்தவர் இந்த வகையிலேயே புரிந்து கொண்டனர். அது தவறுமன்று.

புரியாததும் தவறுமல்ல…

ஏனென்றால் அதுதான் இலக்கியம்…

பார்ப்பவர், படிப்பவர் அவரவருள்ள அனுபவத்தோடு இலக்கியம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று தருகின்றது…

இலக்கியம் ஒன்றல்ல….

அது ஒவ்வொன்று…


நன்றி : இனிது மின்னிதழ்(ஆகஸ்டு- 9,2020)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக