“கவிஞர் கீழை. நிலாபாரதியின் கவிதைகளில் நவீனத்துவம்.”
முனைவர் செ.சு. நா. சந்திரசேகரன்
தமிழ்த்துறைப் பேராசிரியர்,
வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி, ஆவடி
chandrakavin@gmail.com, 9283275782
“ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய இருப்பே முதன்மையும், அடிப்படையுமானது. தன் இருப்பு நிலையைக் கொண்டே மனிதன் பிறவற்றையெல்லாம் மதிப்பீடு செய்கின்றான். தனக்குள்ள பிரச்சனைகளைத் தானே தீர்த்துக் கொள்ளவேண்டும். மனிதன் தனக்கான வாழ்க்கையைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே இத்தத்துவத்தின் அடிப்படைக் கொள்கையாகும். தனிமனித இருத்தல் அனுபவத்தை மையப்படுத்திய உணர்ச்சிவாதம் என்றும் இதனைக் கூறலாம்.” 1 என்று இருத்தலியம் (existentialism) குறித்துக் கூறுவார் டென்மார்க் அறிஞர் சோரன் கீர்கேகார் (Soren Kierkegaard).
தற்காலக் கவிதைகளில், இருத்தலியல் கோட்பாட்டுக் கவிதைகள் பரவலாக எழுதப்படுவதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. அவ்வகையில், கவிஞர் கீழை.நிலாபாரதியின் கவிதைகளில் நவீனக்கோட்பாட்டுக்கவிதைகளும் அதிகளவில் காணப்படுவதை இக்கட்டுரையின் மூலம் காணலாம்.
இருத்தலியல் (Existentialism)
“இருத்தலியல் என்பது மனித இருப்பு பிரச்சினையை ஆராயும் தத்துவ விசாரணையின் ஒரு வடிவமாகும். இருத்தலியல் தத்துவவாதிகள் மனித இருப்பின் பொருள், நோக்கம் மற்றும் மதிப்பு தொடர்பான கேள்விகளை ஆராய்கின்றனர். இருத்தலியல் சிந்தனையில் உள்ள பொதுவான கருத்துக்கள் இருத்தலியல் நெருக்கடி, அச்சம் மற்றும் அபத்தமான உலகத்தை எதிர்கொள்ளும் கவலை மற்றும் சுதந்திரம், அத்துடன் நம்பகத்தன்மை, தைரியம் மற்றும் நல்லொழுக்கம் ஆகியவை அடங்கும் “2 என்று இருத்தலியம் குறித்துத் தமிழ் விக்கிபீடியா விளக்குகிறது
தற்காலக் கவிதைகளில், கவிஞர் கீழை நிலாபாரதி அவர்களின் கவிதைகள், மனித இருப்பின் பொருள், நோக்கம் மற்றும் மதிப்பு தொடர்பான கேள்விகளை ஆராய்வதை,
“எப்போதெல்லாம்
தனிமை அழைக்கின்றதோ
அப்பொழுதெல்லாம்
என்னைச் சந்தித்து விடுகிறேன்
மெளனங்களைக் குடைந்து “
( வற்றிடும் குளத்தின் கடைசி மீன்கள்)
இக்கவிதை விளக்குவதை உணர முடிகிறது., கவிஞரின் இருத்தலியலின் நெருக்கடியால் வெளிப்படும் உள்ளுணர்வுக் கவிதையாக,
“எனது பயணம்
மறுபடியும் ஒரு நாள்
இங்கு துளிரும்…
இன்னும் நிறம் மங்கிய
உக்கிரம் தணியும்.
அப்பொழுதொன்றில்
உன்னைத் தேடலின்
சாத்தியமுற்றதான
பெருவழியில், என்னைத்
தொடங்குவேன். “ ( இன்னும் சற்று நேரம் நீ இருந்திருக்கலாம்)
“உன்னைத் தவிர்த்து
நான் எழுதுவதற்கு
எல்லாமும் இங்கு
இல்லாமல் போகிறது” ( இன்னும் சற்று நேரம் நீ இருந்திருக்கலாம்)
எனும் கவிதையைக் காணலாம். தனக்குள்ள பிரச்சனைகளைத் தானே தீர்த்துக் கொள்ளவேண்டும். மனிதன் தனக்கான வாழ்க்கையைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். உலக நடப்புகளில் போதுமான சுய நலத்தன்மை சாயல் கொண்டிருக்க வேண்டும் என்பதான கவிதைகளில், காதல், காமம், அன்பு, நேசித்தல் என்பது பாடுபொருளாக அமைந்திருப்பதைக் காணலாம்.
உலகம் தொடர்ந்து கொண்டாடிக்கொண்டே இருக்கும் பேரூணர்வின் வெளிப்பாடு தான் காதல். எங்கும் பேரழகும், சொல்லவொணா பரவசமும், எல்லையற்ற சுகமும் காதல் உலகில் பரவிக்கிடக்கின்றன. காதலில்லா ஜீவன்கள் பிரபஞ்சத்தில் எத்துளியிலுமில்லை. காதலன்-காதலிக்கு இடையில் கவர்தலின் மலர்வுகள், பல நிலைகளில் நின்று வசிய விளையாட்டை எப்போதும் ருசித்துக் கொண்டேயிருக்கின்றன.
ஒட்டுமொத்த இலக்கியங்களின் ஊடாக மற்றுமின்றிப் பொருளற்ற ஒலிக்கோப்பான இசை வடிவத்திற்குள்ளும் காதலுணர்வு உள்புகுந்து “இசை ரொமாண்டிஸம்“(Musical Romanticism) ஆகி உயிர்நாடிக்குள் தைக்கின்றன. “லுட்விக் வான் பீத்தோவன், ஃபிரான்ஸ் ஷீபர்ட் போன்ற இசை மேதைகள் உணர்ந்த காதலை மிகச்சியாக இருத்தலிய வெளிப்பாட்டு உக்தியில் அப்படியே ரசிப்பாளருக்குக் காதலைத் தன்னிசையால் மடைமாற்றம் செய்தனர். அதே போல் படிப்பவருக்கு தம் கவிதைகளின் வாயிலாக மடைமாற்றம் செய்யும் கவிஞராகக் கீழை.நிலாபாரதியைக் காண முடிகின்றது.
நவீனக்கோட்பாட்டுவாதக் கவிதைகள்:
இவரின் கவிதைத் தொகுப்பிற்குள் காணலாகும் கவிதைகளுக்குள் மானிடசமூகத்தின் உணர்வுகள் கொட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. “மனம்“ சார்ந்த உளவியல் வெளிப்பாடுகள். தனிமை, காதல்துயர், போன்றவைகளோடு, அழகியல் வெளிப்பாடுகளும், மாயஎதார்த்தவாதப் பாணியிலும், இருத்தலியப் பாணியிலும், நவீனக்கோட்பாட்டுவாதப் பாணியிலும் கூறப் பெற்றிருக்கின்றன.
கவிதைகள் நதிநீரைப் போல் சலசலப்புடன் வாசகன் மனதில் ஊடுருவி என்னமோ செய்கின்றன. காதல் முற்றித் தலைக்கேற எழுதப் பெற்ற வார்த்தைகளால் வானில் பறக்கும் ஏகாந்த அனுபவத்தை வாசகனாலும் பற்றிப் பறக்க முடிகின்றது. கவிஞர் நினைத்த பரவசமோ, துயரமோ, ஏக்கமோ, திளைப்போ எந்த எல்லையையும் வார்த்தைகள் அழைத்துச் சென்று அமர வைத்து விடுகின்றன.
”இறகுச் சூட்டின் தகிப்பில்
மூர்ச்சையானாய்…
உதடுகளால் முத்தமிட்டது
உன் கண்கள்
கசிந்தயிருளை
குறை வெளிச்சமெனவும்
கற்றுத் தந்தது நளினம்…
நீ வராத கதவுகளின்
பின்னிருந்து
கனவுகளில் வழிந்தாய்…
இப்பொழுதும் புறாக்களின்
உதிரும் இறகுகளிலிருந்து
பறக்கச் செய்கிறேன்
உனை” ( வற்றிடும் குளத்தின் கடைசி மீன்கள்)
கவிஞரின் வார்த்தைப் பிரயோகங்களின் சிறப்பை இக்கவிதை மூலம் அறியலாம். கண்களால் பார்க்கத் தான் முடியும். அது கூடத் தலைவனைத் தொட விரும்பியது போலும், இரவின் தொடக்கத்தில் உள்ள இருள் என்பதால், அது கசிந்த இருளாகி அதைக் காதலியின் நளினம் குறை வெளிச்சம் தானேயிது எனக் கற்றுத் தந்ததாம். இதனூடாக காதலி வராத பொழுதுகளில் நினைவில் வந்து வந்து நிறைந்து பொங்கி வழிகிறதாம் நினைவுகள். அது கனவாம், சிறகுகளில் பறப்பதுவோ, பறக்க வைப்பதுவோ காதலியோ, கவிஞனோ அல்ல. வாசகனும் தான் படிப்பவர்களையெலாம் பறக்க வைக்கும் உணர்வுப் போதை ஏற்றிக் கிறங்கிப் போகும் கவிதையிது. இதுபோலத் தான் முக்கால்வாசிக் கவிதைகள் இத்தொகுப்பிலுள்ளன.
படிமங்கள், உருவகங்கள், உவமைகள் ஆகியவைகள் கவிஞரின் கவிதைகளில் சிறப்பாகச் கையாளப் பெற்றுள்ளன. படிமம் சிறக்கப் பாடியக் கவிதைகளில்,
“என் பிராத்தனைகள்
தீரவில்லை
சுடர் விட்டு சுடர் விட்டு
முன்னிலும்
பிராகாசிக்கத் துவங்குகிறது….”
(வற்றிடும் குளத்தின் கடைசி மீன்கள்)
இக்கவிதை அழகுற காதலை வெளிப்படுத்துகிறது. காதல் வேண்டுதல்கள் திரிபோல் சுடர் விட்டு சுடர் விட்டு பிராகசிக்கின்றன என்கின்றார் படிமமாய். “முன்னிலும்“ எனும் வார்த்தை கவிதையை இன்னும் மெருகேற்றிப் பொருளை ஆழப்படுத்துகின்றது.
“புலன்களை மீறிய மாய அனுபவங்களை யதார்த்தத்தைச் சித்தரிப்பதைப் போலவே துல்லியமான தகவல்களுடனும் காட்சித் தன்மையுடனும் சித்திக்கும் எழுத்து முறை, அதாவது யதார்த்தத்தில் மாயமும் கலப்பது. இவற்றில் சொல்லப்படும் மாயங்கள் மனத்திபுகளோ, மூடநம்பிக்கைகளோ அல்ல. அவை குறியீட்டுத் தன்மை கொண்டவை“ 3 என்பார் எழுத்தாளர் ஜெயமோகன். இவ்வாறு மாயஎதார்த்தவாதமாகக் கவிஞர் கீழை நிலாபாரதியின் பல கவிதைகள் திறம்பட எழுதப் பெற்றுள்ளன. அவ்வாறான கவிதைகளில் ஒன்றாக,
“துக்கங்களால்
நெய்யப்பட்டவனின்
இரவுகள்
தினம் கிழிசல்களாய்
தொங்குகிறது…
வானத்தின்
அடர்த்தியெங்கும்
கறுமையின் சூதுக்கள்…
உன் உறகடகத்தை
நீ பிடுங்கியெறிந்தபோது
நான் வானத்தில் ஒளிந்து கொண்டேன்”
(வற்றிடும் குளத்தின் கடைசி மீன்கள்)
எனக் கவிதையில் இன்னும் சில காட்சிகளை விளக்கும் மாய எதார்த்தம் காட்டும் கவிதையாக இக்கவிதை உள்ளது. இதே போல் நேர்த்தியான அழகியல் கோட்பாட்டுக் கற்பனையில் ஒரு காட்சியை உணர்வாக்கும் பொழுது,
“கண்களில் புகுந்து
ஒருவித வண்ணப்
பாய்ச்சலால் முழ்கடித்து
மறுபடியும்
நான் கூடு திரும்பும்
உனது அறையெங்கும்
ஒரு ஊதுபத்தியின்
வாசமென…. ( வற்றிடும் குளத்தின் கடைசி மீன்கள்)
என்கின்றார். பார்வையும், நினைவுகளும், வாசனையுமாய் காட்சிகளுக் கிடையிலான தொடர்பிலா இடைவெளியும், கவிதையின் நவீனக் கோட்பாடுகளை விளக்கி நிற்கின்றன.
கவிஞர் கீழை நிலாபாரதியின் கவிதைவெளி காதல் உலகின் அல்லது காதல் அல்லாத உணர்வு வெளியின் நுணுக்கங்களைக் காட்சிப்படுத்தும் அழகான திரைப்படங்களாகக் கண்முன் விரிகின்றன. ஒவ்வொரு வார்த்தைகளின் அடியிலும் அகண்ட நீரோடைகள் காதல் பயிர் செய்கின்றன. அழகியல் பார்வையில் உள்ளுணர்ந்து கொள்ளும் பந்த, பாசங்களை உணர வழிவகை செய்வனவாகவும் சில கவிதைகள் விளங்குகின்றன. மௌனம் எனும் அசாத்திய சூரனை பல திசைகளிலிருந்தும் படமெடுத்துப் பதிவு செய்த கவிதை வரிகள் அபூர்வமானவையாகும்.
இக்கவிதைகளில் உள்ள வார்த்தைகள் இசைப் பாடலுக்காக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் வார்த்தைகளாகக் காத்திருக்கின்றன. கவிஞரின் கவித்துவம் உலகம் வெல்லும். உணர்வுகளின் தன்னிச்சையான வழிதலாக மகுடம் சூட்டும் கவிதைகளாக இருந்து நவீனக் கவிதைப்போக்குகளைக் கொண்டிருக்கின்றன.
அடிக்குறிப்புகள்:
https://www.suyaanthan.com/
2016/12/blog-post_77.html பார்வை நாள்: 04/10/2025 https://ta.wikipedia.org/wiki/ இருத்தலியல் . பார்வை நாள்: 02/10/25
https://thiru.xyz/blog/je-mo-
jargons/ பார்வை நாள்: 02/10/25
