நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

செவ்வாய், 21 ஜூலை, 2020

தூக்கம்



எனக்குள் எதுவாகவோ மறைந்து கொண்ட தூக்கம்


உண்ண ஆகாரம் தேடி 
அலையும் தேனீயைப் போல் 
மலர்ந்த கண்களில் 
உலர்ந்தது தூக்கம்

உள்ளிருந்த காலம் 
சுயம் மறந்த உள்ளார்ந்த லார்வா

வெளிப்படும் சதுக்கப்பூதம்
 உடல் காட்டி உடல் எடுத்த சுவிகாரம்

மறைப்பின் சிம்மாசனம் 
அது முதலாளித்துவம் அதனால் மறப்பீர்.

கோசங்கள் வான் தொட்டது.

முடிவு திறப்பின் பாதாளம்

புல்தரை மணம் மேடோ புகுத்திப்பார்க்கும் 
மூளை மழுக்கியின் நர்த்தனங்கள்

ஆவலோடு அமிழ்த்தி ஆழ்ந்து
 உள்குளிர வந்து வாய்க்கிறது

நிகழ்ச்சிக் காலசர்ப்பம் தீண்ட 
உமிழும் விஷத்தைவிடப் 
பிடிப்புத் தளர்வாகி 
மாறி மாறி மொய்த்துத் தின்கிறது
எனக்குள் அதுவாகவே மறைத்துக் கொண்ட தூக்கம்.

நன்றி   தமிழ் ஆதர்ஸ்



திங்கள், 20 ஜூலை, 2020

கவிதையும் ரோட்டுக்கடை காளான் ஃப்ரையும்

கவிதையும் ரோட்டுக்கடை காளான் ஃப்ரையும்

கவிதையும்

ரோட்டுக்கடை காளான் ஃப்ரையும்

ஒன்றல்ல. இங்கொன்றும் அங்கொன்றும்

பொறக்கிக் கலக்க.

 

நுரைத்த கடல்

கக்கித் துப்பிய வார்த்தை.

கூழாங்கற்களாக்கி

மறை(பார்)க்கின்ற எழுத்தாக்கிகள்.

 

சன்னலோரக் கண்,

புவி ஆடிய ஆட்டம்.

மனம் பிறாண்டும் நனவோடை நிகழ்வு.

தராசுத் தட்டு இறங்கி ஏறி இறங்கி.

கவிதைத் தூம்பு பீறிட

அடைத்த அடைப்பு எடுப்பார் எவரோ?

 

முப்பாட்டன் சொத்து.

நான் கட்டிய வீடாகிறபொழுது,

ஆதிமூலமே கா

விதை மரமாகும்

மரமெல்லாம் விதையாகும்.

 

வெப்பப் பிரளயமோ?, தண்ணீர் ஊற்றோ?

அது – கலவையின் விஸ்வரூபம்.

எனவே, கவிதையும்

ரோட்டுக்கடை காளான் ஃப்ரையும்

ஒன்றல்ல இங்கொன்றும் அங்கொன்றும்

பொறக்கிக் கலக்க.


 நன்றி : www.inithu.com

https://www.inidhu.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%88-%e0%ae%95%e0%ae%be/

மூன்றாமிடத்தில் குரு

மூன்றாமிடத்தில் குரு

மனிதவாடை அற்ற சிலமாதப் பொழுதுகளில்,

பொரிக்காக வாய் பிளந்து அலைந்தன

கோயில் குளங்களிலெல்லாம் மீன்கள்.

 

கால்நடையோ, பறவையோ நீரருந்த வரும் போது,

மொசுமொசுத்த அகோரப் பசியுடைய

அந்த மீன்கள்,

முதலையாய் உருவெடுத்து

அதைக் குதறித் தின்றுவிடக் கூடாதென

கடவுளிடம் மண்டியிட்டு மன்றாடின.

 

கடவுளும் இவ்வாறே ஆசியளித்தார்…

“உங்கள் குத்தகைக்காரன் நூறாண்டு வாழட்டும்”

 

குத்தகைக்காரனுக்கு எங்கே தெரியும்?

மாதா – பிதா – குரு என்னவென்று.

 

மலை முகடுகளிலிருந்து உருண்டு வரும் பாறைகள் சிதற,

மேகத்திற்கும் குளத்திற்கும் நடுவே சூறாவளியொன்று

குளத்திலுள்ள மீன்களை அள்ளிச் சென்று,

பனிக்கட்டிகளுக்கு இடையே தூங்க வைக்கும்

கனவொன்றைக் கண்டன,

பசியாறத் துடித்த

மீன்கொத்திப் பறவைகள்.


 நன்றி  : www.inithu.com, (https://www.inidhu.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81/)

வெள்ளி, 10 ஜூலை, 2020

”சுனை சாமியார்” சிறுகதை


”சுனை சாமியார்”


”தாடி, மீசை, காவி உடையோடு இருந்தாதான் சாமியாரா? அப்படியெல்லாம் இல்லை. இவன் பேண்ட் டீ-ஷர்ட் போட்டுக்கிட்டு  தான் எப்பொழுதும் இருக்கான். என்ன பேச்சு கம்மியா இருக்கு. சாப்பாடு வேற மாதிரி அவ்வளவு தான். மற்றபடி நம்மள மாதிரி தான் பார்க்கிறதுக்குத் தெரியும்”. என்ற மதினியின் வாயைப் பார்த்தபடியே கேட்டுக் கொண்டிருந்தான் சரவணன். மதினியின் வலப்புறத்தில் மதியச் சாப்பாட்டிற்குக் காய் நறுக்கிக் கொண்டே ஏதோ உலகத்தில் நடக்காத புதுக் கதையைக் குழந்தை வாய் திறந்து கேட்பது போல் அக்காவின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தாள் சரவணன் மனைவி சரசு.
தன் அக்காவின் வீட்டிற்குச் சென்றால், புது உலகம் சென்ற சந்தோசம் தான் அவளுக்கு. தாங்க முடியாது. தண்ணீர் கூட, இவ்வூர் மாதிரி வராதுன்னு ஓராயிரம் முறை கூறியிருப்பாள். இருந்தாலும் அது மாதிரி கூறுவது அவளுக்குப் பெரிதும் பிடித்து இருந்தது.

”அது சரி, அவன், அம்மா அப்பா இவன மாற்ற முயற்சிகள் ஏதும் எடுக்கலயா? இப்படி ஒரேடியா சாமியாராக மாறிய கதைய உலகத்துல, நான் கேட்டதே இல்லை” என்று பேச்சைச் சூடாக்கினாள்.

பக்கத்தில், மதினியின் மகள்கள் ஆளுக்கொரு போனை கையில் வைத்துக் கொண்டு ஏதோ விளையாடிக் கொண்டிருந்தார்கள் ஏதும் கேட்காதது போல். ஒரத்தில் இருந்த கட்டிலில் மல்லாக்கப் படுத்திருந்த மதினியின் கணவர் திரும்பித் திரும்பிப் பேசிக்கொண்டு இருந்தார்.

மதனி ஆரம்பித்தார், ”அவங்க என்ன பண்ணுவாங்க, மருமக இறந்து போனதில் இருந்து அவர்களைக் கவனிக்கவே ஆள் வேண்டியிருக்கும். ஒருத்தர் மாற்றி ஒருத்தர் போய் தான் பார்த்துக்கிறோம். இவனப் பாக்குறப்ப, எல்லோரும் அதை, இதைப் பேசினதைப் பார்த்து, கண்டிஷனா சொல்லிப்புட்டான். என்னன்னா,’எல்லோரும் வர்றப்ப போறப்ப இப்படிப் பேசினா, இனி, நான் வீட்டுக்கு வரமாட்டேன். தோட்டத்திலேயே நான் தங்கிப் புடுவேன். எதுவும் பேசக்கூடாது. மனசு மாற, நான் மாறுவேன். அதுவரை என்னைக் கட்டாயப்படுத்தாதீர்கள். சொல்லிட்டேன்.’ அப்படின்னு சொல்லிப்புட்டான். அதிலிருந்து, அத்தை, மாமா கூட, ஏன்? இவன்  சித்தப்பா கூட எதுவும் பேசவில்லை” எனக் கூறிக் கொண்டே எழுந்து சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

”யாரு குருன்னு சொல்லிட்டு வாய் நிறைய எப்பவும் பேசிகிட்டு இருப்பாரே, அவரால கூடவா இவனை மாற்ற முடியலையா?” என்றாள் சரசு.

மூன்று வயது சின்னவன் என்பதால், சிறுவயதி லிருந்தே, ’அவன்’ ’இவன்’ என்று தான் அக்கா தங்கை இருவரும் அழைப்பார்கள்.

”இல்லைப்பா, அவனுக்கு அமைதி இப்ப தேவை. அவனே பொண்டாட்டி செத்த துயரத்திலே இருக்கான். எல்லாரையும் போலவா இது. கொடுமையான சாவு. கல்யாணம் பண்ண ஒரே மாதத்தில் கழுத்தறுத்து கிடந்த மனைவியை யாருக்குத் தான் பார்க்கச் சகிக்க  முடியும். இதுதான், இப்படிச் சாமியார் ஆக்கிடுச்சு”. நீண்ட நேரங்களுக்குப் பிறகு கட்டிலில் படுத்தவாறு பேச்சின் உள்ளே நுழைந்தார் சுப்பு.

சரசு உடனே கட்டிலை நோக்கித் திரும்பி உட்கார்ந்து, ”இல்ல, அத்தான் என்னதான் துக்கமாக இருந்தாலும், எல்லாத்தையும் எப்படி துறக்கிறது? விட்டுட முடியுமா? உலகத்தில் எல்லோரும் இப்படியா இருக்கிறாங்க? பாவடித் தெருவுல இருந்த வெத்தலைக் கிழவி பேத்தி இறந்தப்ப, அவளுக்கு இரண்டு பிள்ளை. மாப்பிள்ளை பிணம் கிடக்கிறப்பவே, தன் மாமா கிட்ட போய், ’என் பிள்ளைகளுக்கு வழி சொல்லுங்க? மாமா. யாரு அதுகள  வளர்ப்ப, இனி? எங்க போவேன் நா?. உங்க இரண்டாவது மகள, எனக்கே கொடுத்துடுங்க. புள்ளைங்கள பார்த்துக் கொள்ளட்டும்.’ என்று கேட்டானாம். இது தான் இப்ப உலகம். சாமியார் ஆயிட்டானாம், சாமி.” என்றாள் எதார்த்தமான மனதோடு சரசு.
”காலைல சாப்பாடு எல்லாம் கிடையாதாம். ஒரு டம்ளர் பால் அவ்வளவுதான். குளிச்சதுக்கப்புறம் ஒரே தியானமாம். அவன் ரூம்முக்குள்ளே,  இதுவரை யாரும் போனதே இல்லை, அதுவும், அவன் பொண்டாட்டி செத்ததுக்கு அப்புறம், கதவைத் தட்டினாலும் வெளியே வரவே மாட்டான். மத்தியானம் உப்பு புளி போடாம, நிலத்துக்கு அடியில்  விளைந்த காய்கறி பருப்புக் குழம்பு. அவன் வயல்ல விளைஞ்ச பச்சரிசிச் சாதம். வீட்டுக்குத் தோட்டத்தில் இருந்து வரும் பசு மாட்டு பால் போதுமானது. அதிலிருந்து தயிருக்கு ஊற்றி, மோராக்கிக் கொடுத்தால் குடிப்பானாம். கடைப்பொருள் இதுவரைத் தொட்டதில்லை. மதியம் 3 மணிக்கு மேல் வெயில் தாழக் கிளம்புவான். யார் கிட்டயும் சொல்லிக்காம, அவனாக் கிளம்பிடுவான். தோட்டத்துக்கு போறவன், மறுநாள் காலையில்  பால், காய்கறிகளோடு வருவான். வீட்டாரோடு ஒரு வார்த்தையும் பேசுவதில்லை. தோட்டத்துல பேசுவானோ?  இல்ல சைகையிலேயே ஆடுவானோ தெரியல.” சாமியார் கதை போய்க்கொண்டே இருந்தது.

தங்கையும் அக்காவும் இப்படி மெய்மறந்து அத்தை மகன் சாமியாரான ஒவ்வொரு அசைவையும் பேசுவது கடுப்பா இருந்தாலும், சரவணன் யோசித்துப் பார்த்தான். சொந்த மாமா மகன், தடபுடலாக நடந்த கல்யாணம், இவர்கள் அப்பாவின் சொந்தத் தங்கச்சி மகன். இப்படி சோகத்தை அனுபவிப்பதை யாரால் தாங்க முடியும்?
’வயது வித்தியாசம் இல்லாமல் இருந்திருந்தால் சரசுவைத் திருமணம் செய்து வைத்திருப்பார்கள். பாவம் அதுவும் வாய்க்கல’. என மனதிற்குள்  நினைத்தவாறே சரவணன் வீட்டிலிருந்து கிளம்பினான்.

”ஏங்க… எங்க கிளம்பிட்டீங்க” சரசு கேட்டாள்.

”இந்தா.. வாரேன்.. தெருக்கோடியில் இருக்கிற மலை அடிவாரத்தில் போய், கொஞ்ச நேரம் இருந்துட்டு வர்றேன்.” சொல்லிட்டு சரவணன் கிளம்பினான்.

அவனுக்கு ரொம்ப நேரமாகவே, சாமியார் கதை கேட்பது ரொம்ப கஷ்டமாகப் பட்டது. இந்த மனநிலையில் இருந்து வெளியே வர, மலையடிவாரம் கட்டாயம் ஒரு அமைதியை தரும் என்று எண்ணினான்.

”ஏங்க இப்ப மேல போகாதீங்க.. கோயில் சாத்தி இருப்பாங்க. வேணுமுன்னா, கீழே மாப்பிள்ளைச் சத்திரத்துக்குப் பக்கத்தில் மரத்தடியிலே இருந்துட்டு வாங்க.. காத்து நல்லா வரும்.. அமைதியாக இருக்கும்.”

அவன் கிளம்புவது அவளுக்கு வசதியாகவே பட்டது. எனவே அனுப்பி வைத்தாள்.
--2--

மலை அப்படி ஒன்னும் பெரிசு இல்லை. வழுக்குப் பாறை போல. மொழு மொழுனு இருக்கும். நடுப்பகுதியில் சமதளமாய் சில இடங்களில் இருக்கும். அங்கு மட்டும் மரங்கள் அடர்ந்து காணப்படும். கீழிருந்து எல்லாப் பக்கத்திலிருந்தும் ஏறி விட முடியாது. சில வழிகள் தான் உண்டு. ஆனால்  சுனையம்மன் கோவிலுக்குப் போற பாதை தவிர வேறு வழியில் யாரும் ஏறுவதில்லை.

சுனையம்மன் கோவில் மலைப்பாதை அடிவாரத்தில், நிறைய மாமரங்கள், முழு நெல்லி மரம், பூமரங்கள் என நிறைய மரங்களுண்டு. நடுநடுவே தென்னைகளும் இருக்கும். ஒரு ஓரத்தில் நிறைய வாழை மரங்கள் வைத்திருந்தார்கள். சிறிய நீரோடை மிகச் சரியாக எல்லா மரங்களுக்கும் நீர் போவது போலிருந்தது. மரத்தின் கிளைகள் பரந்து விரிந்து இருப்பதனால், சூரிய ஒளியே இல்லாமல் குகை போன்று இருக்கும். நிறைய படிக்கற்கள் இருக்கும். இதைச் சுற்றியுள்ள நான்கைந்து தெருக்களில் உள்ள பெரியோர்களின் சொர்க்கலோகம் இவ்விடம். குழந்தைகளுக்கும் தான்.

உச்சியில் ஜோதிப் பிழம்பாய் பகலவன் தன் உடலால் ஒளியை உக்கிரப்படுத்திக் கொண்டிருந்தார். கோயில் அடிவாரத்திற்கு முன்னுள்ள நான்கைந்து வீடுகளில் இரண்டு வீட்டிற்கும் நடுவில் உள்ள குறுக்குச் சந்தில் நுழைந்தால், அடிவாரத்திற்குள் எளிமையாய் நுழைந்து விடலாம். இல்லை என்றால், முள்வேலி சுற்றித் தான் வரவேண்டும். அது கொஞ்சம் சுற்று. எனவே, சரவணன் இரண்டு வீட்டிற்கும் நடுவில் உள்ள குறுக்கு சந்தில் நுழைந்தான்.

அடிவாரத்தில் யாருமில்லை. பறவைகள் ஒலி எழுப்பவும் இல்லை.
பலமுறை சரவணன் இங்கு வந்திருந்தாலும், இன்று ஏனோ, இந்த அமானுஷ்யமான ரம்மியமான இடம், அவனுக்கு அந்நியமாகவே இருந்தது. காற்று அவன் உடலுக்குச் சுகம் தந்தாலும், மனம் ஏதோ பாரத்தைச் சுமந்து கொண்டு, முடங்கி இருப்பது போல வெறுமையாய் இருந்தது.

எல்லாவற்றிற்கும், மணி சாமியாரான கதை தான் காரணமாக இருக்கிறது. இருக்கும் சோகத்தை  மதினியின் பேச்சு மனதை இன்னும் அதிகப்படுத்தியது.
“என்ன மாப்பிள்ள… எப்ப வந்தீங்க? பேரன்கள் வந்திருக்காங்களா? கேட்டுக்கொண்டே, சரவணனின் தோளில் கைவைத்தவாறு பின்பக்கத்திலிருந்து வந்து கேட்டார் அந்த முதியவர்.

திடுக்கென்று திரும்பி, ”மாமாவா நான் பயந்தே போயிட்டேன்” என்றான் சரவணன்.
”சுனையம்மன் சன்னதியில் ஏம்மாப்பிள்ளை கலக்குறீங்க? அவள் எல்லார் பயத்தையும் போக்குறவளாச்சே.”  சிரித்துக்கொண்டே அருகே அமர்ந்து, அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டார்.

அது, அன்பின் நெடிய சுகம் கொண்டதாக இருந்தது சரவணனுக்கு.

எப்பொழுது இவ்வூருக்கு வந்தாலும் இந்த மாமாவைப் பார்க்காமல் போறது இல்ல. ஏன்னா அவருக்கு குடும்பம்ணு யாரும் இல்லை. அவர் தனியாள். எப்படி இருந்த குடும்ப அவர் குடும்பம். ஒண்ணும் இல்லாம இப்ப இவர் தனிமரமாக நிற்கிறார். கூலி வேலைகளுக்குப் போவாரு. தானே ஆக்கியும், சில பொழுது கடையில சாப்பிட்டும் பொழுதைக் கழிக்கிறார். எனவே எப்போது வந்தாலும் மாமாவை பார்க்காம அவன் போறதில்லை.

அவருக்கும், என் மேல, என் குடும்ப மேல, ரொம்ப பாசம். உருகிப்போவார்.
”தற்பொழுது எங்கு வேலை” எனக்கேட்ட சரவணனைப் பார்த்து, மாமா மெதுவாகப் புன்முறுவல் செய்தார். முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டு அன்னார்ந்து பார்த்துக்கொண்டே,

”மாப்பிள... சின்ன சின்ன வேலைகளுக்குத் தான் இப்ப என்ன கூப்பிடுறாங்க. முன்ன மாதிரி முரட்டு வேலைகளுக்கு எல்லாம் போக முடியல”  அவர் குனிந்து அமைதியானார்.

”மாப்பிள்ளை வாழ்க்கை நம்மளை எப்படி புரட்டிப் போட்டாலும், அதை வாழாம இருக்க முடியாது. துன்பம் வரும். சோகம் வரும். அது நமக்கான போட்டி. டப்பா உள்ளேயே அடைபட்டு கிடக்கக் கூடாது. நமக்குன்னு கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு கொடுத்திருக்கிறார். அதை நிறைவேத்தனும். அது நம்ம கடமை. போயிட்டே இருக்கிற ஆறு ஒருநாளும் தனக்காக  நிற்க்காது.”

த்ராணி குறைய, வேறு ஒரு குரலில் பேசியது போல் பேசிவிட்டு, இன்னும் நெருக்கமாக உட்கார்ந்தார். அந்த நெருக்கம் அவர் சொல்லாமல் விட்டதையும் அவனிடம் கூறியது.

”நம்ம மணியோட தோட்டத்துக்குத் தான், இப்ப  நீங்க வேலைக்குப் போறீங்கன்னு என் வீட்டுக்காரி சொன்னா. மணி எப்படி நல்லா வச்சுக்கிறாப்பிலய? ரொம்ப நாளா அவனப் பத்தி ஒரு சந்தேகம் மாமா, அப்பா, அம்மா கிட்ட கூடப் பேசாம, சாமியாரா தெரியுறான்னு  எல்லாரும் வருத்தப்பட்டாங்க. தோப்புக்குள்ளே, சொந்தக்காரங்க யாரும் வருவதில்லை, போவதில்லை, அதனால தோட்டத்திலே அவன் நடவடிக்கைகள் எதுவும் இங்கே இருக்கிறவங்களுக்குத் தெரியல. தோட்டத்தில் மணி எப்படி மாமா? எல்லோரையும் போல நல்லா பேசுவானா? சந்தோசமா இருக்கிறானா? எனக் கேள்விகளை அடுக்கி வைத்தான் சரவணன்.

கேள்விகள் அவர் மனதிற்குள் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. லேசாக நெற்றியைத் தடவிக் கொடுத்தார்.

“மேலே இருக்கிறாளே சுனையம்மன். அவளுக்குத் தெரியும் எல்லாம். தோட்டத்திலே என்ன நடக்குதுன்னு. நம்ம முன்னாடிப் போறவனுக்குச் செஞ்சா, நமக்கு நம்ம பின்னாடி வர்றவன் செய்வான். இது தான் உலகம். சமநிலை நீதி, அவன் வாழ்ற வாழ்க்கைக்கு, அவன் என்ன பண்ணான்னு யாருக்குத் தெரியும்?”

என்றவாறு தோளில் கிடந்த துண்டை எடுத்து படிக்கட்டின் இடதுபுறம் விரித்தார். மெல்ல உடலைச் சாய்த்து கொண்டே மீண்டும் அவரே பேசத் தொடங்கினார்.

”பசுந்தோல் மாப்பிள வெளில…. உள்ள புலிக்கூட்டமே தெரியுது. பணமும் சுகமும் தேடும் புலிகள். புரிஞ்சுக்கங்க மாப்பிள்ளை அவ்வளவுதான்”

அப்படியே, தன் உடலை மெல்ல சாய்த்து தூங்க ஆரம்பித்தார் மாமா.

யாரிடமும் அதிர்ந்து கூட பேசாத மாமா ஏன் இவ்வளவு வார்த்தைகளைக் கடுமையாகப் பேசுகிறார் என்று தெரியவில்லை. எப்பொழுதும் இன்னொருவரைக் குறித்து அவர் இவ்வாறு பேசியதே இல்லை. துன்பப்படும் எல்லா நிலைகளிலும் யாரையும் குறைத்துப் பேசுவதும் இல்லை.

ஆமாம், தோட்டத்தில் அப்படி என்னதான் நடக்கிறது. நடந்து விட்டது.

 நன்றி : இனிது இணைய இதழ்

 பாரதிசந்திரன்


ஞாயிறு, 13 டிசம்பர், 2015

தமிழ்ச் சிற்றிதழ் கவிதைகளில் சமுதாயப் பார்வை

தமிழ்ச் சிற்றிதழ் கவிதைகளில் சமுதாயப் பார்வை

“வாழ்க்கையைக் கவித்துவப் போக்கில் பிரதிபலிப்பதற்கும், அங்கதமாக எழுதிக் காட்டுவதற்கும், வாழ்க்கையைப் பற்றிய சிறந்த, தெளிந்த தத்துவத்தையும், எதிர்காலம் பற்றிய எண்ணத்தையும் கவிஞன் அல்லது எழுத்தாளன் தெளிவாகப் பெற்றிருக்க வேண்டும்.”1 என்பதிற்கேற்பச் சிற்றிதழ்கள் சமூகப் பிரக்ஞையுடன் கவிதைகளை வெளியிட்டிருப்பதைக் காண முடிகின்றது. சமூகமும் இலக்கியமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதால் கவிஞனால் இத்தளத்தைச் சரியாகப் பதிவு செய்ய முடிந்திருக்கிறது.
சிற்றிதழ்கள், சமகால உலக இலக்கியங்களின் தரத்திற்கு இணையாகத் தமிழ் இலக்கியங்களைக் கொண்டு செல்கின்றன என்பது அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாக அமைந்திருக்கிறது. எனவே அவ்வகைச் சிற்றிதழ்களில் சமுதாயக் கவிதைகள் எவ்விதம் பதிவு செய்யப் பெற்றிருக்கின்றன என்பதாக இவ்வாய்வு அமைந்திருக்கின்றது.
சிற்றிதழ்களின் இலக்கணம்
“நுட்பமும் ஆளுமையும் விரிந்த மனப்பான்மையும் உடைய இதழாளர்களின் இதழ்கள் வரலாற்று வரிசைச் சிற்றிதழ்களாகின்றன. நேருக்கு நேர் தாங்கள் காணும் உண்மை நிகழ்வுகளை எழுத்தாக்கியும், பல்வேறு மொழஜகளுக்கு இடையிலான ஒப்புமையையும் அதன் சாரத்தையும் கொண்டு இதழுக்கான குறிப்பிட்ட மொழியின் ஆளுமையுடன் கூடிய நுணுக்கமும் இலக்கிய வடிவங்களை நுணுக்கி விவரிக்கும் பாங்கும்-இவ்விதழ்களின் சிறப்பு இயல்புகளாகின்றன”2 என்பது சிற்றிதழ்களின் இலக்கணமாகக் கொள்ளப்படுகிறது.

சமுதாயக் கவிதைகள்

சிற்றிதழ்களில் காணலாகும் கவிதைகள் பல்திறத்தன. அவற்றில் சமுதாயக் கவிதைகள் பெரும்பங்கைப் பெற்று எழுதப் பெற்றிருக்கின்றன. அவற்றை,
1. தனிமனிதப் பிரச்சனைகள்
2. பொதுமைப் பிரச்சனைகள்
3. சமூகத் தீர்வுகள்

தனிமனிதப் பிரச்சனைகள்

சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் பல்வேறு பிரச்சனைகளையும், சந்தோசங்களையும் சமுதாயத்திலிருந்து பெறுகின்றான். இதன் விளைவாக ஏற்படும் மன உணர்வுகள் சில நேரங்களில் சமூகப் பின்னடைவையும், சில Nநுரங்களில் சமூக முன்னேற்றத்தையும் ஏற்படுத்துகின்றன. இதனடிப்படையில், “எந்த இலக்கியத்திற்கும் அடிப்படையான உள்ளீடாக அல்லது பொருண்மையாக மனிதனே காட்சி தருகின்றான். மனிதனின் ஆசை வேட்கைகளையும், செயல் திறனையும், வளர்ச்சி நிலையினையும் வீழ்ச்சியினையுமே இலக்கியங்கள் பிரதிபலித்து நிற்கின்றன:3 என்பரத அறிய முடிகின்றது. இவ்விதமான தனிமனிதச் சமுதாய உணர்வுக் கவிதைகள் சிற்றிதழ்களில் பெரும்பான்மையாக எழுதப் பெற்றிருக்கின்றன.
இனிமையற்ற இல்லம்
தேசத்தில் பல்வேறு வளர்ச்சிகளைக் கொண்டுவர வேண்டிய கடப்பாட்டிலுள்ள ஒவ்வொரு மனிதனும் தனது நேரத்தை வீணடிக்க மாட்டான். ஆனால் இன்று சமூகத்தில் ஒவ்வொரு இல்லத்திலும் மனிதர்களின் நேரங்கள் சுரண்டப்படுகின்றன. காலங்கள் வீணாவது அறியாமல் இருக்கும் இத்தன்மையினை,
“சின்னத்திரை நம்மைச்
சிறைப் படுத்துகிறது……
வீட்டுக் காவலில் தேசம்.”4
எனும் கவிதை கூறுகிறது. இல்லங்கள் தம் பாதுகாப்பிற்கும், தம் வசதிகளுக்காகவும் என்ற நிலைமாறி, இல்லங்களின் பாதுகாப்பிற்காக நமது சுகங்களை விட்டுத் தர வேண்டியுள்ளது. இதனை,
“வெளியூருக்குப் போனாலும்
வீட்டு ஞாபகமாகவே இருக்கின்றது.
திருட்டுப் பயம்”5
இக்கவிதை விளக்குகின்றது. பிறர் பொருளைக் கவர்ந்து தவறான வாழ்க்கை வாழும் மனப் போக்கு இச்சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிறது. இதன் மூலம் முழுமையான சந்தோசங்களை அனுபவிக்க முடியாமல் மனித மனங்கள் பாடுபடுகின்றன.
“பூக்கத் தயாராய்
தங்கை
கவலைகளும்”6
என்ற கவிதை, மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்தல், திருமணம், வரதட்சணை, சந்தோசமான. இவ்வாழ்க்கை இவற்றின் மேலுள்ள பயத்தை வெளிப்படுத்துகின்றது. சுயமற்ற வாழ்வை,
“என்னை
அழகு செய்வதாய் நினைத்து
வண்ணக் கலவையை
அள்ளிப்பூசி
இன்று பறக்கக் கூட
சிறகுகளை விரிக்க முடியாமல்
நான்”7
இக்கவிதை வெளிப்படுத்துகிறது. தன் அனுபவங்களே கவிதையின் உள்ளார்ந்த பொருளாகிறது என்பதையும், அதுவே சமூகத்தின் உண்மைப் பொருளாகின்றது என்பதை, “தமிழ்க் கவிதைகளைப் பொறுத்தமட்டிலும் கவிதை உண்மைதான் கவிதைக்கு ஓர் உயர்ந்த தரத்தை நல்குகின்றது. கவிஞன் கூறும் உண்மை நாம் உலகில் காணும் உண்மையைப் போன்றதன்று, அவன் கூறும் உண்மை எப்படி இருக்க வேண்டும் என்பதை உரைப்பது”8 என்ற அறிஞரின் கூற்று மெய்ப்பிக்கின்றது. தனி மனிதனின் வேதனைகளில் உயர்நிலையில் அமைந்த கவிதையாக,
“வறுமையின் கொடுமையில்
வாடிக் கிடக்கும் பெண்ணின் வறண்ட மார்பில்
சுரக்காத பாலுக்காகச் சுவைத்துக் கொண்டிருக்கும்
குழந்தை – அதனை மானமற்று மறைந்து
மானப்பார்வை பார்க்கும் காமுகன்”9
என்ற கவிதையைக் கூறலாம். சமூகத்தில் பாலியல் வன்கொடுமைகளும், திரிந்துபட்ட மனவுணர்வுகளுமாக இருக்கும் மனிதர்களை நினைத்து வேதனைப்படும் தனிமனித விரக்தியை இக்கவிதை வெளிப்படுத்துகிறது.

2.பொதுமைப் பிரச்சனைகள்

“மனித சுதந்திரம், மனித மகிழ்ச்சி ஆகியன பற்றிய கருத்துகளே சிறந்த இலக்கியங்களின் கருவாக அமைய முடியும். வாழ்வின் இன்றியமையாத கூறுகளைப் பிரதிபலித்துக் காலந்தோறும் மனித சமுதாயம் எந்த எந்தப் பாதைகளின் வழியாக நடைபயின்றது என்பதைத் தௌ;ளத் தெளிவாக் காட்டி நிற்கும் கலைப் படைப்புகளே சாகவரம் பெற்று நீண்ட நாட்கள் வாழ்கின்றன.”10
சமூகத்தின் பொதுமையான பிரச்சனைகளையும் கவிஞன் தன் கவிதையின் பாடுபொருளாகக் கொண்டிருக்கின்றான். அவ்வாறான கவிதையாக,
“பொதி சுமக்கும்
மலர்கள்
மெட்ரிக் குழந்தைகள்”11
எனும் கவிதையமைகிறது. பொதி சுமப்பது கழுதைகளாகலாம். ஆனால் பிஞ்சுக் குழந்தைகள் பாட நூல்களைச் சுமந்து செல்லுவது கவிஞனின் மனதைச் சுடுகிறது. மலர் பொதி சுமப்பது கண்டு, தாங்காது கதறுகிறார். வறுமையை விட்டொழிக்க வேறு வழியில்லாத தாய் வேதனையின் உச்சக் கட்டத்தில்,
“அழு!மகனே!அழு!
கண்ணீர் கடலாகட்டும்!
உப்பு விற்றாவது
பிழைக்கலாம்”12
என்று கூறுகின்றாள். சமுதாயத்தின் இழி குரலாக இது காட்ட படுகின்றது.
“எமன் ஓய்வாகி விட்டானா?
உயிர் பறிப்பு செய்கிறதே
மதங்கள்.”13
“வரதட்சனைத் வில்லொடிக்க
வரவில்லை எந்த இராமனும் முதிர் கன்னிகளாய்     சீதைகள்”14
                     “கோவலனைத் தேடிச் சென்ற கண்ணகி
காவல்துறை ஏற்பாட்டில்
விபச்சார ஒழிப்புச் சட்டத்தில்
கைது செய்யப்பட்டாள்”15
“பூப்பெய்தியதுமே
வெட்டி எறியப்பட்ட
சுதந்திரச் சிறகுகள்”16
போன்ற கவிதைகள் சமூகப் பிரச்சனைகளான வரதட்சணை, மதக்காழ்ப்பு, நீதி, சுதந்திரமின்மை எனப் பல தளங்களில் எழுதப் பெற்றிருக்கின்றன.

சமூகத் தீர்வுகள்

கவிதைகள், பல்வேறுபட்ட பிரச்சனைகளின் பாதிப்பாக .இருந்தாலும், அக்கவிதைகளில் எதிர்காலச் சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆசையினையும் கவிஞர்கள் பதிவு செய்துள்ளார்கள்.
“சமரச வார்த்தைகளின்
களிம்புகளை நிராகரித்த
எங்கள் கோபம்
சமத்துவ தீர்வுகளுக்காய்
இன்னும் எரிகிறது”17
                     “மனிதம் இல்லா வாழ்க்கை
மனிதன் வாழ்ந்தால்
மனிதத்திற்கே மரணம்”18
எனும் கவிதைகள் சமூகத் தீர்வைத் தருவதாக அமைகின்றது. மனிதர்கள் மனதளவிலும், உடலளவிலும் தீய எண்ணங்கள் கொண்டவர்களாகயிருக்கின்றார்கள். எனவே இவை களையப் பட வேண்டும் என்ற தீர்வை முன்வைக்கும் கவிதையாக,
“அடிக்கடி வந்துபோ மழையே….
குளமில்லா ஊரில்
அழுக்காய் மனிதர்கள்!”19
இக்கவிதை அமைந்திருக்கிறது.
“எரிக்க வேண்டிய
சாதிக் குப்பைகள் பொசுக்க வேண்டிய
பொய்மை ஏடுகள் அழிக்க வேண்டிய
அபத்தஙகள் அன்றாடம் அதிகமாகிக் கொண்டே    வருகின்றன

அதனால் நான் ஓர் தீப்பற்தமாகவாவது
இருக்க வேண்டி முயல்கின்றறேன்”20
எனும் கவிதையில் சமூகத்தைத் தூய்மையாக்கப்பட வேண்டுமென்றால் தீமைகளை அழித்துவிட எரித்துவிட வேண்டும் என்று கவிஞர் தீர்வு கண்டிருக்கின்றார்.
சிற்றிதழ் கவிதைகளில் சமுதாயப் பின்னணியில் அமைந்த கவிதைகள் அளவில் பெருமளவாக இருப்பதைக் கவனிக்க முடிகின்றது அவற்றில் தனிமனித வெளிப்பாட்டுச் சிந்தனைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. சமூகத் தீர்வுகளையும் கவிஞனே தன் கவிதை மூலமாக வெளிப்படுத்துகிறான். சமூகமும், இலக்கியமும் ஒன்றிலிருந்து ஒன்று பெறுமானால் கவிஞர்களின் தீர்வுப்படி நல்ல சமூகமாக எதிர்காலம் அமையும்.

அடிக்குறிப்புகள்

1.ஜி.ஜான் சாமுவேல்,”இலக்கியத்தில் சமுதாயப் பார்வை”, ப-101
2.பொள்ளாச்சி நசன், “சிற்றிதழ்கள்”, பக்-84-85
3.ஜி.ஜான் சாமுவேல், “இலக்கியத்தில் சமுதாயப் பார்வை”, ப-33
4.கா.நா.கல்யாணசுந்தரம், “கவிதை உறவு”, ஏப்ரல்-97, ப-6
5.பொன்.குமார், ‘சிகரம’, மே-99, ப-16
6.வலம்புரி.லேனா, ‘கல்வெட்டுப்பேசுகிறது’, சூலை-98, ப-7
7.தேவநாதன், ‘நண்பர்கள் தோட்டம்’, ஜீலை-99,ப-2
8.ந.சுப்புரெட்டியார், ‘பாட்டுத் திறன்’, ப-30
9.கரிகாலன், ‘நண்பர்கள் தோட்டம்’, அக்-நவம்-99, ப-11
10.ஜி.ஜான் சாமுவேல், “இலக்கியத்தில் சமுதாயப் பார்வை”, ப-110
11.மாடக்குளம் விஜயகுமார், ‘தேசிய வலிமை’, டிசம்-98, ப-10
12.என்.வாஞ்சிநாதன், ‘தேசிய வலிமை’, டிசம்-98,ப-10
13.ஓவியா, ‘ஓடம’, செப்-97, ப-11
14.இனியவன், ‘கல்வெட்டுப் பேசுகிறது’, ப-16
15.டி.மருது பாண்டியன், ‘தேசிய வலிமை’, மார்ச்-99, ப-4
16.சூரியதாஸ், ‘ஓடம்’, ஏப்-மே-97, ப-22
17.மு.முருகேஷ், ‘ஓடம்’, சூன்-97, ப-2
18.சுரா. ‘தேசிய வலிமை’, ப-9
19.ஜெ.பி.சிருஷ், ‘ஒளிநெறி’, ஜன-98, ப-24 ;
20.        ‘கல்வெட்டுப் பேசுகிறது’, நவம்-97, ப-10

திங்கள், 6 ஏப்ரல், 2015

சிற்றிதழ் கவிதைகளில் -உள்ளுணர்வு

சிற்றிதழ் கவிதைகளில் -உள்ளுணர்வு 

செ.சு.நா.சந்திரசேகரன்.

            இருபதாம் நூற்றாண்டின்  பிற்பகுதியில், அச்சுத் தொழில் வளர்ச்சியுற்ற பொழுதுகளில் இலக்கியங்கள் பல்கிப் பெருக ஆரம்பித்தன.வணிக இதழ்கள் செய்யத்  தவறிய இலக்கியப் பணியைச் சிற்றிதழ்கள் செய்து வந்தன. குறிப்பிட்ட இலக்கியத்தில் ஒவ்வொரு இதழும் உலக இலக்கியங்களுக்கு இணையாகப் புதுமை நோக்கில் படைப்புகளைத் தமிழ் உலகிற்குத் தந்தன.கவிதை, சிறுகதை,கட்டுரை,குறுநாவல்,திரை இலக்கியம்,நகைச்சுவை  எனப் பன்முக இலக்கியத் தளங்களில் சிற்றிதழ்கள் தம் பங்களிப்பை மேம்படுத்திச்  சாதனைகள் செய்து வருகின்றன.இதழ்கள் (Journals)தமிழின் நவீனமயப்பாட்டில் முக்கிய இடம் பெறுவதுடன் தமிழ் சில புதிய பரிமாணங்களைப் பெற உதவியுள்ளன.1 என்ற கார்த்திகேசு சிவத்தம்பியின் கருத்திற்கேற்ப இலக்கிய வகைகள் தமிழில் நவீன நிலையை எட்டியது எனலாம்.
           
           சிற்றிதழ்களின் பங்கு குறித்துக் கவிமாமணி பி .குமரேசன் கூறும்போது
நல்ல படைப்புகள் உருவாகப் படைப்பாளிகளுக்கு  வாய்ப்பளிக்கும் வள்ளலாகப் பல சிற்றிதழ்கள் பணியாற்றித் திகழ்ந்தன-திகழ்கின்றன.இளம் எழுத்தாளர்களின்  இதய உணர்வுகளுக்கு ஏற்றப் பாதை வகுத்துக் கொடுத்து,  ஆக்கத்திற்கு அரணாக நின்று பெரும் பங்காற்றிய பெருமை சிற்றிதழ்களுக்கு உரியதாகும் என்றால் அது மிகையாகாது.2  என்பார்.சிற்றிதழ்களின் போக்குக்  குறித்து, “முன்னிலை நவவேட்கை வாத (Avant-Gardist)அம்சங்கள்-இவை சிற்றிதழ்கள் பலவற்றில் காணப்பட்டன.அதாவது,சர்வதேசிய மட்டத்தில் நவமாகத் தோன்றிய இலக்கியக் கொள்கைகளை, போக்குகளை அறிமுகம் செய்வதிலும் அவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுவதிலும்
இச்சஞ்சிகைகள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன,”3  என்பார் அறிஞர்.

        
   சிற்றிதழ்களில், கவிதை இலக்கிய வகை பெரிதும் வளர்ச்சியுற்ற நிலையினை எய்தியுள்ளன.இயக்கம் சார்ந்த, இசங்கள் சார்ந்த, கோட்பாடு சார்ந்த கவிதைகள் எழுதப் படுகின்றன.  அவ்வாறான கவிதைகளில், படைப்பாக்கத்தின்
உள்நாதமாக விளங்கும் படைப்பாளனின் உள் உணர்வுகள் எத்தகு நிலையில் கவிதைகளில் பிரதிபலிக்கின்றன என்பதனையும் படைக்கப்படும் கதாமாந்தர்களின் வழி உள் உணர்வுகள் எவ்விதம் வெளிப்படுத்தப் படுகின்றன என்பதனையும் ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது .

உள்ளுணர்வு குறித்த வரையறை

உள்ளுணர்வுகள் படைப்புகளில் வெளிப்படும் நிலையானது சமூக நிகழ்வுகளோடு நேரடியான தொடர்பு கொண்டதாகும்.சமூக ஒழுக்கம் முதலியவற்றின் காரணமாக,மனவுணர்வுகள் சுதந்திரமாக வெளிப்படாமல் அழுத்தப் படுகின்றன. இவ்வுணர்வுகளும்அடிமனதில் ஆழமாய் மையம் கொண்டிருக்கும்  பாலியல் உணர்வுகளும்,நனவிலி மனத்தின் ஊடாக,அவனே அறியாத நிலையில் அவனுடைய சொல்லிலும் செயலிலும் வெளிப்படுகின்றன.கலைஞனிடம்  இத்தகைய உணர்வுகள்,அவனுடைய அறிவார்ந்த விருப்பங்களையும்,உணர்வுகளையும் மீறி அவனுடைய கலைப்படைப்பில் வெளிப்பட்டு விடுகின்றன.4  எனும் கருத்து உள்ளுணர்விற்கான வெளிப்பாட்டுத் திறனை விளக்குகிறது.உளவியல் அறிஞர் யுங் இதனைக் குறிப்பிடும் போது,”மனித உள்ளத்தின் உணர்வே (Human Psyche)எல்லா அறிவியல்களுக்கும் கலைகளுக்கும் கருவறையாக விளங்குவது .5என்பார்.

உள்ளுணர்வுக் கவிதைகள்

     படைபாளன்,சமூகத்தின் மூலம் தனக்குக் கிடைத்த அனுபவத்தை,அறிவை
மையம் கொண்ட தமது படைப்புகளைப் படைக்கின்றான்.ஆழ்மன உணர்வுகளில் தம் பழமை நிகழ்வுகள் அமிழ்ந்து கிடந்தாலும்,மேல்மன நனவோட்டத்தின் ஆளுமைகள் அவ்வப்பொழுதுகளில் ஆட்சி செய்கின்றன. படைப்பாளனுக்கும்,படைப்புக்கும் இடையில் உள்ள உளவியல் தாக்கம் சமூக முறையிலான தாக்கங்களோடு ஒப்புறவையோ,எதிர் உறவையோ கொண்டிருக்கின்றன என்பதை ஆய்வியலாளர்கள் படைப்புகளை  முன்வைத்து மெய்பிக்கின்றனர். இதனடிப்படையில் தனி மனித உணர்வுகள் படைப்பாளனைச் சார்ந்தோ,சமூகத்தைச் சார்ந்தோ  நேரான அல்லது எதிரிடையான கருத்துக்களை முன்வைப்பதாக அமைவதைக் காணமுடிகிறது.அவ்வாறு அமைந்த கவிதைகளில்,மன உணர்வுகளில் பதிந்து போன ஒருவரின் நினைவுகளை மீட்டிப் பார்க்கும் கவிதையாக,

ஞாபகத்தின் மெளன
வாசப்  படியேறுகிறதுன் பிம்பம்

திருப்புதலின்
ஏக கணத்தில் இருப்பிழந்த
உலகத்தில் பிடிப்புகள் நிராதரவுடன்
கலைகின்றன.

இடைவெளியின்
நெருக்கத்தில் சருகுகள்
மக்கிப் போகின்றன.

ஊசலில்
இழைந்தபடி சிறகசைத்து மறைப்பினும்
நீட்சி மடங்கிய உணர்குழலுக்குள்
தேங்கிக் கிடக்கிறது உன்
ஆசை .6

இக்கவிதையைக் காணலாம்.தனிமை,அமைதி இதனோடு பெரிதும் தொடர்பில் இருப்பவை நினைவுகள் உள்ளுணர்வின் வெளிப்பாடுகள் மனதிற்குள் சில நேரங்களில் இன்பத்தையும்,துன்பத்தையும்,சுகத்தினையும் தரவல்லதாய் அமைகின்றன.அவ்வாறு என்றோ தம்மோடு பழகி இன்று இல்லாது போன ஒருவருக்கான நினைவுப் பதிவுகளை இக்கவிதைஅழகாகபதிவுசெய்துள்ளது.இவ்விடத்தில்,”கவிதைதன்னியலானது,ஆகையால்அது,தன்னியலாக நிலை பெறும் தன்மையே  அதன் பொருண்மை;அது வேறு எந்தப் பொருளையும் யாருக்கும் தரும் கட்டுப்பாடு உடையதன்று,”7 தன்னம்பிக்கைஎனும் இதழில் க.அம்சப்பிரியா எழுதிய கவிதையில்,புறச்சுழ்ல்கள் அகச்சுழ்ல்களை எவ்விதம் பாதிக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டி உள்ளார்.இவ்வுணர்வுகள்,தனி மனித உணர்வுகளைப் பாதிக்கும் வண்ணமாக உள்ளன.அக்கவிதையானது ,

அழைக்கப் படாமலே
வந்து குவியக்
காத்திருக்கிறது
சோகக் குப்பைகள் .

ஆழமான அஸ்திவாரங்களால்
அரண் அமைக்கப்பட்ட
மனக் கட்டிடங்களையும்
விழ்த்த
காலம் பார்த்துக் கொண்டிருக்கிறது
சுற்றுப்புறக் காட்சிகள் .8

இதுவாகும். ம.செல்வபாண்டியனின் கவிதை மற்றொரு கோணத்தில் இருந்து வாழ்க்கையில் ஊடாடும் உணர்வுகளைத் தரிசிக்கிறது.அக்கவிதையில், புறக் காரணிகளால் மனம் அழுத்தப் படுகிறது என்கின்றார்.இம்மன உணர்வை,

நாம் அறியாமலேயே தோன்றி
முதுமையை அறிவிக்கும் நரைகள் என
மரணத்தின் பூனைப்  பாதங்கள்
                             நெருங்கிச் சமீபிக்கின்றன
வாழ்நாளில் ஒரு நாள் கழிவது
தெரியாமல் நம்மை
அர்த்தமற்றதாய் சூழல் அழுத்துகிறது .9

இக்கவிதை வெளிப்படுத்துகிறது .  

      மன உணர்வுக் கவிதைகளை ஆய்வு செய்ய,உளவியல் அணுகு முறையே  பெரிதும் ஆய்வில் பயன்படுகிறது.அதனை அடிப்படையாகக் கொண்டு,
இவ்வுள்ளுணர்வுக் கவிதைகள் குறித்து அறிஞர் தி.சு.நடராஜன் கூறும் பொழுது,  
வழக்கத்திற்கு மாறாக வருவனவும்,தம்மை அறியாமல் கட்டுப் படுத்தப் படாமல் நாத் தடுமாறியும்,நழுவியும் வருவனவும் உளறலாக விழுவனவும்,பேசுபவனின் அல்லது எழுதுபவனின் உள் மனத்தை அதிகமாகப்
புலப்படுத்தக் கூடியன10  என்பார்.

   சமூகச் சூழலைக் கண்ட படைப்பாளன் வெறுப்புணர்வில், அதைத் தன் கவித்துவத்தால் கோபத்தோடு பதிவு செய்கின்றான்.அவ்வாறான கவிதையாக,

இராமலிங்க வள்ளலாரின்
கசாப்புக் கடையை புத்தர்
திறந்து வைத்தார் .

பாவிகளை இரட்சிப்பதாய்  பாவத்திற்கு
பரிந்துரை செய்ததற்காக
ஏசு மீது வழக்குப் போடப்பட்டது

திருப்பதியில் மொட்டை போட்டு விட்டு
ஏசு தலைமறைவானார்.

கோவலனைத்  தேடிச் சென்ற கண்ணகி
காவல் துறை ஏற்பாட்டில்
விபச்சார ஒழிப்புச் சட்டத்தில்
கைது செய்யப்பட்டாள்.

நீதி தேவதைகளின் தராசுத் தட்டில்
காசு போட்டு விட்டு கற்பழித்தார்கள்.11
இக்கவிதையைக் காணமுடிகிறது.படைப்பு ,வாசிப்பாளன் ,படைபாளன் ஆகிய இம் மூன்று நிலைப் பாடுகளிலும் சமூகத்தின் தாக்கம் இல்லாது இருக்க முடியாது.இவற்றில் படைப்பாளனின் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்பட்டு
உள் உணர்வு அவனிடமிருந்து வெளிப்படுகிறது.

      சிற்றிதழ்களில் எழுதப் படும் கவிதைகளில்,தனி மனித உள் உணர்வுக் கருத்துக்கள்  இயலாமை ,தேவை,நினைவுகள் ஆகியவற்றைக்  கருதுகோளாகக் கொண்டவையாக உள்ளன.சமூகக் கவிதைகளில் காணும்
உள்ளுணர்வுகள், சீர்கேட்டை மாற்றும் தன்மையினதாகவும்,எதிப்பைத் தெரிவிக்கும் விதமாகவும் அமைந்து இருக்கின்றன.



அடிக்குறிப்புகள் ;
1)கார்த்திகேசு சிவத்தம்பி (கட்டுரையாளர் ),இலக்கிய இதழ்கள் ,ப .1
2)பி.குமரேசன்,தமிழில் சிறுபத்திரிக்கைகள் ,ப .81
3)கார்த்திகேசு சிவத்தம்பி (கட்டுரையாளர் ),இலக்கிய இதழ்கள் ,ப .12
4)தி.சு.நடராஜன்,இலக்கிய இஸங்கள்,ப.17
5)Gustav Jung,Psychology of Literatuer,p.175
6)R.மணிகண்டன்,தமிழ் அமிழ்தம்,ஏப்ரல்-99,ப.17
7)அ.அ.மணவாளன்,இருபதாம் நூற்றாண்டின் இலக்கியக்
கோட்பாடுகள்,பக்.37-38
8)க.அம்சப்பிரியா,தன்னம்பிக்கை,மே -97,ப -7
9)டி .மருதுபாண்டியன்,தேசிய வலிமை,ஏப்ரல்-99,ப -4
10)தி.சு.நடராஜன்,இலக்கிய இஸங்கள்,ப -23
11)டி .மருதுபாண்டியன்,தேசிய வலிமை,மார்ச்-99,ப -5