நன்றி......

வணக்கம்.என் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்.கருத்திடுக.....

சனி, 30 ஜூலை, 2022

நூல் அறிமுகம் : தாழை. இரா. உதயநேசனின் விடை தேடும் விடியல் – பாரதிசந்திரன்

விடியலை- வெளியிலும் உள்ளுமாகத் தொடர்ந்து உலகம் வெகு காலமாய்த் தேடிக்கொண்டே இருக்கிறது. சிலர் எண்ணத்தில் விடியலைத் தேடுகின்றனர். 

சிலர் நிகழ்வுகளில் விடியலைத் தேடுகின்றனர். சிலர் பொருளாதாரத்தில் விடியலைத் தேடுகின்றனர். இதிலிருந்து மாறுபட்டு தம் கவிதைகளில் தமக்கானதாய் விடியலைத் தேடாமல், மானுட முன்னேற்றத்திற்கான விடுதலையைத் தேடுகிறார் கவிஞர் தாழை இரா. உதய நேசன். 

 “விடை தேடும் விடியல்” நூல், தொண்ணூற்று ஆறு சிறப்பான கவிதைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு வகையினதாக அமைந்திருக்கிறது. சமூகத்தின் மாற்றங்களை உணர்ந்து மேன்மைக்கான விதைகளை ஒவ்வொரு கவிதைகளிலும் பதியமிட்டு சென்றிருக்கின்றன 

கவிஞனின் எழுத்துக்கள். எந்த எல்லையையும் தொட்டுச் சென்று மிகப்பெரும் சாதனைகளைச் சாதிக்கும் என்பதைக் கவிஞர் உதயநேசனின் அனைத்து கவிதைகளும் சான்று பேசுகின்றன. குறிப்பாகக் கவிஞர் உதயநேசனின் கவிதைகள், எளிமையான சொற்களையும், ஆழமான பொருள் வீச்சையும் கொண்டவை. 

உளவியல் சார்பானவை. சமூகப் பிரச்சனை சார்பானவை, அழகியல் சார்பானவை, தனி மனித ஒழுகலாறுகள் சார்பானவை, பெண்ணியம் சார்பானவை என பல நிலைகளில் கவிதையின் நிஜங்களை நாம் பாகுபாடு செய்து அடுக்கிக் கொண்டே போகலாம். 

 எல்லையற்ற வெளியெங்கும் பறந்து திரியும் பறவை போல் கவிதை உலகின் எல்லா திசைகளிலும் இவரின் பார்வைகள் அலைமோதித் திரிகின்றன. இவரின் இலக்கியப் பார்வை வேறு வேறு கோணங்களில் படிப்போர் அனைவரையும் சிந்திக்க வைக்கின்றன. 

 இலக்கியப் பார்வை குறித்து ‘வில்பர் ஸ்காட்’ (Wilbur Scott) கூறும்பொழுது, இலக்கியப் பார்வைகளை ஐந்தாகப் பிரிப்பர். அது உலகளாவிய தரமான இலக்கியத் திறனாய்வு அமைந்த ஒன்றாகும். அல்லது இலக்கியப் பார்வை குறித்த வெளிப்பாடாகும். 

அந்த வகையில் இலக்கிய பார்வைகளை, 
 1.அறநெறி சார்பானது 
 2.சமுதாயப் பார்வை சார்பானது 
 3.உளவியல் பார்வை சார்பானது 
 4.வடிவ இயல் பார்வை சார்பானது 
 5.தொன்ம மூல படிவ பார்வை சார்பானது என ஐந்து பார்வைகளில் காணலாம்

இவ்வகைகளில் இலக்கியத்தை ஒவ்வொருவரும் அணுகும் பொழுது படைப்பாளனின் படைப்புத்திறனை முழுமையாக அறிந்து கொள்ள முடியும். கவிஞர் உதயநேசனின் கவிதைச்சோலையில் உள்ள கவிதைகள் இந்த ஐந்து வித பார்வைக்கும் தீனி போடுகின்றன. 

பலப் பல ஆயிரம் சிந்தனைகளுக்கு வழி விடுகின்றன. தீராத பசியுடன் உள்நுழைய வருபவருக்கு வயிறு முட்ட உணவு அளிக்கின்றன. 96- தலைப்புக்களின் பெயர்களிலேயே கவிதைகள் தன்னை வெளிப்படுத்தி நிற்கின்றன. 

பல தலைப்புகள் கவிதைகளாகவும் அடையாளப்படுத்தி நிற்கின்றன. முழுக் கவிதையின் உள்ளார்ந்த பொருளை அதன் தலைப்பிலேயே உணர்த்தி விடுகின்றன. இவ்வாறான தலைப்புகள் சில இடங்களில் தீயாய் சுடுகின்றன. காதல் மேடையமைத்துச் சில தலைப்புகள் குளிர் காற்றாய் இதம் வருடுகின்றன. உதாரணமாய், ’மண்ணுக்குக் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை’ ’அந்தந்த நேரம் மாறும் முகங்கள்’ ‘நினைவுகளில் நனையும் காகிதக் கப்பல்’ ‘விடியலே வந்துவிடு’ ‘ஏர்முனையும் எதிர்முனையும்’ எனும் தலைப்புகளும் அதன் கவிதைகளும் மிகச் சிறப்பாக இருக்கின்றன 

 “கனாக் கால நினைவுகள்” எனும் தலைப்பிலான ஒரு கவிதையில், கனவுகள் எனும் அரூபம் மனதைத் தாக்கும் பொழுது ஏற்படும் உணர்வுத் துடிப்புகளை அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றது இக்கவிதை. கவிஞர் மிக சிறப்பாக இக்கவிதையை உணர்த்திச் செல்கிறார். மக்கள் அனைவரும் இதை உணர்கின்றனர். ஆனால், கவிஞர் உதயநேசன் மட்டும் அதை கவிதையாக மாற்றுகின்றார். 

 ”மறக்க நினைத்து மறைந்து போனேன் 
 ஞாபகங்கள் தென்றலாய்த் 
தீண்டிச் செல்கிறதே 
 பேசாத வார்த்தைகள் 
 புரவிபோல் சீறிட்டுச் 
 செப்புச்சிலையாகச் 
 செதுக்கிடச் சொல்கிறதே” (ப-90) 

 ‘மதம் என்னும் மதம் ஏனோ’ எனும் எனும் கவிதைக்குள் சமூகத்தின் தலை விரித்தாடும் கோலத்தைக் கோபக்கனலோடு, சுட்டெரிக்கப் பார்க்கின்றார். பார்த்ததோடு மட்டுமல்ல அதற்கான தீர்வையும் தருகின்றார் கவிதையில், 

 ”அவனியில் உதித்தவர் 
 அடித்தளம் மறந்தார் 
 ஓடுகின்ற உதிரத்தின் 
 நிறமும் மறந்தார் மானிடராம் 
நமக்குள் பிரிவினை வளர்த்துச் 
 சிந்தனைகள் குறுகவிட்டுக் 
 குறுக்குச் சுவர் எழுப்பி சாதியும் பேதமும் 
 இல்லையென முழங்கி நல்லிணக்கம் பேணி மானுடம் காப்போம்” 

 என்கின்றார். 

பிரச்சினைகளும், தீர்வுகளும் ஒரே கவிதையில் நமக்குக் கிடைக்கின்றன. மேலும், ’இவள் பெண்தானே என்று நினைத்தாயோ’ எனும் கவிதையில், பெண் இனத்திற்கான பதிலைத் தருகிறார். அக்கவிதை, “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொண்டால் வையகம் தழைக்கும் அறிவில் சிறக்கும் 

 அவளின் கனவுகள் அடுப்பில் எரிந்து கேலியாய் மாறிட பாவம் என்ன செய்தாயோ வார்த்தையில் பெண்ணியம் பேசிடும் வர்க்கமே தடைகள் நீங்கும் காலம் வருமே” 

 தாழை இரா. உதயநேசனின் கவிதைகள், சிந்தனைகளின் கொடையாகக் கவித்துவத்தோடு வீரியமான எழுச்சியைத் தருகின்றன. மலரின் மணமும், தீயின் சுடலும், காற்றின் வருடலும், மழையின் சுகமும், உளியின் செதுக்களும், ஆணியின் குத்தலும், சூறாவளியின் சுழலும் ஒரு நூலுக்குள் சாத்தியப்பட்டு நிற்கின்றன. 

 ’விடைதேடும் விடியல்’ கவிதைநூல் மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. தமிழ்க் கவிதைகளை எளிமையாகவும், அதே நேரம் ஆழமாகவும் படிக்க விரும்புபவர்கள் கவிஞர் உதயநேசனின் அனைத்துக் கவிதை நூல்களையும் வாங்கி இன்புறலாம். 

 காலத்தின் தேவையானதும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கவிஞரின் சிந்தனைகள் அமைந்திருக்கின்றன என்றால் அது மிகையாகாது. பாரதிசந்திரன் (முனைவர் செ சு நா சந்திரசேகரன்) 9283275782 chandrakavin@gmail.com நூல் : விடை தேடும் விடியல் ஆசிரியர்: தாழை. இரா. உதயநேசன் பதிப்பகம் : வசந்தா பதிப்பகம், சென்னை விலை: ரூ.150 பக்கம்: 140 

 நன்றி புக் டே மின்னிதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக